நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » இன்றைய ஆராதனையும் நாமும்

இன்றைய ஆராதனையும் நாமும்

அன்று இயேசு சொன்னார் 'நீங்கள் அப்பம் கேட்டால் பிதா கல்லைக் கொடுக்க மாட்டார்' அனால் இன்று நாம் செய்கிறோம். தகப்பன் அப்பம் கேட்கிறார் நாம் கல்லைக் கொடுக்கிறோம். 

புரியும்படி சொல்கிறேன்: நமக்கெல்லாருக்கும் தகப்பன் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆராதனை வேறு. நாம் அவருக்கு கொடுக்கும் ஆராதனை வேறு. 

வாழ்வே ஆராதனையாகிறதா?

வாழ்க்கையையே ஆராதனையாக கேட்கும் அவருக்கு வாரத்தின் ஒரு நாளின் ஒரு மணி நேரத்தை மட்டுமே கொடுத்துவிட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறோம். 

உபாகமம்-18:5 சொல்கிறது எந்நாளும் தேவனை ஆராதிக்கும்படிக்கே தேவன் லேவி கோத்திரத்தை தெரிந்து கொண்டாராம். 

மற்றும் தானியேல்-06:16 இல் தரியு ராஜா தானியேலை பார்த்து 'நீ இடை விடாமல் ஆராதிக்கும் தேவன் உன்னைத் தப்புவிப்பார்' என்று கூறுகிறார். 

என்னது? இடைவிடாமல் ஆராதிப்பதா? வேறு வேலைகள் செய்வதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியல்ல. ஆராதனை என்பது சபையாக கூடி, பாடல்கள் பாடி, பற்பல பாஷைகளைப் பேசி, இசைக்கருவிகளால் ஒலியெழுப்புவது மட்டுமல்ல. நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்கள் மூலமும் தேவனை மகிமைப்படுத்துவதேயாகும். 

வேதத்தில் 1கொரி-10:31 சொல்கிறது 'நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்' ஆம் அதுதான் தேவன் விரும்பும் ஆராதனை. அவரை நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் மகிமைப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் சிறப்பான அராதனையாகும்.

அனால் இன்று நாம் என்ன செய்கிறோம்? திங்கட்கிழமை திருட்டுத்தனம், செவ்வாய்க்கிழமை செவித்தினவு(2தீமோ-4:3), புதன்கிழமை புழுகுத்தனம், வியாழக்கிழமை விக்கிரகாராதனை, வெள்ளிக்கிழமை வெகுளித்தனம், சனிக்கிழமை சகடைத்தனம். இவ்வாறு வாரநாள் முழுவதும் விளங்கிப்போகாத பல்வகைமைப் பாவங்களையும் கலந்து பருகிவிட்டு ஞாயிற்றுக் கிழமையானதும் பரிசுத்தக் குஞ்சுகள் போல பரிசுத்த தேவனை ஆராதிக்க பகட்டாக கூடி வருகிறோம். யாரை ஏமாற்றுகிறோம் தேவனையா? நம்மையேயல்லவா? தேவன் எதிர் பார்ப்பதில் கொஞ்சத்தைக் கூட நம்மால் கொடுக்க முடியாதுள்ளது.


தேவன் மகிமைப்படுகிறாரா?

ஆராதனையில் தேவன் மகிமைப்பட வேண்டும் என்பதே தேவனுடைய எதிர்பார்ப்பாகும். ஆனால் நாம் காணும் பல ஆராதனைகளில் புகை இருக்கிறது கூடவே பகையும் இருக்கிறது, சத்தம் இருக்கிறது தேவனுடைய சித்தம் இல்லை, பல வர்ண விளக்குகள் ஒளிர்கிறது ஆனால் தேவ வெளிச்சம் இல்லை. ஆராதனையாளன் எனப்படுபவன் இருக்கிறான் ஆனால் நிஜமான ஆராதனையாளன் இல்லை.

