புனித வேதாகம ஆசிரியர்களின் குறிப்புகள்!
இயேசுக்கிறிஸ்து
முலாம் நூற்றாண்டில் பாலஸ்தீனாவில் வாழ்ந்தவர் என்பது பற்றி ரோம, மற்றும் யூத வரலாற்று
ஆசிரியர்களது குறிப்புகள் அறியத்தந்தாலும், எண்ணிக்கையளவில் அவர்களது ஒரு சில குறிப்புகள்
மட்டுமே நம்வசம் உள்ளன.
கிறிஸ்தவர்களாகிய நமது வேத நூலான திருமறையிலேயே இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களாகிய நமது வேத நூலான திருமறையிலேயே இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.
இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி நாம் அறிந்துள்ளவை அனைத்தும்
அவரைத் தெய்வமாக வழிபடும் கிறிஸ்தவர்களது எழுத்தாக்கம் என்பதனால், அதை ஒரு நம்பகமான
சரித்திர குறிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது என சிலர் வாதிடுகின்றனர். வேதாகமத்தில்
சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுக் கிறிஸ்து ஆதிக் கிறிஸ்தவா்களது விசுவாசத்தினால் சிருஷ்டிக்கப்பட்டவர்
என்றும், உண்மையான இயேசு நாம் அறியாத, வேதாகமம் வர்ணிப்பதைவிட வித்தியாசமான ஒருவர்
என்றும் நவீன இறையியல் உலகம் கருதுகின்றது. “சரித்திர ரீதியான இயேசு, கிறிஸ்தவர்களது
விசுவாசத்தின் கிறிஸ்துவை விட வித்தியாசமானவர்”
(02.01) என்பதே இன்றைய இறையியலாளர்களின் கருத்தாகும்.
பரிசுத்த
வேதாகமத்தில் இரண்டாவது பகுதியான புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களான மத்தேயு,
மாற்கு, லூக்கா, யோவான் என்பவற்றில் இயேசுக் கிறிஸ்துவின் வாழ்வுச் சரிதை குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பு, ஊழியம், பாடு, மரணம், உயிர்த்தெழுதல்,
பரமேறுதல் எனும் விடயங்களை அறிந்திடலாம். எனினும் வேதாகமம் அறியத்தரும் இயேசு சரித்திரத்தில்
வாழ்ந்த இயேசு அல்ல, அவை கிறிஸ்தவ எழுத்தாளர்களின் உருவாக்கம் எனும் கருத்து நவீன கிறிஸ்தவ
உலகில் எழுந்துள்ளமையினால் இயேசுக்கிறிஸ்து உண்மையிலேயே ஒரு சரித்திர நபரா எனும் சந்தேகம்
அநேகருக்கு ஏற்பட்டுள்ளது. “சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள, இயேசுக்
கிறிஸ்துவை ஒரு சரித்திர நபராக காட்டவில்லை என்பதே அநேகருடைய கருத்தாகியுள்ளது
எனவே, இயேசுவின் வாழ்வைப் பற்றி நமக்கறியத்தரும் புதிய ஏற்பாட்டின் சுவிசேஷப்
புத்தகங்கள் சரித்திர ரீதியானவை என்பதற்கான ஆதாரங்களை நாம் அறிந்திருக்க வேண்டியது.
அவசியமாயுள்ளது.
1. அனுபவரீதியாக
கண்டவை எழுதப்பட்டுள்ளது.
இயேசுகிறிஸ்துவின்
வாழ்வைப் பற்றி எழுதப்பட்டுள்ள சுவிசேஷங்களில், அவற்றின் எழுத்தாளர்கள் அனுபவரீதியாக
கண்டவையே எழுதப்பட்டுள்ளன. என்பதை முதலாவதாக நாம் அறிந்திருக்க வேண்டும். இயேசுக்கிறிஸ்துவின்
வாழ்வு சரிதையை வேதாகமத்தில் எழுதியவர்களுள் மத்தேயு, யோவான் என்போர், அவருடைய சீடர்களாவர்.
இவர்கள் இயேசுக்கிறிஸ்துவின் இவ்வுலக ஊழிய காலத்தில் அவரோடிருந்தார்கள். அவர் சென்ற
இடமெல்லாம் அவரோடு சென்றார்கள். அவர் செய்தவைகளையெல்லாம் கண்டார்கள், அவர் சொன்னவைகளையெல்லாம்
கேட்டார்கள். இதனால் இவர்கள் அறியத்தரும் இயேசுக்கிறிஸ்து இவர்கள் அனுபவரீதியாக கண்ட,
சரித்திர ரீதியான இயேசுக்கிறிஸ்துவே என்பதை மறுப்பதற்கில்லை.
இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி
எழுதியுள்ள யோவான், அவரைப் பின்பற்றிச் சென்ற ஆரம்ப சீடர்களின் ஒருவர். இவர் இயேசுவின்
அழைப்பிற்கு உத்தரவாதமளித்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவருக்கு சீடனாகியவர்.
(மாற். 1:19-20) “இவர் இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாளின் ககோதரியான சலோமியின் மகன்”
இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடராக சித்தரிக்கப்பட்டுள்ள இவரிடமே (யோவான்.13:23,20:2,8)
இயேசுகிறிஸ்து மரிக்கும் போது தன்னுடைய தாயாரை ஒப்படைத்தார். (யோவா. 19:26-27) எனவே,
இயேசுவைப் பற்றி எழுதியுள்ள யோவான், அவரை நன்கு அறிந்தவராகவே இருந்துள்ளார். இதனால்
இவருடைய எழுத்துக்கள் சரித்திர ரீதியானவை என்பதை நம்பக்கூடியதாக உள்ளது.
இயேசுவைப்
பற்றி தான் எழுதியவைகளைப் பற்றி யோவான் கூறும்போது, “ஆதிமுதல் இருந்தும் நாங்கள் கேட்டதும்,
எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினால் தொட்டதுமாயிருக்கிற
ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது. பிதாவினிடத்திலிருந்தும்,
எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதை உங்களுக்கு
அறிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். (யேவான். 1.1-2) ஜீவ வார்த்தை என யோவான்
கூறுவது இயேசுக்கிறிஸ்துவையே என்பதை, யோவான். 1:1ஜ 1:14 உடன் ஒப்பிட்டுப் பார்க்கும்
போது அறிந்திடலாம். “இவ்வசனங்களில் கேட்டது, கண்டது, தொட்டுப் பார்த்தது எனும் சொற்பிரயோகங்கள்,
யோவானின் அனுபவம் மெய்யானது என்பதையே நமக்கு அறியத்தருகின்றன.” அவர், அனுபவரீதியாக
தான் கேட்டதையும், கண்டதையும், தொட்டுப் பார்த்ததையும் பற்றியே எழுதியுள்ளார். எனபது
மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
யோவான்
எழுதிய சுவிசேஷத்தை வாசிக்கும் போது, அவர் தன் கண்களால் கண்டதையே எழுதியுள்ளார். என்பதை
அறியக்கூடியதாய் உள்ளது. சம்பவங்களை கண்களால் கண்ட ஒருவரே இச்சுவிசேஷத்தை எழுதியுள்ளார்
என்பதற்கு பல ஆதாரச்சான்றுகள் இதில் உள்ளன. யோவான் தன்னுடைய சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ள
சம்பவங்களை விளக்கி எழுதியிருக்கும் முறை, அவர் அவற்றை தன் கண்களால் கண்டவர் என்பதையே
அறியத்தருகின்றது. யோவானே “அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும்
நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய மகிமையை கண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(யோவா. 1.14) இங்கும், தான் அனுபவரீதியாக கண்டதைப் பற்றியே யோவான் குறிப்பிட்டுள்ளார்
இதில், “கண்டோம்” என்பதற்கு யோவான் பாவித்துள்ள கிரேக்க பதம், சரீரக் கண்களினால் அவதானித்துப்
பார்த்தலையே குறிக்கும் எனவே, யோவான் இயேசுவைப் பற்றி எழுதியுள்ளவை, அவர் அனுபவரீதியாக
கண்டவையாகவே உள்ளன.
