f
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

சாட்சியாய் இருப்பீர்கள்.

சுவாரஸ்யமான உண்மைச் சம்பவம்

பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாடு பிரதிகளை அழகாக அச்சிட்டு உலகத்தில் விநியோகித்து வரும் கிதியோன் சர்வதேச ஊழியங்களின்  ஒரு பேச்சாளர் சொன்ன ஒரு அருமையான சாட்சியை நான்  கேட்டேன்.


இந்த நிறுவனத்தார்  புதிய ஏற்பாட்டு வேதாகமங்களை இந்தியாவிலுள்ள பல பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக விநியோகித்து வருவது வழக்கம் அப்படியே இந்தியாவின் மும்பையில்  உள்ள ஒரு பாடசாலைக்கு அதை விநியோகிப்பதற்காக  அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தப் பாடசாலையின் அதிபர் ஒரு ஆர்எஸ்எஸ் காரராக இருந்த படியினால்  அந்த பாடசாலைக்குள் வேதாகமத்தின் ஒரு கதையாவது கொண்டு வரக்கூடாது என்று  பல வருடங்களாகமறுத்துவிட்டார். கிறிஸ்தவம் ஒரு வெளிநாட்டு மதம் கிறிஸ்து ஒரு வெளிநாட்டு கடவுள் ஆகவே அதை இந்த பாடசாலைக்குள் கடைசிவரை அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறி வந்தார்.


அந்தப் பாடசாலையின்  ஆசிரியர்களுக்கான சம்பளம் அண்ணாநகரில் உள்ள ஒரு வங்கிக்கு அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்படும் அந்தப் பாடசாலையிலிருந்து 2 ஆசிரியர்கள் அந்த வங்கிக்கு சென்று அந்த பணத்தை பாடசாலைக்கு எடுத்து வருவது வழக்கம்.  அப்படியே ஒரு முறை அந்த இரண்டு ஆசிரியர்களும் ஒரு ஆட்டோவை பிடித்து அதில் அந்த வங்கிக்கு சென்று ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு ஆட்டோவில் பாடசாலையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்கள் இருவருக்கும் நடுவில் அந்த பணப்பையை அவர்கள் வைத்திருந்தார்கள் ஆனால் பாடசாலை வந்ததும் ஆட்டோவிலிருந்து உறங்கும்போது மறந்துபோய் அதை எடுக்காமல் இறங்கிவிட்டார்கள் நேராக பாடசாலைக்குள் போய்  அதிபர் முன் நின்றார்கள் அதிபர் பணம் எங்கே என்று கேட்கவே இருவரும் ஒருவரை ஒருவர்  பார்த்து முழித்துக்கொண்டு நின்றார்கள். ஐந்து லட்சம் ரூபாய் அந்த பாடசாலையின் எல்லா ஆசிரியர்களுக்கான மொத்த சம்பளம் அதை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் அதிபர் கலங்கி நின்றார்.


 அப்போது ஒரு ஆட்டோ அவர்கள் நடுவில் வந்து நின்றது அதிலிருந்து அந்த ஆட்டோக்காரர் அந்த பையுடன் இறங்கி வந்தார் ஐயா இந்த ஆசிரியர்கள் இந்த பையை என்னுடைய ஆட்டோவுக்குள் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள் அதனால்தான் அதை எடுத்து வந்தேன் என்று அந்த பையை அவரிடம் கொடுத்தார்.

அதிபருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை அந்த ஆட்டோக்காரரை பார்த்து நன்றி செலுத்திவிட்டு இந்த பேக்கை திறந்து பார்த்தீர்களா இதற்குள் என்ன இருக்கின்றது தெரியுமா என்று கேட்டார் அதற்கு அந்த ஆட்டோக்காரர் ஆம் ஐயா திறந்து பார்த்தேன் அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருக்கின்றது அதனால் தான் அதைக் கொண்டு வந்தேன் என்றார் ஆச்சரியப்பட்ட அதிபர் எப்படி உன்னால் முடிந்தது இவ்வளவு பணத்தை கண்டும் நீ எப்படி ஆசைப்படாமல் இதை திருப்பிக் கொண்டுவந்து ஒப்படைக்கிறாய்?  என்று கேட்டார்


