இக்கட்டுரையில் ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கால கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதற்கான ஐந்து அடிப்படைக் காரணங்களை முதலில் தருகிறேன் அதன் பின்னர் ஓய்வுநாள் கட்டளை குறித்து கேட்கப்படும் நான்கு முக்கியமான கேள்விகளுக்கு வேதம் கூறும் பதிலையும் தருகிறேன் வாசித்து பயனடையுங்கள்.
காரணம் 01-
ஓய்வுநாள் கட்டளையானது நியாயப்பிரமாணமாகும்.
நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது. புறஜாதியாரான நமக்கு அது கொடுக்கப்படவில்லை. ரோமர்-2:14 இன்படி நியாயப்பிரமாணம் புறமக்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அப்படியிருந்தும் அவர்கள் நியாயப்பிரமாணத்தை பெறாமலே நியாயப்பிரமாணப்படி செய்து வந்தார்கள் என்றும் அவ்வசனம் கூறுகிறது. ஆயினும் நியாயப்பிரமாணத்திலுள்ள பலியிடுதல், ஓய்வுநாளை அனுசரித்தல், மாதப்பிறப்புகள் பண்டிகைகளை கொண்டாடுதல், பாஸ்காவை புசித்தல் போன்றவற்றை புறஜாதிமக்கள் கடைப்பிடிக்கவில்லை. நியாயப்பிரமாணத்திலுள்ள ஒழுக்கக் கட்டளைகளை மட்டுமே புறஜாதிமக்கள் கடைப்பிடித்தனர்.நியாயப்பிரமாணத்தில் 3 உட்பிரிவுகள் உண்டு
1 சமூகக் கட்டளைகள்
2 சடங்காச்சாரக் கட்டளைகள்
3 ஒழுக்க கட்டளைகள்
இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்
01. சமூகக் கட்டளைகள்
சமூகக் கட்டளைகளுக்குள் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் போன்ற சட்டங்கள், மற்றும் அரசியலோடு சம்பந்தப்பட்ட கட்டளைகள் என்பன அடங்கும். இப்படிப்பட்ட சட்டங்கள் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ மக்களுக்கு இல்லை. மாறாக அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து வாழும்படி அழைக்கப்படுகிறார்கள்.
(ரோம 13:1-7) எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவ ஊழியக்காரனாயிருக்கிறானே. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவ ஊழியக்காரராயிருக்கிறார்களே. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
(1பேது 2:13-14) நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.
(1தீமோ-2:2) நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
02. சடங்காச்சாரக் கட்டளைகள்
சடங்காச்சாரக் கட்டளைகளுக்குள் வழிபாட்டு முறைகள், பலியிடுதல், ஓய்வுநாள் ஆசரிப்பு போன்ற விடயங்கள் அடங்கும். இப்படிப்பட்ட சடங்காச்சார கட்டளைகளுக்கு பதிலாக 'தேவனை எங்கும் தொழுது கொள்ளலாம்" “ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்" “நாட்களை தேவனுக்கென்று நியமித்துக் கொள்ளுதல்" போன்ற ஆலோசனைகளை பின்பற்றும் படி புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.
(யோவா-4:21) நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
(யோவா-4:23-24) தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
(ரோம-14:5-6) அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.
