ஹென்றி மார்ட்டின்: 1781 - 1812
ஆண்டவருக்காக நான் எரிந்து போகட்டும் என்று கூறிய ஹென்றி
மார்ட்டின் 1781-ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திலுள்ள கார்ன்வல்
என்ற இடத்தில் பிறந்தவர். செல்வச் செழிப்புள்ள வியாபாரியின் மகனான இவர் சிறு
பிராயத்திலேயே சகல வசதிகளையும் பெற்றிருந்தார். பளிப்படிப்பிற்குப் பின், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நுழைந்த இவர் கணிதத்தில் முதல்
மாணவனாகத் தேறினார். வாலிப வயதில் ஆண்டவரைத் தேடாமல் வாழ்ந்து வந்த இவரை அன்புத்
தந்தையின் மரணம் ஆவிக்குரிய தேடலை ஏற்படுத்தியது. இவரது சகோதரியின் ஜெபங்களும், போதகரின் ஆலோசனைகளும், டேவிட் பிரய்னார்ட் எழுதிய புத்தகமும் ஹென்றி மார்ட்டின் தன்னை
ஆண்டவரிடம் பூரணமாக அர்ப்பணிக்க உதவியது. ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்து வந்த
ஹென்றி மார்டினை, டேவிட் பிரய்னார்ட், வில்லியம் கேரி போன்ற மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு கவர்ந்தது.
அதனால் தானும் ஒரு மிஷனெரியாகச் செல்ல வேண்டுமென வாஞ்சை கொண்டார்.
மிஷனெரிப் பணிக்காக, தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ள ஒவ்வொரு நாளும் பலமணி நேரத்தை
ஜெபத்திலும் தியானத்திலும் செலவழித்தார். இந்த உலகத்தை வெறுத்து, தேவனை மட்டும் மகிமைப்படுத்தும் நோக்கம் கொண்டவனாக தான்
இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார். அவர் திருமணம் செய்ய விரும்பிய லிடியா என்ற
பெண், மிஷனெரியாக வர விருப்பம்
கொள்ளவில்லை என்பதை அறிந்ததும் திருமணத்தை கைவிட்டுவிட்டு தேவ அழைப்புக்குக்
கீழ்ப்படியத் தீர்மானித்தார்.
நெருங்கிய நண்பன் ஒருவனின் உதவியுடன் பிரிட்டிஷ் கிழக்கிந்திய
கம்பெனியின் தலைவரான சார்லஸ் கிரண்ட் என்பவரைச் சந்தித்தபோது மார்ட்டினை
கிழக்கிந்தியக் கம்பெனியின் போதகராக நியமித்து இந்தியாவிற்கு மிஷனெரியாக அனுப்ப
வாக்குப் பண்ணினார்.
அவரது வாக்குப்படி 1805-ம்
ஆண்டு மார்ட்டின் ஒரு ஆங்கிலிக்கன் போதகராகக் குருப்பட்டம் பெற்றார். அடுத்த மாதமே
கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். ஒன்பது மாத
கப்பல் பிரயாணத்திற்குப் பிறகு இந்தியா வந்தடைந்தார்.
அப்போது, அவருக்கு வயது இருபது நான்கு.
கல்கத்தாவில் கரையிறங்கிய மார்ட்டின் ஆயிரக்கணக்கான குழந்தைகளை பட்டினி
மரணத்திலிருந்து காப்பாற்றி ஆதரித்து வரும் டேவிட் பிரவுனை
சந்தித்து, அவருடன் தங்கியிருந்தார். சில
வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் தன்னுடைய தோட்டத்தில் உட்கார்ந்திருந்தபோது தெய்வ
சிலைகளைத் தேரோட்டமாக இழுத்துவரும் பெரும் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தின்
நெருக்கடியில் ஒரு சிறுவன் அந்த தேரின் சக்கரத்தின் அடியில் விழுந்து நசுங்கியபோது
மார்ட்டின் நிறுத்துங்கள் என்று உரத்த சத்தமாகக் கத்தினார். ஆனால் அதை யாரும்
கண்டு கொள்ளவில்லை. மேலும் சிலர் தானாகவே அந்த சக்கரத்தின் அடியில் விழுந்து
தங்களைப் பலியாக்கிக் கொண்டதையும் பார்த்து அதிர்ந்து போனார். இவர்களது
மூடநம்பிக்கையை எப்படி மாற்றுவது? என்று அதிக பாரம்கொண்ட
அவர் தற்கால மிஷனெரி ஊழியத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட வில்லியம்கேரியிடம்
சென்றார். பதிமூன்று வருட மிஷனெரி அனுபவம் கொண்ட மூத்த மிஷனெரியான கேரி மூலம்
