நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » அபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் பதில்கள்

அபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் பதில்கள்



ஆவியினால் நிரப்பப்படுதலும் ஆவியினால் திருமுழுக்குப் பெறுதலும் ஒன்றுதானா?

ஒரு தம்ளரின் விளிம்புவரை தண்ணீர் ஊற்றப்படுதலைப்போன்றது ஆவியினால் நிரப்பப்படுதல். தம்ளர் தண்ணீருக்குள் முற்றிலும் மூழ்கடிக்கப்படுவதைப்போன்றது (அமிழ்ந்து போவதைப்போன்றது) ஆவியினால் திருமுழுக்கு (அபிஷேகம்) பெறுதல். இது ஒரு நிரம்பி வழியும் அனுபவம் என்றுகூட கருதலாம்.


ஆவியினால் திருமுழுக்குப் பெறும்போது நிரப்பவும் படுகிறோம். ஆனால் நிரப்பப்படும் போதெல்லாம் திருமுழுக்குப் பெறுவதில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்திலும், அதற்குப் பின்னும் (இக்காலம் வரை) ஒரு மனிதன் முதல் முறையாக ஆவியானவரைப் பெறுதலை ஆவியினால் திருமுழுக்குப் பெறுதல் என்று கூறுகிறோம். அதன் பின்னர் அந்த மனிதன் மீண்டும் மீண்டும் ஆவியானவரால்; நிரப்பப்படலாம். அப்:2:4 இல் ஆவியினால் திருமுழுக்குப் பெற்றவர்கள், மீண்டும் நிரப்பப்படுவதை அப்:4:31 இல் காண்கிறோம். எப்பொழுதும் ஆவியினால் நாம் நிரம்பியிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (எபே:5:18-19).

சீடர்கள்மேல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஊதியபோது (யோவா:20:22) அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியின் திருமுழுக்கை அப்பொழுது பெற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அதைப் பெறுவதற்காக எருசலேமில் காத்திருக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார். (லூக்-24:49,அப்-1:4-5) அவ்வாறு காத்திருந்த அவர்கள் பெத்தெகொஸ்தே நாளன்றுதான் ஆவியினால் திருமுழுக்கைப் பெற்றுக் கொண்டார்கள். ஆகவே ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுதலும் ஆவியினால் திருமுழுக்கைப் பெறுதலும் வெவ்;வேறு நிகழ்ச்சிகளாக இருந்து வந்தன. ஆனால் பெந்தகொஸ்தே நாளுக்குப் பின்னர் ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுதல் என்பது ஆவியினால் திருமுழுக்குப் பெறுதலின் மூலமாகவே அமைந்திருந்தது

எனவே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்பதையே குறிக்கும். இவ்வாறு பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் நிரப்பப்படும் அனுபவத்தை அடைவது தேவையானது.


தண்ணீர்த் திருமுழுக்குப் பெறாதவர்கள் ஆவியினால் திருமுழுக்குப் பெற முடியுமா?

முடியும் என்பதை வேதம் காண்பிக்கிறது. கொர்நேலியு வீட்டார் அவ்விதம் பெற்றுக்கொண்டார்கள் (அப்:10:44-48) இக்காலத்திலும் அநேகர் தண்ணீர்த் திருமுழுக்குப் பெறும் முன்பே ஆவியினால் திருமுழுக்குப் பெறுகிறார்கள். இவர்கள் கொர்நேலியு வீட்டாரைப் போல தண்ணீர்த் திருமுழுக்கைச் சீக்கிரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஏன் பலர் இதைப் பெறவில்லை?

தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்பாதவர்களுக்கு இது கிடைக்காது என்று (நீதி:1:23) இலிருந்து புரிந்துகொள்ளலாம். அதாவது பாவத்திலிருந்து மனந்திம்பாதவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்படமாட்டார்.

மனந்திரும்பியதாகக் கூறியபோதிலும் ஜென்ம சுபாவம் கொண்டிருப்பவர்கள் ஆவிக்குரியவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (1கொரி:2:14) இவர்களுக்கும் ஆவியின் அருள்மாரி கிடைக்காது. ஆவியானவரின் அருள்மாரியின் உண்மையை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுப்பார்கள். வேதத்தைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் சுபாவத்திற்கு ஏற்ப திரித்துக் கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுதல் சரியல்ல.

மனந்திரும்பியபோதிலும் பின்னர் தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருப்போர் ஆவியின் அருள்மாரியை அடையாமற்போகலாம். (அப்:5:32) இலிருந்து இதை அறிகிறோம்.

ஆவியானவரைக் குறித்துச் சரியாக அறியாமையால் பலர் அவரைப் பெற்றுக்கொள்வதில்லை (அப்:19:1-2). விசுவாசிப்போருக்கே ஆவியானவர் அருளப்படுகிறார் (கலா.3:14). எனவே விசுவாசிக்காததால் ஆவியின் அருள்மாரியைப் பெறும் வாய்ப்பைச் சிலர் இழக்கிறார்கள்.
கள்ளப் போதகங்களால் இழுப்புண்டு, ஆவியானவரின் அருள்மாரியைக் குறித்துத் தவறான எண்ணமுடையவர்களுக்கு அது கிடையாது. வேதத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இக் கள்ளப் போதகங்களினின்று தப்ப ஏதுவாகும். வேதமே நமக்கு ஆதாரம்.