03. ஒழுக்கக் கட்டளைகள்
ஒழுக்கக் கட்டளைகளுக்குள் தனிமனிதனுக்கான ஒழுக்கம், நீதி நியாயம் செய்தல், பரிசுத்த வாழ்வு முறைகள் என்பன அடங்கும். ஒழுக்கக் கட்டளைகள் புதிய ஏற்பாட்டு காலத்தில் புதுப்பிக்கப்பட்டு புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. எப்படியெனில் “கொலை செய்யக் கூடாது” என்று இருந்த கட்டளை மாற்றப்பட்டு “சகோதரனை பகைத்தாலே கொலை செய்ததற்கு சமம்” என்று கூறப்பட்டுள்ளது. “விபச்சாரம் செய்யக் கூடாது” என்பது மாற்றப்பட்டு “பெண்ணை இச்சையோடு பார்த்தாலே விபச்சாரம் செய்ததற்கு சமம்” என்று கூறப்பட்டுள்ளது. விவாகரத்து சட்டம் மாற்றப்பட்டு “அது விபச்சார முகாந்திரத்தினாலொழிய செய்யப்படக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
(மத்-5:21-22) கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
(மத்-5:27-28) விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
(மத்-5:31-32) தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
இந்த மூன்று உட்பிரிவுகளில் சடங்காச்சாரக் கட்டளைகளும், சமூகக் கட்டளைகளும் இஸ்ரவேலருக்கு மட்டுமானவை. ஒழுக்க கட்டளைகள் யாவருக்கும் பொதுவானவை. ஆகவேதான் அவை புறஜாதியினருடைய இருதயங்களிலும் எழுதப்பட்டிருந்தது. ஒழுக்கக் கட்டளைகள் யாவும் மனிதர்கள் தங்கள் வாழ்வில் தாங்களாகவே அறிந்திருக்கிறார்கள். அவற்றை கட்டாயம் யாவரும் கடைப்பிடிக்க வேண்டும். நியாயப்பிரமாணம் புறஜாதி மக்களுக்கு வழங்கப்படா விட்டாலும் அவர்கள் சுபாவப்படியே ஒழுக்கக் கட்டளைகளை கடைப்பிடித்து வந்தனர். இதையே மேலே நாம் குறிப்பிட்ட ரோமர்-2:14 வசனம் குறிப்பிடுகிறது.
(ரோம-2:14) அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
எனவே இந்த சத்தியங்கள் நமக்கு எதை தெளிவுபடுத்துகிறதென்றால் நியாயப்பிரமான கட்டளை சட்டங்கள் எதுவும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. நீக்க வேண்டியவைகள் நீக்கப்பட்டு சேர்க்கப்பட வேண்டியவைகள் சேர்க்கப்பட்டு மாற்றப்பட வேண்டியவைகள் மாற்றப்பட்டு போதுமானளவு ஆலோசனைகளும் சட்டங்களும் புதிய ஏற்பாட்டில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளையே நாம் பின்பற்ற வேண்டும். ஓய்வுநாள் கட்டளையானது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட சடங்காச்சார கட்டளையாகும் அது புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவுமில்லை. புதிய ஏற்பாட்டில் முன்மொழியப்படவுமில்லை.
காரணம் 02
அது பாரமான சுமையாகும்
நியாயப்பிரமாணத்தின்படி செய்ய விரும்புபவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நீதிமான்களாக முயற்சி செய்து கிருபையை இழந்து விடுகிறார்கள் என்று வேதம் கூறுகின்றது. (கலா-5:4) நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.நியாயப்பிரமாணம் அதை பெற்றுக் கொண்ட யூதர்களால் கூட சுமக்க முடியாதளவு பாரமான சுமையாக காணப்பட்டது. பரிசுத்தாவியானவர் சீஷர்களைப் பயன்படுத்தி புறமக்கள் இதை கடைப்பிடிக்க தேவையில்லை என்று நீக்கி விட்ட வரலாறு அப்போஸ்தலர் 15ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. அதில் அவர்கள் எடுத்த தீர்மானம் என்னவென்றால் புறமக்கள் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக (அப்-15:20)விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்க வேண்டும் என்பதே. இவைகளுடன் புதிய ஏற்பாட்டின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால் போதுமானது.
இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்து அதை நிறைவேற்றி விட்டார் என்று வேதம் கூறுகின்றது. அத்துடன் இயேசுவே ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார் என்றும் வேதம் கூறுகின்றது. இந்த இயேசு நமக்கு கட்டளையிடாத ஓய்வுநாள் கட்டளை நமக்கெதற்கு?
காரணம் 03
அது சாத்தியமானதல்ல
நியாயப்பிரமாணத்தின்படி செய்ய விரும்புபவர்கள் அதின் எல்லாக் கட்டளைகளையும் கைக் கொள்ள வேண்டும். வேதம் இவ்வாறு கூறுகிறது. (யாக்-2:10) எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். ஒன்றிலே தவறியது எல்லாம் தவறியதற்கு சமம் என்றால் ஒன்றை கடைப்பிடித்து நீதிமானாக விரும்புபவன் எல்லாவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் நியாயம்.ஓய்வுநாள் கட்டளை கொடுக்கப்பட்ட வேதபகுதியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
யாத்-31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
ஓய்வுநாள் கட்டளையை கடைப்பிடிக்க வேண்டும் என்று யாராவது விரும்பினால் ஓய்வுநாளை கடைப்பிடிக்காதவர்களை கொலை செய்ய வேண்டும் என்னும் கட்டளையையும் பின்பற்ற வேண்டும். ஓய்வுநாளை கடைப்பிடிக்க வேண்டும் என்று போதிக்கப்படும் சபைகளின் விசுவாசியொருவர் ஓய்வுநாளில் ஏதாவது வேலை செய்து விட்டால் அவரை கொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் நம் நாட்டு சட்டங்கள் நியாயப்பிரமாணத்தை வைத்து இயற்றப்படவில்லை.