ஆண்டவரது வார்த்தை மட்டுமே மக்களை மூடப்பழக்கவழக்கத்திலிருந்து விடுவிக்க முடியும்
என்பதை அறிந்துகொண்டார். டேவிட் பிரவுனின் தோட்டத்தின் அருகிலுள்ள ஆற்றங்கரையில்
கணவனது இறந்த உடலுடன் விதவையான மனைவியும் உயிருடன் எரிக்கப்படுவதையும் அடிக்கடி
மார்டின் பார்த்தார். இந்த மூடநம்பிக்கைகள் மாறவேண்டுமாயின் விரைவில் இந்திய
மக்களின் கையில் சத்திய வேதம் கொடுக்கப்படவேண்டும் என எண்ணினார். அதற்கென ஹென்றி
மார்ட்டின் வங்காளம், சமஸ்கிருதம், பாரசீகம், இந்துஸ்தான் அராபிய மொழிகளைக்
கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
பாட்னா என்ற இடத்தில் அரசாங்க சபைப்போதகராக, காலை நேரங்களில் பணி புரிந்துவிட்டு சாயங்கால நேரத்தில் வேதத்தை
இந்துஸ்தானி, பாரசீகம், அராபிய மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அதோடு இந்தியர்களை
வேதத்தை கற்கச்செய்ய சிறு பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பள்ளிகள் அமைத்து
எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். ஊழியம் நிமித்தமாக மார்ட்டின் பல மைல் தூரம்
நடந்து சென்றார். அவரது உயர் அதிகாரிகள் நீங்கள் இப்படி அதிக வெப்பமான இந்தக் கால
சூழ்நிலையில் தெருவில் நடக்கக் கூடாது. அது வெள்ளை மனிதரான உங்களுக்கு மதிப்பும்
இல்லை என்றனர். அதற்குப் பதிலாக மார்ட்டின் என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்போதும்
நடந்து சென்றே ஊழியம் செய்தார். நான் அவருடைய ஊழியக்காரன் மட்டுமே என்றார்.
அன்றிருந்து இந்திய மக்கள் தொகையான அறுபது மில்லியன் மக்களுக்கு இந்த நற்செய்தி
கிடைக்க வேண்டும் என்ற பாரத்துடன் இந்தியில் இரவு நேரங்களில் புதிய ஏற்பாட்டை மொழி
பெயர்த்தார். ஒரு அதிகாரத்தை மொழி பெயர்க்க 10 மணி நேரம் ஆனது. கடின உழைப்பின் பயனாக இந்தி மொழியில் புதிய
ஏற்பாடு வெளியிடப்பட்டது. அதற்குப்பின் அராபிய மொழியில் வேதம் இருந்தால் இந்தியர்
மட்டுமல்ல அராபியர், பார்ஸிகன், சீரியர், சீன, ஆப்பிரிக்கத் தேசத்தின் பெரும் பகுதியினர், மற்றும் துருக்கி மக்களுக்கு நற்செய்தியைக் கையில் கொடுக்கமுடியுமே
என்ற சவாலுடன் அராபிய பாரசீக மொழிகளளக் கற்று அதில் வேதத்தை மொழிபெயர்க்க
ஆரம்பித்தார்.
தரித்திரருக்கு சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்ற வசனத்தின்படி, ஒரு சமயம் 400 பிச்சைக்காரர்களை அழைத்து அவர்களுக்கும் நற்செய்தியைப்
பிரசங்கித்தார். அவர்களில் பலர் சாதுக்கள், பணம், அரிசியை எதிர்பார்த்து வந்த
இவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட்டனர். சில வாலிப முகமதிய சகோதரர்கள்
இந்த வெள்ளை மனிதன் பிச்சைக்காரர்களுக்கு என்ன சொல்கிறார் என்று ஒளிந்திருந்து
கேட்டு கிறிஸ்துவை அறிந்துகொண்டனர். பல முகமதியருடன் நெருங்கிப்பழகி அளவளாவியும்
சுவிசேஷத்தைப் போதித்தார். முகமதியர்கள் மத்தியிலும் சிறந்த ஊழியம் செய்தார். அதன்
பயனாகச் சில முகமதியர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, சிறந்த கிறிஸ்தவத் தொண்டர்களாகப் பணியாற்றினார்கள். தீனாப்பூரில்
ஐந்து பள்ளிக்கூடங்களை நிறுவினார். இதன் மூலம் அநேக ஏழைப் பிள்ளைகள் படிப்பறிவு
பெற்றனர். இவருடைய முயற்சியால் ஒரு ஆலயம் கட்டப்பட்டு 1806 ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிறிஸ்துவின்
உவமைக்கு விளக்கம் ஒன்றை இந்தியில் எழுதி வெளியிட்டார். ஜெபப்புத்தகத்தையும்
இந்தியில் மொழிபெயர்த்தார்.
