எருசலேம் என்பதற்குச் சமாதானத்தின் நகரம் என்று பொருள்படும். ஆனால் அதின் சரித்திரத்தை நாம் கவனித்தால் தாவிது ராஜா அதை தனக்குத் தலைநகர் ஆக்கியது முதல் (கி.மு.975) சுமார் 75 வருடங்கள் அளவில் தனது உன்னத ஸ்தானத்திற்குப் போய் சமாதானமாயிருந்தது எனலாம்.
முதன் முறை கி.மு.586ல் பாபிலோனிய மன்னன் நேபுகாத்நேச்சரால் எருசலேம் தீக்கிரையாக்கி அழிக்கப்பட்டு, கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு, அதின் அரசனும் மக்களும் பாபிலோனுக்குச் சிறைக் கைதிகளாகக் கொண்டு போகப்பட்டனர். 70 வருடங்களுக்குப் பின் கோரேஸ், அர்த்தசஷ்டா மன்னர்களின் ஆணைகளின்படி தேவாலயமும் கோட்டை மதிலும் திரும்பக் கட்டப்பட்டன.
இரண்டாம் முறை இயேசு கிறிஸ்துவின் முன்னறிவிப்பின்படி நாற்பது வருடங்களுக்குப் பின், கி.பி.70ம் வருடம் ரோம தளபதி தீத்துவினால் எருசலேம் நகரம் அனேகமாக முழுவதும் அழிக்கப்பட்டு யூதர்கள் நகரத்திலிருந்து விரட்டப்பட்டனர். தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டும் இடித்தும் அழிக்கப்பட்டது. என்றாலும் தேவனுடைய அனாதி தீர்மானத்தின்படி ஒரு மிகச் சிறிய கூட்டம் சங்காரத்துக்குத் தப்பி எருசலேமில் திரும்பவும் குடியேறினர்.
எருசலேம் நகரம் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக 1967ம் வருடம் முதல் திகழ்கிறது. 1994 ஆம் ஆண்டு ஜனத்தொகை 5,67,200. இது ஒரு முன்னேற்றமடைந்த நகரமாக இருக்கிறது. என்றாலும் கி.பி.70க்கும் கி.பி.1967க்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்குப்போகும் நிகழ்ச்சியைக் குறித்து மீகா எனும் தீர்க்கத்தரிசி கி.மு.710 ஆம் வருடம் ஒரு அதிசயமான முன்னுரைப்பை கூறினார். அதைக் கவனிப்போம்;-
மீகா-3:11 (கி.பி.710)
வசனம்-11) “அதின் (இஸ்ரவேல் வம்சத்தின்) தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயம்தீர்க்கிறார்கள், அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள், அதின் தீர்க்கத்தரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள், ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்து கொண்டு கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையா? தீங்கு எங்கள் மேல் வராது என்கிறார்கள்”.
இஸ்ரவேலின் தலைவர்களின் மேற்கூறிய பாதங்களினிமித்தம் கீழ்கண்ட தண்டனை வரும் என்று ஆண்டவர் மீகா மூலம் கூறுகிறார். ;-
முன்னுரைப்பு –
மீகா-3:12 (கி.மு.710)
வசனம்-12) “ஆகையால் உங்கள் நிமித்தம் சீயோன் வயல்வெளியைப் போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகாளாய்ப் போம்”.
நிறைவேறுதல்-
கி.பி.70ல் எருசலேம் இரண்டாந்தரம் தீத்துவினால் அழிக்கப்பட்ட பின்பு கி.பி.130 வரை, 60 வருடங்களில் எருசலேம் கொஞ்சங் கொஞ்சமாய் திரும்பக் கட்டப்பட்டு சிறிது சிறிதாய் யூதர்கள் வந்து குடியேறினர்.