நியாயப்பிரமாணத்தில் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட கட்டளைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றாகிய ஓய்வுநாளை கடைப்பிடிக்க விரும்பினால் மற்ற கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா? அவற்றில் விருத்தசேதனம் செய்தலும் ஒன்று. அதை செய்ய முன்வர முடியுமா? அதுமட்டுமன்றி மிருகபலி செலுத்துதல், கல்லெறி தண்டணை கொடுத்தல் என்பவற்றை நம்முடைய நாடுகளில் கடைப்பிடிப்பது சாத்தியமாகுமா? இவை நியாயப்பிரமாணத்தை வைத்து சட்டம் இயற்றப்பட்ட இஸ்ரவேல் நாட்டில் ஒரு வேளை சாத்தியமாகலாம் ஆனால் நம்முடைய நாடுகளுக்கு சாத்தியமாகாது.
காரணம் 04
ஆதி சபை கடைப்பிடிக்கவில்லை.
ஆதி சபையினர் வாரத்தின் முதல் நாளிலேயே சபை கூடினர் என்று வேதத்தில் காணலாம். ஆதி சபையினர் அப்பம் பிட்கும்படி வாரத்தின் முதல்நாளில் கூடி வந்தனர் என்று வேதம் கூறுகின்றது. இதுவே அவர்களின் ஆராதனைக் கூடுதலாக இருக்கலாம். அந்த கூடுகையில் பரிசுத்தவான்களுக்காக தர்மப்பணம் சேர்க்கும் நடவடிக்கையும் இடம்பெற்றது.(அப்-20:7 ) வாரத்தின் முதல்நாளிலே, அப்பம்பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்,
(1கொரி-16:2) நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
ஏன் வாரத்தின் முதல்நாளில் கூடினார்கள் என்றால் இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழுந்தது வாரத்தின் முதல்நாளிலாகும். இயேசு வாரத்தின் முதல்நாளில் உயிர்த்தெழுந்து உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கினார். அத்துடன் பரிசுத்தாவியானவர் கிறிஸ்தவர்கள் மேல் பொழிந்தருளப்பட்டதும் வாரத்தின் முதல்நாளிலாகும். எனவே சீடர்கள் வாரத்தின் முதல்நாளை தங்கள் கூடுகைக்காக தெரிந்து கொண்டனர். அதைத்தான் இன்றைய கிறிஸ்தவ சபை செய்கிறது.
மேலும் சீஷர்கள் ஓய்வுநாளை சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தினார்கள். யூதர்கள் ஓய்வுநள் தோறும் கூடுவது வழக்கமாக இருந்தபடியால் அதை பயன்படுத்தி அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தனர்.
(அப்-13:44) அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.
(அப்-17:2) பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களிள் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
எனவே இவ்வசனளங்களின்படி சீடர்களும் ஆதி சபையும் ஓய்வுநாளில் சபை கூடவில்லை என்து தெளிவாகிறது.
காரணம் 05
இயேசு மீறினார்
இயேசுவின் மீது யூதர்கள் சாட்டிய ஒரு பெரிய குற்றச்சாட்டு அவர் ஓய்வு நாள் கட்டளையை மீறினார் என்பதாகும்.யோவா-5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
ஓய்வுநாளில் நன்மையும் செய்யக்கூடாது என்று எண்ணிய யூதர்களுக்கு மத்தியில் அவர் ஓய்வுநாளை மீறி பல அற்புதங்களை செய்தார். அது மட்டுமல்ல அவர் ஓய்வுநாளை கடைப்பிடிப்பது கட்டாயமானது என்று பொருள்படக் கூடிய விதத்திலேனும் ஒரு தடவை கூட கூறவில்லை. ஓய்வு நாளில் பயிர்களைக் கொய்து தின்ற தம்முடைய சீடர்களின் செயலை அவர் நியாயப்படுத்தி பேசினார். ஓய்வு நாளில் உணவு சேர்க்க கூடாது என்ற கட்டளையை அவர் மீறினார். இன்று ஓய்வு நாளில் நாம் அடுப்பும் மூட்ட கூடாது என்று போதிப்பது சரியாகுமா?
