Bro.Stanley
கண்கவரும் அற்புதங்கள் அபூர்வம் ஏன்? Bro.Stanley
அற்புத சுகமளிக்கும் கூட்டங்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. ஆனால் அற்புதங்கள் உண்மையில் நடைபெறுகின்றனவா என்றால் அது பெரியக் கேள்விக்குறியாக உள்ளது. அனைவரும் அற்புதங்களைக் கண்டு ஆச்சரியக்குறியை அல்லவா இடவேண்டும்??!!! ஏன் அற்புதங்கள் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் நடப்பதில்லை. ஒரு அலசல் கட்டுரை மட்டுமல்ல அற்புதங்கள் நம் வாழ்வில் நடக்க நம்மை உற்சாகப்படுத்தும் உண்மைக் கட்டுரையும்
ஆகும்.
ஒரு சிலர் சுகம்பெறுகின்றனர். ஆனால் கைப்பிரதிகளிலும் சுவரொட்டிகளிலும் செய்திமடல்களிலும் இக் கூட்டங்களைக் குறித்து நாம் பிரமாதமாக எழுதுவதெல்லாம் வெறும் வாய்ஜாலம்தான் என்பதைக் கிறிஸ்தவரும் கிறிஸ்தவரல்லாதோரும் நன்கறிவர். எடுத்துக்காட்டாக, உலக புகழ் பெற்ற சுகமளிக்கும் சுவிசேஷகர் ஏறத்தாழ அத்தனைபேரும் சென்னை நகரில் தங்கள் கூட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால் இன்றுவரை பொதுமக்களுக்கு நன்கு தெரிந்த கை,கால் சூம்பிய ஒரு தொழுநோயாளியோ, பிறவிச் சப்பாணியோ, பிறவிக் குருடனோ இக் கூட்டங்களில் பூரண சுகம் அடைந்ததாகத் தெரியவில்லை.
வெளியரங்கமான ஒரே ஒரு அற்புதம் எருசலேம் முழுவதையும் கலக்குவதற்குப் போதுமானதாய் இருந்தது (அப். 3ம் 4ம் அதிகாரம்). சுவிசேஷத்தின் எதிரிகள் கூட அதைக் கண்டும் காணாமலும் இருக்க முடியாதபடி இவ்விதம் அறிக்கையிட்டனர். எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே. அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாதே. ஆகிலும் இவை அதிகமாய் ஐனத்திற்குள்ளே பரவாதபடிக்கு..... அவர்களை உறுதியாய் பயமுறுத்தவேண்டும் (அப்.4:16-17). பரீட்சைக்கு நிற்கமுடியாத விளக்கங்களினால் நம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதை விட்டு நிலமையைத் திறந்த மனதோடு சந்திப்போம். வேதத்iதைக் கவனமாய்ப் படித்தால் கண்கவரும் அற்புதங்களின் அபூர்வத்திற்கு ஐந்து காரணங்கள் இருக்கலாமெனத் தெரிகிறது.