மொத்தத்தில் ஆராதனை நடத்துபவனுக்கும் பாடகனுக்குமே மகிமை போய்ச் சேருகிறது. தேவனுக்கு அதினால் எந்த மகிமையும் இல்லை. தேவன் பார்வையாளனாக காணப்படுகிறார். 

மனிதனின் மகிமைக்காகவும் புகழ்ச்சிக்காகவும் ஆராதனைகள் நடத்தப்பட்டு அழகான எடிட் பண்ணப்பட்ட புகைப்படங்களுடன் ஒளி இறுவட்டுகளாக ஆராதனைகள் வெளிவருகின்றன. அதை வீடுகளில் போட்டு பார்த்துவிட்டு ஆராதித்து மகிழ்ந்தது போன்ற திருப்தியில் நாம் மூழ்கி விடுகிறோம். இதைக்குறித்து வசனம் இவ்வாறு கூறுகிறது. சங்-4:2 மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். 

ஆராதனைகள் 'தேவனுக்கு மகிமையை கொடுக்கிறோம்' என்னும் பேரில் தான் நடக்கிறது. ஆனால் மகிமை போய்ச் சேருவதெல்லாம் நடத்துனருக்கே. தாங்கள் இயற்றும் பாடல்களையே தங்கள் ஆராதனைகளில் பாடுவார்கள். இதுக்கு என்ன காரணம். அவர்கள் இயற்றுவது மட்டும் தான் பாடலா? தெளிவாக  தெரிகிறதல்லவா? தங்களை பிரசித்தம் பண்ணவும் புகழ் தேடவும் அராதனை நடத்துவது வாடிக்கையாகி விட்டடது.


தேவன் எதிர்பார்க்கிற படி அமைகிறதா?

தேவன் ஆவியோடும் உண்மையோடும் நாம் அவரை ஆராதிப்பதை விரும்புகிறார் என்று யோவான்-4:23 கூறுகிறது. 

இன்று நாம் ஆவியோடு ஆராதிப்பதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல ஆவிகள் புகுந்து நம்முடைய ஆவியுடன் விளையாடிக்கொ ண்டிருக்கின்றன. நம்முடைய ஆவியை அலைய விட்டுவிட்டு வாயினால் ஆராதிக்கிறோம். இதைத்தான் தேவன் இவ்வாறு கூறுகிறார். ஏசா-29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்ளூ அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறதுளூ அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

சரி ஆவியோடு ஆராதிக்கவில்லை உண்மையோடாவது ஆராதிக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆண்டவர் பொய்களை துருத்தியில் சேர்த்து வைப்பதாக சொல்லியிருந்தால் இன்நேரம் நம்முடைய துருத்திகள் நிரம்பி வழிந்திருக்கும்.

ஆராதனைகளில் பாடும் பாடல்களில் பல பாடுபவர்களுக்கு உண்மையில்லை. 'உம்மையல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே என்று பாடுபவன் 'ஆண்டவரே என் மனவிருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று சொன்னீரே எனக்கு ஒரு அழகான வீடு கட்டித் தாருமையா' என்று ஜெபிக்கிறான். 'நீரே எல்லாம்' என்று பாடுபவன் வெளியே போனவுடன் 'கட்டினா அவள கட்டணும்டா' என்று அடம் பிடிக்கிறான். பாடும் போது, துதிக்கும் போது அது உண்மையா என்று ஆராய வேண்டும்.

இன்றைய ஆராதனைகள் பலவற்றில் ஆவியும் இல்லை உண்மையும் இல்லை. இதுதான் 'நாமும் நம்முடைய ஆராதனையும்' என்ற நோக்கில் பார்க்கும் போது புலப்படும் காரியம்.

  • முதலாவது நம்மடைய வாழ்வு ஆராதனையாகவுமில்லை
  • நாம் கூடி ஆராதிக்கும் போது அதில் தேவனுக்கு மகிமை கொடுப்பதும் இல்லை.
  • தேவன் விரும்பும் ஆராதனை செலுத்துவதுமில்லை.


இதற்கெல்லாம் விதிவிலக்காக உண்மையாய் ஆராதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

by- Roberrt Dinesh

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்