மார்ட்டினின் கடின உழைப்பும், இந்திய தெருக்களின் புழுதியும் அவரது நுரையீரலை பாதிக்க
ஆரம்பித்தன. இந்தியாவின் வெப்பமும் அவரை அதிகம் பாதித்தது. ஓய்வே எடுக்காமல் அதிக
கடினமாக அவர் உழைத்தார். பதினெட்டு மாதத்தில் அராபிய பாரசீக மொழியில் புதிய
ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். அவரது உடல் அதிக பெலவீனப்பட்டபோது, டாக்டர்கள் அவரிடம் நீர் உடனே இந்தியாவை விட்டு வெளியேறி உமது
தாய்நாடு செல்லவேண்டும் என்றார்கள். ‘இந்தியாவை
விட்டு வெளியேறி பாரசீகம் போக விரும்புகிறேன். நான் மொழி பெயர்த்த பாரசீக புதிய
ஏற்பாட்டை அதே மொழிபேசும் மக்களுக்குக் கொடுத்து அதைத் திருத்தம் செய்ய
விரும்புகிறேன்’ என்றார். டாக்டரோ ‘நீர் அங்கு வாழவே முடியாது. நரகத்தைப்
போன்று அதிக வெப்பம் உள்ள பகுதி அது’ என்றார். தேவனுக்காக
பெரிய காரியத்தைச் செய்வதே எனது நோக்கம் என்று கூறிவிட்டு பெர்சியாவை நோக்கிப்
பயணமானார் அவர்.
இந்துமகா சமுத்திரத்தைக் கடந்து பெர்சியாவின் புஷ்ஷிர் என்ற இடத்தை
அடந்தபோது எரிபந்தமாக எரிகிற அந்த வெப்பமான சூழ்நிலை அவருக்கு அதிகத் தலைவலியைத்
தந்தது. பெர்சியாவின் பண்டிதர்களிடம் தனது புதிய ஏற்பாட்டைக் கொடுத்தபோது, ஒரு பள்ளிச் சிறுவன் இதனை மொழி பெயர்த்துள்ளதுபோல இருக்கிறது என்று
சொல்லி அங்குள்ள பெரிசிய நண்பர்கள் அதனைத் திருத்தம் செய்ய முன் வந்தனர். பலமணி
நேரம் அவர்களுடன் தரையில் உட்கார்ந்து திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார்.
அங்கு சிலவேளைகளில் வெப்பம் 126 டிகிரியை தொட்டது. வெப்பம்
தாங்கமுடியாமல் ஷிராஜ் என்ற மலைபாங்கான நகரில் 1811-ம்
ஆண்டு சென்று தங்கி, தனது பணியைத் தொடர்ந்தார். ஒன்பது
மாதங்களின் கடின உழைப்பினால் ஒரு நேர்த்தியான பாரசீக மொழி புதிய ஏற்பாட்டை
வெளியிட்டார். பெர்சிய வேதாகமத்தை பெரிசியாவின் அதிபதி ஷாவிடம் கொடுத்து ஒப்புதல்
பெற விரும்பினார். 600 மைல் தொலைவிலுள்ள டேகரான் என்ற இடத்தில் அந்த அதிபதி இருந்தார்.
மார்ட்டின் அதிக பெலவீன சரீரத்துடன் 30 நாட்கள் பயணப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றார். அதிபதியை சந்திக்க
அங்கு இருந்த வைசிராய் அனுமதி மறுத்துவிட்டார். டெப்பிரிஜ் என்ற இடத்திலுள்ள
பிரிட்டிஷ் தூதுவரிடம் கொடுக்க அனுமதி தரப்பட்டது. சுமார் 400 மைல் தூரத்தை 30 நாட்கள் பயணம் செய்து டெப்பிரிஜ்
என்ற இடத்தை அடைந்தார். அதிக காய்ச்சலுடன் மரணத்தை நெருங்கிவிட்ட மார்ட்டின்
பாரசீக புதிய ஏற்பாட்டை பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்புதலுக்காக பத்திரமாக
ஒப்படைத்தார். அதன்பின் தனது சரீர சுகத்திற்காக இங்கிலாந்து திரும்ப
முயற்சித்தபோது கான்ஸ்டாண்டி னோபிளிலிருந்து 250 மைல் தூரத்திலிருந்த தோகட் என்ற இடத்தில் தனது 31-ம் வயதில் (1812-ம் ஆண்டு)
தேவனுடைய இராஜ்யம் சென்றடைந்தார்.
தரிசனங்களை தரிசாக மாறாவிடாது காக்கும் தரிசன வீரர்கள் நீண்ட
நாட்கள் வேண்டுமானால் வாழாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் நிறைவேற்றி முடித்த பணி
வாழையடி வாழையாக, நின்று மக்களை இயேசுவின் பக்கம்
திருப்பவே செய்கிறது. ஆம்! ஹென்றி மார்ட்டின் மொழிபெயர்த்த வேதாகமம் இன்னும்
அநேகரை தேவனண்டை திருப்பும் பணியை ஓய்வு ஒழிவு இன்றி செய்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..