😔🤜🤜🤜🤽🐢 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாமெல்லாரும் கிறிஸ்துவை நம்புகிறோம். அதனால்தான் எமக்கு விசுவாசிகள் என்று பெயர். ஆனால் இந்த உலகில் கிறிஸ்தவர்களாக வாழும் நாம் நம்முடைய நம்பிக்கை சரியானதுதானா என்று பரிசோதிக்க வேண்டியுள்ளது. நாமெல்லாரும் கிறிஸ்துவை தான் விசுவாசிக்கிறோம். ஆனால் சரியான முறையில் அவரை விசுவாசிக்கிறோமா என்பதே கேள்வி.
ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்தவனாக வரும்போதே அவனுக்குள் தவறான நம்பிக்கைகள் திணிக்கப்பட்டு விடுகின்றன. நீ கிறிஸ்தவன் ஆகிவிட்டால் உன்னுடைய வாழ்வில் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை, என்ற சிந்தனை அந்த மனிதனுக்குள் திணிக்கப்பட்டு விடுவதால் அவன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே போராட்டங்கள் வரும்போது அவனுடைய நம்பிக்கையை குறித்து சந்தேகப்பட ஆரம்பிக்கிறான்.
வேதாகமத்தில் காணப்படும் பரிசுத்தவான்கள் அனைவரும் கிறிஸ்துவை குறித்தும் இரட்சிப்பை குறித்தும் சரியான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் நம்பிக்கை சிறந்த உதாரணமாகும். இதை குறித்து நாம் தானியேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இவர்கள் ராஜாவை பார்த்து தங்கள் சரியான நம்பிக்கையை அறிக்கையிட்டார்கள். அதாவது “தேவன் எங்களை தப்புவிக்க வல்லவர். அவர் தப்புவித்தாலும் சரி, தப்புவிக்காவிட்டாலும் சரி நாங்கள் எங்கள் தேவனை மட்டுமே பணிந்து கொள்வோம்” என்பதே அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது.
கர்த்தர் எனக்கு நன்மை செய்தால் மட்டுமே அவரை நம்புவேன். என்பது தவறான நம்பிக்கை. ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நம்மில் பலருடைய நம்பிக்கை தவறானதாகவே இருக்கின்றது. நம்மில் ஒருவருக்கு வியாதி ஏற்பட்டால் அல்லது ஒரு சிக்கலில் நாம் மாட்டிக் கொண்டால் நம்மை சுகமாக்கும் படி அல்லது விடுவிக்கும்படி தேவனை நோக்கி கதறுகிறோம். கொஞ்சம் தாமதமாகும் பட்சத்தில் எங்களுடைய நம்பிக்கை கேள்விக்குறியாகிறது. உடனே சந்தேகப்பட ஆரம்பிக்கிறோம். இப்படியான பிரச்சினைகளால் தேவனை சந்தேகித்து பின்வாங்கி போனவர்களும் உண்டு.
இரட்சிக்கப்பட்டு விடுவதால் ஒருவருடைய வாழ்வில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று வேதத்தில் எங்கும் இல்லை. இவ்வுலகத்தில் வாழும் வரையும் பல உபத்திரவங்கள், போராட்டங்கள் உண்டு. தேவனுக்காக தங்களை முழுவதும் அர்ப்பணித்து வாழுகிற மக்கள் கூட பலவிதமான உபத்திரவங்களை அடைந்தார்கள். உதாரணமாக யோபு தன்னுடைய வாழ்வில் சந்தித்த கொடுமையான உபத்திரவங்கள் மத்தியிலும் அவர் தன்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை. ஆபேல் தேவனுக்கு பிரியமான பலிகொடுத்தது நிமித்தம் கொலை செய்யப்பட்டார். யேசபேல் காலத்து தீர்க்கதரிசிகள் கொலை செய்யப்பட்டார்கள். தேவனுக்கு உண்மையான ஊழியம் செய்த பவுல் கூட துன்பங்களை அனுபவித்தார். இயேசு கிறிஸ்து “உலகத்தில் இனிமேல் உங்களுக்கு எந்த உபத்திரவங்களும் இல்லை” என்று சொல்லவில்லை மாறாக உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன். என்று சொன்னார் .
நான் தேவனுக்கு பிரியமானவனாய் வாழ்வதனால் எந்த உபத்திரவமும் எனக்கு வராது என்று நம்புவது ஒரு சரியான நம்பிக்கை அல்ல. ஆனால் நான் கிறிஸ்தவனாக வாழ்வதனால் எனக்கு பல உபத்திரவங்கள் வரும் இருப்பினும் நான் அவைகளை மேற்கொண்டு ஜெயம் எடுப்பேன் என்பதுவே சரியான நம்பிக்கையாகும். எந்த பிரச்சினையும் வராதபடி என்னை கிறிஸ்து காப்பார; என்பதல்ல, அவர; என்னை காக்கா விட்டாலும் அவரே தெய்வம் என்று நம்புவதே கிறிஸ்துவில் நாம் வைக்க வேண்டிய சரியான நம்பிக்கையாகும்.
இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை புதிதாக இரட்சிக்கப்பட்டு சபைக்கு வரும் விசுவாசிகளுக்குள் நாம் புகுத்தினால் எந்த போராட்டமான சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை விட்டு பின்வாங்கி போக மாட்டார்கள்.