1. நாம் சுத்த சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில்லைநமது செய்தி கலப்படமாகிவிட்டது. பெந்தேகொஸ்தேயல்லாத சுவிசேஷகர்களுக்குச் செய்தி உண்டு. அற்புதங்கள் கிடையாது என்று அவர்களைப் பெந்தேகொஸ்தே சுவிசேஷகர்கள் அசட்டை பண்ணியதுண்டு. பெந்தேகொஸ்தே அல்லாதவரோ இவ்விதப் பகடிகளையெல்லாம் கவனியாது உத்தமமாய் பிரசங்கித்துக்கொண்டே இருந்தனர். நாளாவட்டத்தில் பெந்தேகொஸ்தேயினருக்கு இரட்டை நஷ்டம் ஏற்பட்டது. அவர்களது பெரும்பாலான கூட்டங்களில் இப்பொழுது செய்தியும் இல்லை, அற்புதமும் இல்லை. சத்து இல்லை, சத்தம் மட்டும் உண்டு. ஆவியில்லை, ஆர்ப்பாட்டம் மட்டும் உண்டு. கூட்டத்திற்கு வருகிறவர்கள் செய்தி பிரசங்கிக்கப்படும் முதல் பகுதியைவிட வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் கூட்டத்தின் இரண்டாம் பகுதியையே அதிகமாய் எதிர்நோக்குமளவிற்குத்தான் நம்முடைய சுகமளிக்கும் கூட்டங்களின் விளம்பரங்கள் அமைகின்றன. அன்றோ மக்கள் முதலாவது இயேசுவைக் கேட்கவும் அடுத்து அவரால்க் குணமடையவும் அவரிடம் கூடினர்ர்கள் (லூக்.5:1,15). சுகம் அடைவது எப்படி என்பது சுவிசேஷச் செய்தி அல்ல. பூரண சுத்த சவிசேஷத்தைப் பவுல் 1.கொரிந்தியர்; 15:1-5 இல் தெளிவாக வரையறுத்துள்ளான். கிறிஸ்து வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு...... மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து..... தரிசனமானார். இந்த வார்த்தையே நமது செய்தியாய் இராவிடில் நமது பிரசங்கத்தை அடையாளங்களினால் உறுதிப்படுத்த தேவன் கடமைப்பட்டவரல்ல (மாற்.16:20 ; ரோ. 10:8-10).
2.நாம் குழுக்களாக செயல்ப்படுவதில்லை
வெளியரங்கமான அற்புதங்கள் நடக்கவேண்டுமானால் குழுச் சிந்தையுடன் செயல்ப்படுவது எவ்வளவு அவசியம் என்பதை அப். 3ன் அற்புதம் திரும்பத்திரும்ப அடிக்கோடிடுகிறது. பேதுருவும் யோவானும் (அப்.3:1) பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு (வச 3) பேதுருவும் யோவானும் எங்களை நோக்கிப் பார் என்றார்கள் (வச 4). குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில் (வச 11) பேருது ஐனங்களை நோக்கி, நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? என்றான் (வச 12). பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு (அப்.4:13) துர்ப்பாக்கியமாக சூப்பர் ஸ்டார் மனப்பான்மையே நம்மை ஆட்டிப்படைக்கிறது. புதிய ஏற்பாடோ எப்பொழுதும் சரீரத்தின் கூட்டுஊழியத்தையே வற்புறுத்துகிறது. எல்லா வரமும் பெற்றவர்; எவரும் இல்லை. ஒருவரமும் பெறாதவர் எவரும் இல்லை. விசுவாசம், சுகமளிப்பு, அற்புதங்களைச் செய்யும் சக்தி ஆகிய வரங்கள் இணைந்து செயல்ப்படும்போதுதான் வெளியரங்கமான அற்புதங்கள் நடைபெறும். 1.கொரி.12ல் உள்ள பட்டியலின்படி ஒரே பிரசங்கியாருக்கு இம் மூன்று வரங்களும் சேர்ந்து இருக்குமா என்பது கேள்விக்குரியது. வேறொருவனுக்கு விசுவாசமும், வேறொருவனுக்கு குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும்..... அளிக்கப்படுகிறது (வச 9-10). அப்படியே அடிக்கடி சொல்லப்படும் மாற்கு 1617-20 இதிலுள்ள பன்மையைக் கவனிக்க. விசுவாசிக்கிறவர்கள்..... துரத்துவார்கள்..... பேசுவார்கள்..... எடுப்பார்கள்...... கைகளை வைப்பார்கள்...... பிரசங்கம்பண்ணினார்கள்...... அவர்களால் நடந்த அடையாளங்கள். அற்பத சுகமளிப்பு ஒரு கவர்ச்சிகரமான ஊழியமாகும். நம்மெல்லாரிலும் மிகுந்த பக்தி உள்ளவன்கூட தனித்துச் செயல்ப்பட்டால் மக்கள் தரும் புகழைச் சமாளிக்கத் திராணியற்றவன் என்பது தேவனுக்குத் தெரியும்!