 அப்பொழுது அந்த ஆட்டோக்காரர் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சின்னஞ்சிறிய  புதிய ஏற்பாட்டு வேதாகம புத்தகத்தை எடுத்தார் எந்த வேதாகமத்தை தன்னுடைய பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னாரோ அதே வேதாகமம் தான் அது.  அந்த ஆட்டோக்காரர் அந்த வேத புத்தகத்தை காட்டி ஐயா  என்னுடைய மகன் ஒரு பாடசாலையில் ஏழாம் வகுப்பில் படிக்கிறான்  அவனுக்கு இந்த வேதாகமத்தை அவனுடைய பாடசாலையில் இலவசமாக கொடுத்தார்கள்.  என்னுடைய சட்டைப்பைக்குள் நான் இதை எப்பொழுதும் வைத்துக் கொள்வேன் எனக்கு ஆட்டோ சவாரி கிடைக்காத நேரங்களில் இதை எடுத்து நான் வாசிப்பது வழக்கம்  இதில் எபிரேயர் 13:5 இல் நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று ஒரு வசனம் சொல்லப்பட்டிருக்கிறது.  நான் இந்தப் பணத்தை ஆசைப்படாததற்கு காரணம் இந்தப் புத்தகமும் இதில் இருக்கிற இந்த வசனமும் தான் என்று சொன்னார். 


  அதிபருடைய இதயத்தை இந்த வார்த்தைகள் பிளந்தன.  அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டார்.  இவ்வளவு நல்ல போதனைகள் இருக்கிற இந்த புத்தகத்தை என்னுடைய பாடசாலைக்குள் தடை செய்தேன் என்று அவர் வெட்கித் தலை குனிந்தார். அந்த புத்தகத்தில் இருந்த கிதியோன் சர்வதேச ஊழிய நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்களுடைய பாடசாலையை உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள்  திறந்து தருகிறோம் இங்கே நீங்கள் உங்களுடைய இந்த மகத்தான புத்தகத்தை விநியோகிக்கலாம். எப்பொழுது வேண்டுமென்றாலும் நீங்கள் இங்கே வந்து உங்கள் சேவையை செய்யலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார்.


பிரியமானவர்களே இந்த ஒரு ஆட்டோ காரருடைய  சாட்சி வாழ்வு 3000 குடும்பங்களுக்கு சுவிசேஷத்தின் கதவைத் திறந்தது


இதைத்தான்  அப்போஸ்தலர் 1:8 இல் இயேசு சொன்னார் பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். உங்களுடைய சாட்சி வாழ்க்கை அனேகம் ஆயிரம் ஜனங்களுக்கு சுவிசேஷமாயிருக்கும்.  உங்கள் வாழ்க்கை எவ்விதம் இருக்கின்றது? இன்று நாம் சாட்சி சொல்லத்தான் பிரையாசப்படுகிறோமே தவிர சாட்சியாய் வாழ பிரயாசப்படுவதில்லை. வேதம் என்ன சொல்கிறதோ அதைப் பின்பற்றினால் போதும் அதன்படி வாழ்ந்தால் போதும் அதுவே மிகப்பெரிய சாட்சியின் ஜீவியமாக இருக்கும்.

Continue Reading | கருத்துகள்

துன்ப வேளையின் மூன்று பாடல்கள்

வேதாகமத்தில் காணப்படும் பக்தர்களுள் தாவீது, ஆபகூக், மற்றும் பவுல் அகிய மூன்று பேர் தங்கள் துன்ப வேளையைக் குறித்து எழுதிய பாடல்களை கவனித்து அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 3 விடயங்களை காண்போம்.

துன்பங்கள் அவர்களை சூழ்ந்த போது காணப்பட்ட தங்கள் மன நிலையையும், தங்களுடைய துன்ப வேளையைக் குறித்து அவர்கள் மனதில் எழுந்த கேள்விகளையும், முடிவில் தாங்கள் தேவனுக்குள்ளாக எடுத்த தீர்மானத்தையும் அந்த பாடல்களில் எழுதி வைத்துள்ளார்கள். தங்கள் துன்பங்களின் வேளையிலும் அவர்கள் எடுத்துக் கொண்ட தீர்மானமே இங்கு நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விடயமாகும்.