இனி ஓய்வு நாள் கட்டளை பற்றி அடிக்கடி கேட்கப்படும் நான்கு முக்கிய கேள்விகளுக்கான வேதத்தின்படியான பதிலை தருகிறேன்
கேள்வி-01
ஓய்வுநாளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எல்லா இஸ்ரவேலருக்குமான நித்திய கட்டளை என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் ஆவிக்குரிய இஸ்ரவேலரான நாமும் அதை கடைப்பிடிக்கத்தானே வேண்டும்?
யாத்திராகமம்-31:16. ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். இதன்படி இஸ்ரவேல் மக்களுக்கு அது நித்திய கட்டளை என்பது உண்மைதான். நான் கொடுக்கும் ஐந்து காரணங்களைப் படியுங்கள்
01- நாம் மாம்சத்தின் படியான புறஜாதி மக்களே
வேதத்தில் ஆவிக்குரிய ஆபிரகாமின் சந்ததியாக கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டாலும், பல இடங்களில் புதிய ஏற்பாட்டில் இரட்சிக்கப்பட்ட புறஜாதியாரும் இஸ்ரவேலரும் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றனர். ஏனெனில் நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலராயிருப்பினும் மாம்சப்பிரகாரமான புற ஜாதிகள் என்பதை மறந்து விடக் கூடாது என்பதற்காகவே. ஓய்வு நாள் கட்டளையானது நியாயப்பிரமாணங்களில் ஒன்றாகும். நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டமைக்குரிய முக்கிய காரணம் இஸ்ரவேலருக்கும் புறஜாதி மக்களுக்கும் வித்தியாசம் உண்டாவதற்கும் அவர்கள் புற ஜாதியாரோடு கலந்து விடாமல் தனிக் கலாச்சாரத்துடன் வாழ்வதற்குமாகும் என்பது பழைய ஏற்பாட்டை படிக்கையில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
02- விசுவாசத்தினால் இஸ்ரவேலராக்கப்பட்டோம்
நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று வேதம் கூறுவது உண்மை. ஆயினும் நாம் எவ்வாறு அபிரகாமின் பிள்ளைகளாக்கப்பட்டோம்? விசுவாசத்தின் மூலமாக அல்லவா? நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே நாம் ஆபிரகாமின் பிள்ளைகளாக்கப்படவில்லையே. எனவே நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையல்ல விசுவாசத்துக்குரிய கிரியைகளையே செய்ய அழைக்கப்படுகிறோம். ஆக நியாயப்பிரமாணம் கூறும் ஓய்வுநாள் கட்டளையை நாம் கடைப்பிடிக்க தேவையில்லை.
கலா-3:7 ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
கலா-3:29 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
03- பரிசுத்தாவியானவர் சுமத்தவில்லை
ஆதி சபையில் இரட்சிக்கப்பட்ட புறஜாதி மக்கள் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க வேண்டும் என யூதர்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட போது சீடர்கள் 'ஆமாம் இவர்கள் அவிக்குரிய இஸ்வேலர்தானே நியாயப்பிரமாணத்தை இவர்கள் கடைப்பிடிக்கட்டும்" என்று விட்டுவிடவில்லை. மாறாக உடனே சங்கக் கூட்டத்தை கூட்டி இந்த பாரமான சுமையை புறஜாதியார் மேல் சுமத்த கூடாது என்று தீர்மானம் எடுத்தனர். இத்தீர்மானம் பரிசுத்தாவியானவராலும் அங்கீகரிக்கப்பட்டது.
04- அது இஸ்ரவேலின் தலைமுறையில் பிறந்தவர்கள் ஆசரிக்க வேண்டியது
யாத்-31:16 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
எனவே இஸ்ரவேலின் தலைமுறையில் பிறக்காத புறஜாதியான நாம் ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
05- கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான அடையாளங்கள்
(யாத்-31:17) அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.