யோவானைப்
போலவே இயேசுவைப் பற்றி எழுதியுள்ள மத்தேயுவும் இயேசுவோடிருந்தவராவர். ஆரம்பத்தில்
வரிவசூலிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர், இயேசுவின் அழைப்புக்கு உத்தரவாதமளித்து
அவரைப் பின்பற்றிச் சென்றார். (மத்.9.9) “மத்தேயு ரோம அரசில் பணிபுரிந்தமையினால் நன்கு
படித்தவராகவும், அதே சமயம் வரிசூலிக்கும் தொழில் காரணமாக ஆவணங்களையும் மற்றும் குறிப்புக்களையும்
தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்திருக்க வேண்டும். இதனால் இயேசுவைப் பின்பற்றிச்
சென்ற மத்தேயு, இயேசுவின் செய்திகளையும் குறிப்பெடுத்து வைத்திருக்கலாம். இக்குறிப்புக்களை
உபயோகித்தே மத்தேயு இயேசுவைப் பற்றி தன்னுடைய சுவிசேஷத்தை எழுதியிருக்க வேண்டும். அண்மைக்
காலங்களில், மற்கு எழுதிய சுவிசேஷத்தைப் பார்த்தே மத்தேயு எழுதினார் எனும் கருத்தும்
இறையியல் உலகில் உருவாகியுள்ளது. இது மத்தேயு தன் கண்களால் கண்டவைகளை எழுதவில்லை என்பதற்கான
ஆதாரமாக எடுக்கப்பட்டாலும் கூட, முதலாவது சுவிசேஷம் இயேசுவின் சீடரான மத்தேயுவினாலேயே
எழுதப்பட்டது எனும் ஆதிச்சபையினரது கருத்தக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. ஆரம்பத்திலிருந்தே,
மத்தேயுவின் சுவிசேஷம் முதலாவதாக எழுதப்பட்டதாக நம்பப்பட்டு வந்துள்ளது. எனவே, அவர்
மாற்குவைப் பார்த்து அல்ல மாறாக, தான் இயேசுவைப் பற்றி எழுதிவைத்திருந்த குறிப்புக்களைக்
கொண்டே தன்னுடைய சுவிசேஷத்தை எழுதியிருக்க வேண்டும். இக்குறிப்புக்கள், மத்தேயு இயேசுவோடிருந்த
போது அவரைப் பற்றி எழுதிய குறிப்புக்களாதலால், மத்தேயு எழுதியவையும் அனுபவரீதியாக அவர்
கண்டவையே என்பதை மறுப்பதற்கில்லை.
யோவானும்
மத்தேயுவும் இயேசுவின் சீடர்கள். எனவே அவர்கள் எழுதியவை அவர்கள் அனுபவரீதியாக கண்டவை
என்பதை ஏற்றுக்கொண்டாலும், மற்கு இயேசுவைப் பற்றி எழுதியவை அனுபவரீதியாக அவர் அறிந்து
கொண்டவை அல்ல. என சிலர் தர்க்கிக்கலாம் ஏனென்றால் மாற்கு இயேசுக்கிறிஸ்துவோடிருந்த
அவரது சீடன் அல்ல. ஆயினும், மாற்கு இயேசுவின் சீடரான பேதுருவின் சீடன். பேதுரு மாற்குவை
தன் குமாரன் என்றே குறிப்பிட்டுள்ளார். (1பேது. 5.13) உண்மையில் பேதுருவிடமிருந்தே
மாற்கு இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொண்டார். பேதுருவின் பிரசங்கங்களை அடிப்படையாய்க்
கொண்டு எழுதப்பட்டதே மாற்கின் சுவிசேஷமாகும். பேதுருவின் பிரசங்கங்களை ஒரு ஒழுங்கு
முறையில் சுருக்கமாக தொகுத்து மாற்கு எழுதியுள்ளார். பேதுரு, இயேசுவோடிருந்த முக்கியமான
சீடர்களில் ஒருவராக இருக்கின்றமையினால், இவரிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவல்களை அடிப்படையாய்
கொண்டு எழுதப்பட்ட மாற்கு சுவிசேஷத்திலும், அனுபவரீதியாக கண்டவையே எழுதப்பட்டுள்ளன.
மாற்கு
பேதுருவிடமிருந்து பெற்றவை அனுபவரீதியானவை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, பேதுருவின்
கூற்று அமைந்துள்ளது. பேதுரு தன்னுடைய இரண்டாவது நிருபத்தில், “நாங்கள் தந்திரமான கட்டுக்
கதைகளை பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தை, கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய
கா்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்”
என எழுதியுள்ளார். இயேசுகிறிஸ்து சரித்திரரீதியானவர். அவர் கற்பனை கதாபாத்திரம் அல்ல
என்பதை பேதுரு இவ்வசனத்தில் அறியத்தருகிறார். கண்ணாரக் கண்டதாக பேதுரு கூறுவது, அவர்
இயேசுவின் இவ்வுலக வாழ்க்கைக்கு கண்கண்ட காட்சியாக இருப்பதையே காட்டுகிறது. பேதுரு
இயேசுவின் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி சுவிசேஷம் எதையும் எழுதாவிட்டாலும், தன்னுடைய
இரு நிருபங்களிலும் அவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அப்போஸ்தலர் நடபடிகள்
புத்தகத்திலும் இயேசுவின் இவ்வுலக வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி பேதுருவின் பிரசங்கங்கள்
உள்ளன. இத்தகைய பிரசங்கங்களை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட சுவிசேஷமாக மாற்கு இருப்பதனால்,
அனுபவரீதியாக கண்டவையே மாற்கிலும் எழுதப்பட்டுள்ளது.