3.நாம் தேவ மகிமையைத் திருடுகிறோம்தேவன் வைராக்கியம் உள்ளவர். அவர் தமது மகிமையை எவரோடும் பகிர்ந்துகொள்ளார். மக்கள் பேதுருவையும் யோவானையும் நோக்கி ஓடியபோது, நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்போபு என்பவர்களுடைய தேவன்...... இயேசுவை மகிமைப்படுத்தினார் என்பதே அவர்களது உடனடிப் பதிலாய் இருந்தது (அப.3:12-13 ). பவுல், பர்னபா ஊழியத்திலும் இதுபோன்றதோர் அற்புதம் நடந்தது (அப்.14:8-18 ). அங்கும்கூட மக்கள் அப்போஸ்தலருக்கு மாலையிட்டு அவர்களுக்குப் பலிசெலுத்த விரும்பியபோது அப்போஸ்தலருடைய எதிர்ச்செயல் தீவிரமாய் இருந்தது. அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய், மனஷரே ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்றனர்; (வச 14-15). ஆதிச் சீடருக்கு ஒரேயொரு நோக்கம்தான் இருந்தது. அது தேவமகிமை ஆகும். நமக்கோ பல்வேறு நோக்கங்கள் உண்டு. நம்மைப் பிரமாதமாக அறிமுகப்படுத்த நாம் இச்சிக்கிறோம். நமது சொந்த ஊழியங்களை விரிவாக்க எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடுவதில்லை. ஒருவேளை போட்டோவும், வீடியோவும் குறையுமானால் அற்புதங்கள் கூடுவதற்கு வாய்ப்புண்டு. பிதாவாகிய தேவன் இயேசுவை நம்பி அவ்வளவு வல்லமையைக் கொடுத்திருந்தார். ஏனென்றால் தம் குமாரன் ஒருபோதும் அதைச் சுயதிருப்திக்காகவோ, சுயமகிமைக்காகவோ துர்ப்பிரயோகம் செய்யமாட்டார் என்று பிதா அறிந்திருந்தார்; (மத்.4:3-6 ; 9:8 அப்.10:38 ). தேவனை நாம் நம்பும்போது கூடாதது ஒன்றுமில்லை என்பது உண்மைதான். ஆனால் தேவன் நம்மை நம்பமுடியுமா என்பதுதான் கேள்வி!
4.நமது நிகழ்ச்சிகளை வியாபாரமயம் ஆக்குகிறோம்.வசனத்திற்கு விரோதமான காணிக்கை சேகரிப்பு முறைகளையெல்லாம் பெரும்பாலும் கண்டுபிடித்தது சுகமளிக்கும் சுவிசேஷகர்கள் தான். (இதை யார் மறுக்கமுடியும்?) விசுவாசத்தையும் வல்லமையையும் குறித்து மக்களுக்கு பிரசங்கிக்கிறோம். நாமோ நமது திட்டங்களுக்குப் பிச்சை எடுத்துக்கொண்டும், கடன் வாங்கிக்கொண்டும் அலைகிறோம். நம்முடைய ஊழியங்களில் கணக்கொப்புவிப்பு என்ற பேச்சே கிடையாது. வெளியரங்கமான அந்த அற்புதத்தைச் செய்யுமுன் வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்று பேதுருவால் அறிக்கையிட முடிந்தது (அப்.3:6). அவனது மற்றும் பிற அப்போஸ்தலர்களது பாதத்தில் மக்கள் கொண்டுகுவித்த திரளான பணத்தை அவன் தொடவில்லை என்பதே இதன் பொருள் (அப்.2:44-45 ; 4:33-37). உலகப்பொருட்களிலேயே நாம் உண்மையற்றவர்களாயிருந்தால் அற்புத வல்லமையை தேவன் நம்மை நம்பி எப்படிக்கொடுப்பார்? (லூக்.16:11). விளையாட்டுப்பிள்ளை கையில் கூரிய கத்தியை எந்தப் பெற்றோராவது கொடுப்பாரா? ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களாகிய நாம் மாமிசத்திற்குரியவர்களாகவும், குழந்தைகளாகவும் தானே இருக்கிறோம் (1.கொரி.14:12 ; 3:1-3). வியாபாரத்துறையிலிருப் போரிடம் போய் மக்களைக் கவரும் கோஷங்களை படித்துக் கொள்வதைச் சுவிசேஷகர்கள் என்றுதான் நிறுத்துவாரோ? ஏராளம் காணிக்கை கிடைக்கக்கூடிய நகரங்களையும் பட்டணங்களையும் விட்டு, பரமஏழைகளும், தாழ்த்தப்பட்டோரும் சிலாக்கியமற்றோரும் வாழும் இடங்களில் தங்கள் கூட்டங்களை நடத்த சுவிசேஷகர்கள் என்றுதான் தெரிந்துகொள்வாரோ? (லூக்.4:18-19 ; 7:22).