(எசே 20:12) நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
ஓய்வுநாள் கட்டளை மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டது என்பது தெளிவு. கிறிஸ்து மூலமாக இஸ்ரவேலராக்கப்பட்ட ஆவிக்குரிய இஸ்ரவேலரான நமக்கோ கிறிஸ்து வாக்களித்த பரிசுத்தாவியானவரே அடையாளமாக உள்ளார். அவரே முத்திரையானவர் என்று வேதம் கூறுகிறது.
எபே-1:13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
எபே-4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
முத்திரை என்பது உரிமை கோருவதற்காகவும், உறுதிப்படுத்தப்படவும், வெளியாரின் தலையீடுகளை தவிர்க்கவும் மட்டுமல்ல அடையாளத்துக்காகவும் பயன்படுத்தப்படுவதாகும். எனவே ஆவிக்குரிய இஸ்ரவேலரான நமக்கும் தேவனுக்கும் இடையிலான அடையாளம் ஓய்வுநாள் கட்டளை அல்ல பரிசுத்தாவியானவரே
நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர் எனப்பட்டாலும் நமக்கு ஓய்வுநாள் கட்டளை கட்டாயமானதல்ல என்பதை மேற்கண்ட ஐந்து காரணங்களுக்கூடாக விளங்கிக் கொள்கிறோம்.
கேள்வி-02
ஏசா-56:4-7 வசனங்களை கவனித்தால் ஓய்வு நாளை ஆசரிக்கும் அந்நிய புத்திரனுக்கு பல ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறதே?
ஏசா-56:4-7
4. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
5. நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
6. கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்,
7. நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
ஆம் மெய்தான் அந்நிய புத்திரர்கள் ஓய்வு நாளை ஆசரிக்க விரும்பினால் தடையில்லை ஆசரிக்கலாம் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அவர்கள் ஓய்வு நாளை ஆசரிப்பதானால் மொத்தமாக ஒரு யூதனாக மாறிவிடுவதற்கு சமம். ஏனென்றால் இவ்வசனத்தில் ஓய்வு நாளை ஆசரிப்பது மட்டுமன்றி தேவனின் உடன்படிக்கைகளையும் பற்றிக்கொள்பவனைப் பற்றியே வேதம் இங்கே கூறுகிறது. இங்கு உடன்படிக்கையென கூறப்படுவது தேவன் இஸ்ரவேலருடன் பண்ணிக் கொண்ட உடன்படிக்கையாகும்.
அது மட்டுமன்றி 'அவர்களின் சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்" என்று கூறப்படுவதைக் கவனித்தால் அவர்கள் யூதர்களின் பலியிடுதல் முறைமைகளையும் பின்பற்றுவார்கள் என்பது தெளிவாகிறது.
ஆக யூதர்களாக மாறும் அந்நிய புத்திரர்களைக் குறித்தே இங்கு கூறப்படுகிறது.
கேள்வி-3
'கற்பனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று புதிய ஏற்பாடு கூறுகிறது. அப்படியிருக்க பத்து கற்பனைகளில் ஒன்றான ஓய்வுநாள் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத்தானே வேண்டும்?
உண்மைதான், இந்த பத்து கற்பனைகளில் 9 கட்டளைகளும் புதிய ஏற்பாட்டில் புதுப்பிக்கப்பட்டு பினபற்றும்படி கூறப்படுகின்றன. ஆனால் ஓய்வுநாள் கட்டளை மட்டும் பதிய ஏற்பாட்டில் கூறப்படவில்லை. பத்து கற்பனைகளில் நான்கு கட்டளைகள் சடங்காச்சாரக் கட்டளைகளாகும். இதில் ஓய்வுநாள் கட்டளையும் அடங்கும். சடங்காச்சாரக் கட்டளைகள் இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டவை. ஆயினும் ஓய்வுநாள் கட்டளை தவிர்ந்த ஏனைய மூன்று சடங்காச்சார கட்டளைகளும் புதிய ஏற்பாட்டு மக்களுக்கும் தேவனால் ஏற்புடையதாக்கப்பட்டுள்ளது.
