இதன் முதல்பகுதியை வாசிக்க click here
1.
யூத
சமுதாய சரித்திர குறிப்புக்கள்
ரோம சாம்ராட்சிய சரித்திர குறிப்புக்கள்
மட்டுமல்ல, இயேசுக்கிறிஸ்து வாழ்ந்த யூத சமுதாயத்தினது சரித்திர குறிப்புக்களிலும்
இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. இவையும் இயேசுக் கிறிஸ்து ஒரு சரித்திர
நபர் என்பதை அறியத்தருகின்றன.
யூத சமுதாய சரித்திர குறிப்புக்களை நாம் இரண்டாக பிரிக்கலாம்.
முதலாவது, யூத வரலாற்றாசிரியரான ஜோசப்பாஸ் என்பவரின் குறிப்புக்கள். மற்றது யூத மத
போதகர்களது குறிப்புக்கள். இவற்றிலும் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி அதிக குறிப்புக்கள்
இல்லை. இதற்கு காரணம், யூத சமுதாயம் இயேசுக் கிறிஸ்துவை தம் மார்க்கத் தலைவராக அல்ல,
மாறாக தம் மார்க்க விரோதியாகவே கருதியது. இதனால் யூதா்கள் இயேசுவைப் பற்றி அதிகமாக
எழுதவில்லை. எனினும் அவரைப் பற்றி அவர்கள் எழுதிய ஒரு சில குறிப்புக்கள், அவர் யூதர்கள்
மத்தியில் வாழ்ந்தவர் என்பதற்கான உறுதியான ஆதாரமாயுள்ளது.
யூத
சமுதாயத்து வரலாற்றாசிரியராக இருப்பவர் (flavius josephus) பிலேவியஸ் ஜோசப்பஸ் என்பவராவா். இவருடைய காலத்தைய
யூத சமுதாயத்தில் இவரே அதிகமாக படித்திருந்த ஒரு மேதையாக இருந்தார். இவருடைய
எழுத்துக்களில், 20 தொகுதிகளைக் கொண்ட “யூதர்களுடைய
பூர்வீகம்” எனும் நூல் மிகவும் பிரசித்தி பெற்ற சரித்திர நூலாகும். இதில் சிருஷ்டிப்பு
முதல் கி.பி.66 வரையிலான யூதர்களுடைய சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. இதில் ஜோசப்பஸ்
இயேசுக் கிறிஸ்துவைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு, இயேசுக்கிறிஸ்துவை
யூத சமுதாயத்தில் வாழ்ந்த ஒரு நபராகவே சித்தரித்துள்ளது.
பொந்தியு
பிலாத்து என்பவன் யூதேயாவின் ஆளுநராக இருந்த காலத்தைய சமுதாயத்தின் நிலையைப் பற்றி
ஜோசப்பஸ் எழுதும் போது, “இக்காலகட்டத்தில் இயேசு எனும் பெயருடைய ஒரு ஞானி பலவிதமான
அற்புத செயல்களை செய்து கொண்டிருந்தார். இவருடைய போதனைகளை மக்கள் விரும்பிக் கேட்டனர்.
இவர் யூதர்களை மட்டுமல்ல, புற ஜாதியரையும் கூடத் தன் பக்கமாக ஈர்த்தார். எமது இனத்தவரின்
முக்கியமான மனிதர்களின் ஆலோசனையின்படி, பொந்தியு பிலாத்து இவரை சிலுவையில் அறையும்படி
தீர்ப்பளித்தான். இவருடைய பெயரிலிருந்து தமது குழுவுக்கான பெயரைக் கொடுத்து கிறிஸ்தவர்கள்,
இன்றும் அழியாமல் நம் மத்தியில் உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இயேசுக்
கிறிஸ்து பொந்தியு பிலாத்துவின் காலத்தில் யூதேயாவில் வாழ்ந்தவர் என்பது இச்சரித்திர
குறிப்பிலிருந்து தெளிவாகிறது.
யூத
சமுதாய வரலாற்றாசிரியரான ஜோசப்பஸ் மட்டுமல்ல, யூதமத போதகர்களின் நூல்களிலும் இயேசுக்கிறிஸ்துவைப்
பற்றி சில குறிப்புக்கள் உள்ளன. யூதமத போதகர்கள் தமது நூல்களில் மதக் கருத்துக்களுக்கே
முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளமையினால் அவற்றில் ஒரு சில சரித்திர குறிப்புக்கள்
மட்டுமே உள்ளன. எனினும் அவற்றில் ஒரு சில இடங்களில் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றியும்
எழுதப்பட்டுள்ளன.
அவர்களுடைய மத நூல் ஒன்றில, “நசரேத்தூரானான இயேசு மந்திர செயல்கள்
மூலமாக இஸ்ரவேல் மக்களை தவறான வழியில் இட்டுச்சென்றார்” “ஒரு பஸ்கா தின மாலையில் இயேசுவை அவர்கள் தொங்க விட்டார்கள்”
என்றும் குறிப்பிட்டுள்ளது.
“ஏனைய மதப் போதகர்களுடைய நூல்களிலும் இயேசு கிறிஸ்துவைப்
பற்றிய இதேவிதமான குறிப்புக்களே உள்ளன. யூத மத போதகர்கள் இயேசு கிறிஸ்துவை
எதிர்த்ததோடு, அவருடைய போதனைகள் பிழையானவைகள் என கூறினாலும் கூட, அவர் தமது சமுதாயத்தில்
வாழ்ந்ததை அவர்கள் மறுதலிக்கவேயில்லை. இயேசுக்கிறிஸ்து முதலாம் நூற்றாண்டில் யூத சமுதாயத்தில்
வாழ்ந்த ஒரு சரித்திர நபர் என்பதே எல்லா புரதான சரித்திர நூலாசிரியர்களும் அறியத் தரும்
சத்தியமாகும்.
------------------------------By Sir. MS.Vasanthakumar----------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..