2. ஆராய்ச்சி
மூலம் கற்றவை எழுதப்பட்டுள்ளன.
இயேசுகிறிஸ்துவின்
இவ்வுலக வாழ்வைப் பற்றி சுவிசேஷப் புத்தகங்கள் அனுபவரீதியாக கண்டவற்றை மட்டுமல்ல, ஆராய்ச்சி
மூலம் கற்றவற்றை அடிப்படையாய்க் கொண்டும் எழுதப்பட்டுள்ளன. யோவான், மத்தேயு, மாற்கு
என்பனவற்றில் அனுபவத்தில் கண்டவையே எழுதப்பட்டுள்ளன. என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
ஆனால் லூக்காவின் சுவிசேஷம் ஆராய்ச்சி மூலம் கற்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. லூக்கா
இயேசுவோடிருந்து அவரது செயல்களைக் கண்டவரல்ல. ஆனால், இயேசுவைக் கண்ணாரக் கண்டவர்களிடமிருந்து,
அவரது செய்திகளை கேட்டவர்கள் எழுதியவற்றை ஆராய்ந்தும் தான் கற்றவற்றையே லூக்கா எழுதியுள்ளார்.
லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தின் ஆரம்பவரிகளில் இதைப்பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“மகா கனம் பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழு நிச்சயமாக நம்புகிர சங்கதிகளை, ஆரம்பமுதல்
கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே, அவைகளைக் குறித்து
சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய்
விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட சுவிசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய்
உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.” (1:1-4) தான் எழுதும் விடயங்களை லூக்கா
கண்ணாரக் காணாதவராயினும், அவை மானிட சரித்திரத்தில் நடைபெற்றதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியின்
மூலம் பெற்றிருக்கிள்றார்.” “லூக்காவின் ஆராய்ச்சி ஒரு சரித்திர ரீதியான வரலாற்றாசிரியருடைய
ஆராய்ச்சியாகும்
அப்போஸ்தலனாகிய
பவுலோடு சேர்ந்து ஊழியம் செய்த லூக்கா, (பிலே. 24) ஒரு வைத்தியராகவும் இருந்துள்ளார்.
(கொலோ. 4.14) இவர், சிறந்த ஆராய்ச்சி திறன் மிக்க ஒரு கல்லிமான். லூக்கா எழுதிய சுவிசேஷத்தையும்
அப்போஸ்தலர்களுடைய நடபடிகளையும் ஆராய்ந்து படித்த வேத ஆராய்ச்சியாளர்கள், லூக்கா ஒரு
சரித்திர நூலாசிரியர் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். “அக்காலத்தைய கிரேக்க எழுத்தாளர்களுக்கு
நிகரான ஒரு வரலாற்றாசிரியராக லூக்கா திகழ்கின்றார்.” புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின்
கண்டுபிடிப்புக்கள் பல, லூக்கா குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்மையென்பதை நிரூபிப்பதனால்,
அவர் ஒரு சிறந்த வரலாற்றாசிரியராகவே காணப்படுகின்றார்.
லூக்கா
குறிப்பிட்டுள்ள காலக்குறிப்புக்கள், ரோம அரச அதிகாரிகளின் பெயர்கள், அவர்களுடைய பதவிகள்,
பிரதேசங்களின் பெயர்கள் என்பன, பிழையற்றவை என்பதை அண்மைக்கால சரித்திர மற்றும் புதைபொருள்
ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. தன் சுவிசேஷத்தில் ரோம சாம்ராட்சியத்தோடு நம்பந்தப்பட்ட
விடயங்களைக் குறிப்பிடும் லூக்கா, சரித்திரரீதியாக எந்த ஒரு பிழையும் இன்றி, எல்லாவற்றையும்
சரியாகவே எழுதியுள்ளார்.
எனவே ரோமச் சரித்திர விடயங்களை ஆராய்ந்து சரியாக தன் சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ள
லூக்கா, இயேசுகிறிஸ்துவைப் பற்றிய விடயங்களிலும், எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து
சரியாகவே எழுதியிருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே, லூக்கா எழுதியவையும்
அனுபவரீதியாக கண்டவற்றை எழுதிய மற்றைய சுவிசேஷ எழுத்தாளர்களின் குறிப்புக்களைப்போல,
எவ்வித பிழையுமற்ற, முற்றிலும் நம்பகமான புத்தகமாகவே உள்ளது.
-----------------------------By Sir. MS.Vasanthakumar----------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..