தாவீதின் பாடல்

சங்கீதம் 13:1-6

1.கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 

2.என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக் கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்? 

3.என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவி கொடுத்தருளும், நான் மரண நித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும். 

4.அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாத படிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.


பாடலின் முடிவு

5.நான்  உம்முடைய கிருபை யின்மேல் நம்பிக்யைாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். 

6.கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். 


துன்ப வேளையில் தாவீதின் தீர்மானம்

என்ன நடந்நாலும் தேவனை நம்புவதை விடமாட்டேன் என்பதே தாவீது தன்னுடைய வாழ்வில் எடுத்திருந்த தீர்மானமாகும்.  

நாம் கூட வாழ்வில் எத்தனையோ துன்பங்களை சந்திக்கின்றோம். அந்த துன்பங்கள் நம்முடைய விசுவாசத்தை  சிலவேளை அசைத்து விடுகின்றது. 

ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போல “தேவன் நம்மை தப்புவித்தாலும் தப்புவிக்கா விட்டாலும் அவரையே நம்புகிறவர்களாயிருப்போம்” என்னும் உறுதியுடையவர்களாயிருந்தால் அவர் நம்மை தம்முடைய மனதுக்கு ஏற்றவர்களாக பார்ப்பார். தாவீதை தன்னுடைய மனதுக்கு ஏற்றவனாக கர்த்தர் கண்டாரே. எவ்வேளையும் அவரை நம்புவோம். ஏனெனில் விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருக்க முடியாது.

எபிரெயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.


ஆபகூக்கின் பாடல்

ஆபகூக் 1:2-4

2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாம லிருக்கிறீரே! 

3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப் பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது. வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. 

4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லா மற்போகிறது. துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்கிறான். ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.

 

பாடலின் முடிவு

ஆபகூக் 3:17-19

17.அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப் போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும், 

18.நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். 

19.ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன். அவர் என் கால்களை மான் கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். 


துன்ப வேளையில் ஆபகூக்கின் தீர்மானம்

ஆபகூக் தன்னுடைய துன்ப வேளையில் எடுத்த தீர்மானம் யாதெனில் “என்ன நடந்நாலும் தேவனுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதை விடமாட்டேன்”எல்லா இடங்களிலும் கொள்ளை, கொடுமை, அநியாயம் நடக்கிறது. வழ்வில் தரித்திரம் வாட்டுகிறது, இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இப்படி என்ன என் வாழ்வில் நடந்தாலும் நான் என் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்பதே துன்பத்தின் மத்தியில் ஆபகூக் எடுத்த சிறந்த தீர்மானமாகும்.

‘எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்’(2கொரி7:4.) என்று பவுல் சொல்லுவது நமக்கு முன்மாதிரியாக உள்ளதன்றோ..



பவுலின் பாடல்

ரோமர் 8:35-39

35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், 

36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? 

37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே. 

38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமை களானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், 


பாடலின் முடிவு

ரோமர் 8:39

39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். 


துன்ப வேளையில் பவுலின் தீர்மானம்

என்ன நடந்நாலும் தேவனை நேசிப்பதை விடமாட்டேன்’என்பதே பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய துன்ப வேளையில் எடுத்துக் கொண்ட தீர;மானமாகும். தேவனுடைய ஊழியத்தின் பாதையில் அவருக்கு நேர;ந்த துன்பங்கள் ஏராளம். அவற்றின் மத்தியில் அவர் பாடலின் முடிவாக கூறும் அவருடைய கருத்து என்னவெனில் துன்பங்கள் எதுவும் தேவன் மேலுள்ள என்னுடைய அன்பை குறைக்க மாட்டாது என்பதேயாகும்.

எனவே தேவனுக்கு பிரியமான சகோதர சகோதரிகளே மனிதனுடைய வாழ்வில் துன்பங்கள் வருவது வழமையே. அதிலும் கிறிஸ்தவனுடைய வாழ்வைக் குறித்து சொல்லவே வேண்டாம். உலகில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று இயேசுவே சொல்லியிருக்கிறார;(யோவா-16:33). ஆனால் இயேசு அவற்றை ஜெயித்ததைப்போல நாமும் ஜெயிக்கலாம்.