கற்பனை-1
பழைய ஏற்பாடு - என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். யாத் 20:3
புதிய ஏற்பாடு - ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.1தீமோ-6:16
கற்பனை-2
பழைய ஏற்பாடு - யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; யாத் 20:4
புதிய ஏற்பாடு - அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள்.1கொரி-10:7
கற்பனை-3
பழைய ஏற்பாடு - (யாத் 20:7) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
புதிய ஏற்பாடு - அப்-19:13 அப்பொழுது மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து:...... தண்ணடணை பெற்றனர்
கற்பனை-4
பழைய ஏற்பாடு - (யாத் 20:8) ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
புதிய ஏற்பாடு - ?????????????????????????
இதன் அடிப்படையில் புதிய ஏற்பாடானது “கற்பனைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறும்போது அதில் ஓய்வுநாள் கட்டளை உள்ளடங்காது என்பது தெளிவு.
மேலும் மத்தேயு-19:17 இல் ஒருவன் இயேசுவிடம் போதகரே நித்திய ஜீவனை பெற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது இயேசு அவனிடம் கைக்கொள்ளும் படி கூறிய கற்பனைகளில் கூட ஓய்வுநாள் கட்டளையை கூறாமல் விட்டு விட்டாரே. மத்தேயு 19:18, மாற்கு-10:19, லூக் 18:20 வசனங்களை வாசித்து பார்க்கவும்.
கேள்வி-4
சனிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக் கிழமையைக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது சரியா?
ஒருவன் கர்த்தருக்கென்றும் அவருடைய நாமத்தின் மகிமைக்கென்றும் ஒரு நாளை முன்குறித்து அதை வழக்கமாக கடைப்பிடித்து வந்தால் அதை குற்றமென்று கூற யாருக்கு தகுதியுண்டு? நாட்களை கர்த்தருக்கென்று நியமித்து கொள்ளுவதில் தவறில்லை என்று வேதம் தெளிவாக கூறுகின்றதே?
மேலே நாம் பார்த்த ஆதாரங்களின் படி சனிக்கிழமையை ஓய்வுநாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வேதம் கூறாத போது கர்த்தருக்கென்று கிறிஸ்தவர்கள் தாங்களாகவே முன்வந்து இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஓய்வெடுப்பதற்காகவும் ஒன்று கூடி ஆராதிப்பதற்காகவும் நியமித்துக் கொண்டால் அதில் என்ன தவறு இருக்கிறது?
எனவே ஞாயிற்றுக் கிழமையை மட்டுமல்ல வாரத்தின் எல்லா நாட்களையும் ஓய்வு நாளாக கருதினாலும் அதில் தவறு இல்லை.
முடிவுரை
ஓய்வு நாட்களை கடைப்பிக்க வேண்டும் என்று யாராவது விரும்பினால் அவர்கள் அதை கடைப்பிடிக்கலாம். தவறில்லை. ஆனால் மற்றவர்களை கடைப்பிடிக்கும்படி கட்டாயப் படுத்தவோ குற்றப்படுத்தவோ கூடாது.
அடுத்து உங்கள் சபைகளில் அதை நடைமுறைப்படுத்தினால் அதை கடைப்பிடிக்காதவர்களை கொலை செய்யும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துங்கள் ஏனெனில் ஓய்வுநாளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், கடைப்பிடிக்காதவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதும் ஒன்றுடன் ஒன்று இணைந்த கட்டளைகளாகும்.
இக்கட்டுரையின் அடிப்படையில் ஓய்வுநாள் கட்டளையானது புதிய ஏற்பாட்டு கால கிறிஸ்தவர்களுக்கு பொருத்தமானதல்ல என்பதே வேதம் கூறும் சத்தியமாகும்.
நன்றி
.
BY- ROBERT DINESH
1 கருத்துகள்:
பிரதர் மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்.....நாம் கிருபையினால் இயேசு கிறிஸ்து மூலமாய் மீட்கப்பட்டுள்ளோம்.....இன்று அநேகர் நியாயப்பிரமாணத்தை மட்டுமே உபதேசித்து,சனிக் கிழமை தான் ஓய்வு நாள் எனக் கூறிக் கொண்டு இயேசுவை ஒவ்வொரு நொடியும் நாம் ஆராதனை செய்ய வேண்டும் என்பதை மறந்து விட்டனர்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..