மேற்கண்டதைப் போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் பெற்றுக் கொள்ளாத சிலர் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குப் பெறும் அனுபவத்தை மறுக்கவும் குறைகூறவும் முற்படுகின்றனர். இவ்வாறு செய்வது மிகவும் தவறான செயல் ஆகும்.



பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குப் பெறுவதற்குக் கைகளை வைத்தல் சரியா?

அப்போஸ்தலராகிய பேதுருவும், யோவானும் ஜெபம்பண்ணி, கைகளை வைத்தபோது சமாரியர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள் (அப்.8:16-17) அப்போஸ்தலனாகிய பவுல் கைகளை வைத்தபோது எபேசு சபையின் விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்தார் (அப்.19:6). எனவே இவ்வாறு செய்வது கைகளை வைப்பது வேதத்தின் படி சரிதான்.
இவ்வாறு பரிசுத்த ஆவியானவர் அருளப்படும்படி ஜெபித்துக் கைகளை வைப்பது ஒரு வரம் என்பதை (அப்.8:17-20) இல் காண்கிறோம். இந்த வரம் அப்போஸ்தலருக்கு மட்டுமன்றி சாதாரண சீடர்களில் சிலருக்கும் அருளப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக சவுல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் படி அனனியா என்ற சீடர் சவுலின்மீது கைகளை வைத்ததை அப்.9:17 இல் காண்கிறோம்.

இவ்விதம் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரிக்குள் நடத்தும் வரம் பெற்றவர்கள் கைகளை வைத்து ஜெபித்தல் முறையானதுதான்.


ஆவியில் நிறையும் போது உடல் அசைவு, கூச்சல் ஏன்?

அந்நிய மொழிகளில் பேசும் போது சிலர் சிறிது ஆடுகிறார்கள், சிலர் கைகளை அசைக்கிறார்கள், சிலர் கைகளைத், தட்டுகிறார்கள், சிலர் மிகவும் சத்தமாக பேசுகிறார்கள். இது வேதத்தின் படி சரியானதே. பெந்தகொஸ்தே நாளில் ஆவியினால் நிறைந்தவர்களை மற்றவர்களை பார்த்த போது அவர்கள் குடித்திருக்கிறார்களோ என்று கருதுமளவிற்கு நிகழ்சிகள் நடந்தன (அப்.2:13) ஆனால் உடல் அசைவு இல்லாதவாறும் ஆவியானவரின் திழுமுழுக்கைப் பெற்றுக்கொள்பவர்கள் உண்டு. உணர்ச்சி வசப்படும் அளவானது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது அல்லவா?


அந்நிய மொழியில் பேசுவதைக் கட்டுப்படுத்த முடியுமா?

முடியும். நாமாக நிறுத்தத் தீர்மானித்தால் உடல் இயக்கத்தையும், அந்நிய மொழி பேசுவதையும் நிறுத்த முடியும். கைகளை அசைக்கும் போது ஆவியானவரின் வல்லமையை உணர்ந்துதான் அசைகிறோம். நாமாகக் கைகளை ஆட்டுவதில்லை. எனினும் நாம் நிறுத்தத் தீர்மானித்தால் நிறுத்த முடியும். இதுவும் வேதாகமத்தின்படியே உள்ளது. ஏனெனில், தீர்க்க தரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது என்று வேதம் கூறுகிறது (1கொரி.14:32)


போலியாக அந்நிய மொழிகளைப் பேசுகிறவர்கள் உண்டா?

தேவனுடைய பிள்ளைகள் தேவனிடம் கேட்டுப் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரியைப் பெற்று, பின்னர் அந்நிய மொழிகளில் பேசுவது நமக்குத் தெரிந்ததே.

இதேவிதமாக ஏமாற்றுக்காரர்கள் பேச முயற்சிப்பது சாத்தியம்தான். அவ்விதம் பேசுமாறுபிசாசு மக்களை ஏவுவதும் நடக்கக்கூடியதே. கள்ள தீர்க்கதரிசிகளும், கள்ளப் போதகர்களும், கள்ளக் கிறிஸ்துக்களும் இருக்கும் இக்காலத்தில் இது நடைபெற ஏதுவுண்டு வானத்திலிருந்து அக்கினியை  இறக்கும்படியான  அற்புதம் செய்யத் துணியும் பிசாசு எந்தப் போலி அற்புதத்தையும் செய்ய முடியும் அல்லவா (வெளி.13:13)?
ஆனால், போலிகள் இருக்கின்றன என்பதற்காக உண்மையானதைப் புறக்கணித்தல் தவறு. கத்தருடைய பிள்ளைகள் பரிசுத்த ஆவியினால் நிரம்பி அந்நிய மொழிகளில் பேசுவது வேதத்தின் படி சரியானதே.


அந்நிய மொழிகளை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்களே?

சிலர் ஒரு காரியத்தைத் தவறாகப் படுத்துகிறார்கள் என்பதற்காக அதை மறுப்பதும் வெறுப்பதும் சரியல்ல. நாம் சரியாகப் பயன்படுத்துவதே சரியான முறையாகும்.

'தவறாகப் பயன்படுத்தலுக்கும், குறை கூறுதலுக்கும் பரிகாரம் பயன்படுத்தாமை அல்ல. சரியாக பயன்படுத்துதலே பரிகாரம் ஆகும். நாம் சரியான முறையில் அந்நிய மொழிகளைப் பயன்படுத்த தீர்மானிப்போம்.

தியானிக்க மத்-12:22-37, அப்-10:44-48

Dr.Alfred devadasan அவர்கள் எழுதிய “பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி,வரங்கள், கனி நூலிலிருந்து.......


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்