நாம் இங்கு கவனித்த இந்த மூன்று தீர்மானங்களையும் நாமும் நம் வாழ்வில் எடுக்க வேண்டும்.

இன்று நாம் எடுக்க வேண்டிய மூன்று தீர்மானங்கள்

என்ன நடந்நாலும் தேவனை நம்புவதை விடமாட்டேன்

என்ன நடந்நாலும் தேவனுக்குள் மகிழ்வதை விடமாட்டேன்

என்ன நடந்நாலும் தேவனை நேசிப்பதை விடமாட்டேன்



Continue Reading | கருத்துகள்

சரியான நம்பிக்கை

😔🤜🤜🤜🤽🐢 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாமெல்லாரும் கிறிஸ்துவை நம்புகிறோம்.  அதனால்தான் எமக்கு விசுவாசிகள் என்று பெயர். ஆனால் இந்த உலகில் கிறிஸ்தவர்களாக வாழும் நாம் நம்முடைய நம்பிக்கை சரியானதுதானா என்று பரிசோதிக்க வேண்டியுள்ளது.  நாமெல்லாரும் கிறிஸ்துவை தான் விசுவாசிக்கிறோம். ஆனால் சரியான முறையில் அவரை விசுவாசிக்கிறோமா என்பதே கேள்வி.

 ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்தவனாக வரும்போதே அவனுக்குள் தவறான நம்பிக்கைகள் திணிக்கப்பட்டு விடுகின்றன. நீ கிறிஸ்தவன் ஆகிவிட்டால் உன்னுடைய வாழ்வில் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை, என்ற சிந்தனை  அந்த மனிதனுக்குள் திணிக்கப்பட்டு விடுவதால் அவன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே போராட்டங்கள் வரும்போது அவனுடைய நம்பிக்கையை குறித்து  சந்தேகப்பட ஆரம்பிக்கிறான்.

 வேதாகமத்தில் காணப்படும் பரிசுத்தவான்கள் அனைவரும்  கிறிஸ்துவை குறித்தும் இரட்சிப்பை குறித்தும் சரியான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள்.  சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் நம்பிக்கை சிறந்த உதாரணமாகும்.  இதை குறித்து நாம் தானியேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இவர்கள் ராஜாவை பார்த்து தங்கள் சரியான நம்பிக்கையை அறிக்கையிட்டார்கள். அதாவது “தேவன் எங்களை தப்புவிக்க வல்லவர். அவர் தப்புவித்தாலும் சரி, தப்புவிக்காவிட்டாலும் சரி நாங்கள் எங்கள் தேவனை மட்டுமே பணிந்து கொள்வோம்” என்பதே அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. 

கர்த்தர் எனக்கு நன்மை செய்தால் மட்டுமே அவரை நம்புவேன். என்பது தவறான நம்பிக்கை.  ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நம்மில் பலருடைய நம்பிக்கை தவறானதாகவே இருக்கின்றது. நம்மில் ஒருவருக்கு வியாதி ஏற்பட்டால் அல்லது ஒரு சிக்கலில் நாம் மாட்டிக் கொண்டால் நம்மை சுகமாக்கும் படி அல்லது விடுவிக்கும்படி தேவனை நோக்கி  கதறுகிறோம்.  கொஞ்சம் தாமதமாகும் பட்சத்தில் எங்களுடைய நம்பிக்கை கேள்விக்குறியாகிறது. உடனே சந்தேகப்பட ஆரம்பிக்கிறோம்.   இப்படியான பிரச்சினைகளால் தேவனை சந்தேகித்து பின்வாங்கி போனவர்களும் உண்டு.  