5. பரிசுத்த வாழ்வை வலியுறுத்தத் தவறிவிட்டோம்
பெந்தேகொஸ்தேயின் பரிசுத்த மில்லாமல் பெந்தேகொஸ்தே வல்லமை எங்கே? நமது சுயபக்தியினால் தேவன் மக்களைக் குணமாக்குவதோ, அற்புதங்களைச் செய்வதோ இல்லை என்பது உண்மைதான் (அப்.3:12). ஆனால் எஜமானது பிரயோஜனத்திற்காகச் சுத்திகரிக்கப்பட அழைக்கப்பட்டிருக்கிறோமே (2.தீமோ.2:21-22). ஆவியின் வரங்களில் தீவிரம் காட்டி ஆவியின் கனியை தியாகம் செய்துவிடுகிறோம். ஞானத்தைப் போதிக்கும் வசனம் மற்றும் அறிவை உணர்த்தும் வசனம் ஆகியவை வரங்களாம். ஆனால் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். பரிசுத்தரின் அறிவே அறிவு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது (1.கொரி.12:8 ; நீதி.9:10). நமது சொந்த உடல்களை மாமிசத்திற்கடுத்த பாவங்களால் கறைபடுத்திக்கொண்டிருக்கும்போது மற்றவர்களுக்கு சரீரசுகத்தை நாம் எப்படி கொண்டுவர முடியும். அப்படியே பொய், மிகைப்படுத்துதல், கெட்டவார்த்தை போன்றவற்றிற்கு எதிராக நமது நாவைக் கட்டுப்படுத்துவதில் நாம் கவனமாயிராதிருக்கும்போது, வார்த்தை வரங்களான தீர்க்கதரிசனம், பாசைகள், வியாக்கியானம் ஆகியவற்றை நாம் விரும்புவது தேவனுக்குப் பிரிமாய் இருக்குமோ? யோசுவா சொல்லுவதைக் கவனியுங்கள்:
உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் (யோசு.3:5).
இந்தக் காரியங்களைக் குறித்து நாம் ஆவன செய்யாவிடில் தேவனுக்கு மகிமையைவிட அவமதிப்பைத்தான் கொண்டுவருவோம். நாம் அறிவிக்கும் சுவிசேஷசெய்தியை நம்புவதற்குப் பதிலாக கேள்விக்குரியதாய் மாற்றிவிடுவோம்.
கண்கவரும் வெளியரங்க அற்புதங்கள் இல்லாமையால் அற்புதங்களின் காலம் கடந்துவிட்டதென்று சொல்லும் கிறிஸ்தவர்களும் உண்டு. இது வசனத்திற்கு ஒவ்வாததால் இதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். அற்புதங்களின் தேவன் மாறவில்லை. அவரது வார்த்தைக்கு என்றுமே அதே வல்லமை உண்டு. இத் தலைமுறையைப்போல் எத்தலைமுறையும் ஜீவனுள்ள தேவனுக்குப் பதிலாக இத்தனை பாகால்களை வணங்கியதில்லை. எனவே எந்தக்காலத்தையும்விட இன்றுதான் அற்புதங்கள் ஏராளம் தேவை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..