கி.பி.132ல் பார்-கோச்பா (Bar-Kokhba) என்ற யூதன் தான் வரப்போகும் மேசியா என்று கூறிக்கொண்டு ரோம அரசாங்கத்துக்கு விரோதமாகப் புரட்சி செய்யத் துவங்கினான். அவனுக்கு உதவியாக ரபி அக்கிபா (Rabbi Akiba) என்ற மேதை எழுந்தார். ஆகையால் ஒரு பலமான எதிர்ப்பு ரோம அரசாங்கத்துக்கு விரோதமாக உருவாகியது. பார்-கோச்பா ரோம பிடியிலிருந்து எருசலேமை விடுவித்து இரண்டு வருடங்கள் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான்.
இதைப் பொறுக்க முடியாது ரோம சக்கரவத்தி ஹெட்ரியன் (Hadrian) என்பவன் ஒரு பெரிய சேனையை அனுப்பி, பார்- கோச்பாவையும் அவன் சைனியத்தையும் தோற்கடித்து, யூதரையெல்லாம் கொன்று, நகரத்தைத் தரைமட்டமாக்கி கி.பி 135ல் நகரத்தை உழுது பயிரிடும் நிலமாக யூதரல்லாதவர்களுக்கு விற்றுப் போடுவித்தான்.
இவ்வருடத்தல் தான் யூதேயாவிலிருந்த யூதருடைய கடைசிக் கோட்டையாகிய மசாடா (Masada) வும் ரோம படைகளால் அழிக்கப்பட்டது. அங்கிருந்த வைராக்கியம் மிகுந்த 960 யூதர்கள் தாங்கள் ரோமரிடம் கைதிகளாகப் போவதை விட சாவது மேல் என்றும் தங்கள் பெண்கள் ரோமப் படைவீரர்களால் மானபங்கம் அடையாதபடிக்கும், கண்ணிரோடு தங்கள் மனைவி பிள்ளைகளைத் தாங்களே பட்டயத்துக்கு இரையாக்கிவிட்டு கோட்டைக்குள் தீ வைத்து யாவரும் மடிந்தனர்.
என்றாலும் மீகா தீர்ககதரிசியின் முன்னுரைப்பு, அடுத்த வசனம் அதாவது மீகா-4:1 இன் பிரகாரமும் யோவேல்-3;20 இன் பிரகாரமும் ஆண்டவரின் அனாதி தீர்மானத்தின்படி எருசலேம் தலைமுறை தலைமுறையாகக் குடியேற்றப்பட்டிருக்கும் என்னும் முன்னுரைப்பு நிறைவேற அதே ரோம சர்க்கரவர்த்தி ஹெட்ரியன் ஒருசில வருடங்களில் அதே இடத்தில் அப்பட்டணத்தை ரோம கட்டடக் கலைப்படி திரும்பவும் கட்டியெழுப்பி அதற்கு “ஏலியா கப்பிட்டோலினா” (Aelia Capitolina) என்று பேரிட்டான். என்றாலும் காலக்கிரமத்தில் அப்பட்டணத்தின் பெயர் திரும்பவும் எருசலேம் என்றே வழங்கலாயிற்று.
இவ்வண்ணமாக ஆண்டவர் தமது தீர்க்கர்கள் மூலம் முன்னுரைத்தவைகள் பரிசுத்த வேதாகமத்தில் நாம் வாசிக்கும் போது அர்த்தமற்றவைகளாக அல்லது அற்பமானவைகளாக அல்லது சொற்ப வார்த்தைகளாலானவையாக தெரிந்தாலும் அவைகள் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறியிருக்கின்றன. அல்லது தற்காலத்தில் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அல்லது ஆண்டவரின் சித்தப்படி அவர் குறித்த காலத்தில் நிறைவேறியே தீரும்.
இது 'HI CHRISTIANS" இணையதளத்தில் “நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்” எனும் தலைப்பில் பதிவு செய்யப்படும் கட்டுரைத் தொகுப்பில் இரண்டாம் பதிவு.
(நன்றி இஸ்ரவேலின் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் நூல்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..