இரட்சிக்கப்பட்டு  விடுவதால் ஒருவருடைய வாழ்வில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று வேதத்தில் எங்கும் இல்லை.  இவ்வுலகத்தில் வாழும் வரையும் பல உபத்திரவங்கள், போராட்டங்கள் உண்டு.  தேவனுக்காக தங்களை முழுவதும் அர்ப்பணித்து வாழுகிற மக்கள் கூட பலவிதமான உபத்திரவங்களை அடைந்தார்கள். உதாரணமாக யோபு தன்னுடைய வாழ்வில் சந்தித்த கொடுமையான உபத்திரவங்கள் மத்தியிலும் அவர் தன்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை.  ஆபேல் தேவனுக்கு பிரியமான பலிகொடுத்தது நிமித்தம் கொலை செய்யப்பட்டார். யேசபேல் காலத்து தீர்க்கதரிசிகள் கொலை செய்யப்பட்டார்கள். தேவனுக்கு உண்மையான ஊழியம் செய்த பவுல் கூட துன்பங்களை அனுபவித்தார்.  இயேசு கிறிஸ்து “உலகத்தில் இனிமேல் உங்களுக்கு எந்த உபத்திரவங்களும் இல்லை” என்று சொல்லவில்லை மாறாக உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன். என்று சொன்னார் .

 நான் தேவனுக்கு பிரியமானவனாய் வாழ்வதனால் எந்த உபத்திரவமும் எனக்கு வராது என்று நம்புவது ஒரு சரியான நம்பிக்கை அல்ல. ஆனால் நான் கிறிஸ்தவனாக வாழ்வதனால் எனக்கு பல உபத்திரவங்கள் வரும் இருப்பினும் நான் அவைகளை மேற்கொண்டு ஜெயம் எடுப்பேன் என்பதுவே சரியான நம்பிக்கையாகும். எந்த பிரச்சினையும் வராதபடி என்னை கிறிஸ்து காப்பார; என்பதல்ல, அவர; என்னை காக்கா விட்டாலும் அவரே தெய்வம் என்று நம்புவதே கிறிஸ்துவில் நாம் வைக்க வேண்டிய சரியான நம்பிக்கையாகும்.

 இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை புதிதாக இரட்சிக்கப்பட்டு சபைக்கு வரும் விசுவாசிகளுக்குள் நாம் புகுத்தினால் எந்த போராட்டமான சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை விட்டு பின்வாங்கி போக மாட்டார்கள். 


Continue Reading | கருத்துகள்

இயேசுவின் ஜெப வாழ்வு


பரலோகத்தில் தேவனோடு தேவனுக்கு சமமாக இருந்த இயேசுக்கிறிஸ்து பூலோகத்திலிருக்கையில் தம்முடைய பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுகிறவராக காணப்பட்டார். அவர் மனுவுருக் கொண்டிருந்தமையால் அவர் ஜெபிக்க வேண்டிய தேவை இருந்தது. அத்துடன் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியை காண்பித்த இயேசு ஜெபத்திலும் முன்மாதிரியை வைத்துப் போனார். 

1பேது 2:21கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடா்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்

தன்னுடைய ஜெப வாழ்வில் இயேசுக்கிறிஸ்து எப்படி நமக்கு முன்மாதிரியை வைத்துப் போனார் என்பதை அறிய அவர் ஜெபித்தமை தொடர்பான வசனங்களை நாம் நோக்கலாம்.

சாயங்காலத்தில் ஜெபித்தார்

மத் 14:23 அவா் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்


அதிகாலையில் இருட்டோடே ஜெபித்தார்

மாற் 1:35 அவா் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்;.


இரவு முழுவதும் ஜெபித்தார்

லூக் 6:12 அந்நாட்களிலே, அவா் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்


மலையின் மேல் ஏறி ஜெபித்தார்

மாற் 6:46 அவா் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்


வனாந்தரத்தில் தனிமையாய் ஜெபித்தார்

லூக் 5:16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.


சீஷரோடு சேர்ந்து ஜெபித்தார்

லூக் 9:18 பின்பு அவா் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவா்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டா்


ஊக்கமாய் ஜெபித்தார்

லூக் 22:44 அவா் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்; அவருடைய வோர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.


ஒரே விடயத்துக்காக மீண்டும் மீண்டும் ஜெபித்தார்

மத் 26:44 அவா் மறுபடியும் அவா்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி,  ஜெபம்பண்ணினார்


முகங்குப்புற விழுந்து ஜெபித்தாரர்

மத் 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்;.

 

உரத்த சத்தமாய் கண்ணீருடன் ஜெபித்தார்

எபி 5:7 அவா் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,


Continue Reading | கருத்துகள்

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.