நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » ஐசுவரியவான்கள் பரலோகத்துக்கு போக முடியாதா?

ஐசுவரியவான்கள் பரலோகத்துக்கு போக முடியாதா?



வேதத்தில் காணப்படும் இந்த வசனம் பலரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை.
மாற்கு 10:25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

இந்த வசனத்தை பார்த்தால் “ஐசுவரியவான்கள் பரலோகத்துக்கு போக முடியாது” என்ற ஒரு கருத்தை நேரடியாக இயேசு கூறுவது போல காணப்படும். இவ்வசனம் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் காணப்படும் போதிலும், மாற்கு நூலில்தான் இதற்குரிய சரியான விளக்கத்தை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தியுள்ளார். 
மாற்கு 10ம் அதிகாரம் 22 தொடக்கம் 25ம் வசனம் வரை வாசித்து பார்த்தால் இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். முதலில் இயேசு “ஐசுவரியவான்கள் தேவனுடைய ராட்சியத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது” என்று சொல்கிறார். அப்போது சீடர்கள் அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆச்சரியப்படுகிறதைக் கண்டவுடன், அதை அவர்களுக்கு விளக்குமுகமாக “ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் தேவனுடைய ராட்சியத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது” என்று கூறினார்.
அதாவது இங்கே இயேசு கூறவருவது யாதெனில், ஐசுவரியவான்களல்ல, தங்கள் ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் ஐசுவரியவான்களே பரலோகத்தில் பிரவேசிக்க மாட்டார்கள். 
அது மட்டுமல்ல ஐசுவரியவான்கள் பரலோகம் போக மாட்டார்கள் என்னும் கருத்தை இயேசு கூறியிருக்க மாட்டார். ஏனெனில் விசுவாசிகளுக்கெல்லாம் முன்னோடியான ஆபிரகாம் கூட மிகுந்த ஆஸ்தியுள்ள ஐசுவரியவான். (ஆதியாகமம் 13:2 , ஆதியாகமம் 24:35) இயேசு கூறிய உவமையில் ஆபிரகாமின் மடியில் லாசரு தேற்றப்பட்டார். (லூக்கா 16:23) அப்படியானால் “ஆபிரகாம் நரகத்தில் இல்லை” என்பது இயேசுவின் கருத்து.
மேலும் “ஐஸ்வரியமும் கனமும் தேவனாலே வருகிறது” என வேதம் கூறுகிறது(Iநாளாகமம் 29:12) தேவனே ஐசுவரியத்தை கொடுத்து விட்டு, ஐசுவரியவானை நரகத்தில் தள்ளமாட்டார். தேவனை நம்பாமல் ஐசுவரியத்தை நம்புபவனே பரலோகம் போக முடியாது.
தங்கள் ஆஸ்திகளால் சில ஐசுவரியமுள்ள பெண்கள் இயேசுவுக்கு ஊழியம் செய்தார்கள். (லூக்கா 8:3) என வேதம் கூறுகிறது.

எனவே ஐசுவரியவானாய் இருப்பது பாவமல்ல. “ஐசுவரியவானாய் இருப்பவன் பரலோகம் போக முடியாது” என்பது பொய்யானதாகும். தன் ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைப்பவனே பரலோகத்துக்கு போக முடியாது. இப்படிப்பட்டவன் பரலோகத்துக்கு போவதைக் காட்டிலும் ஒட்டகம் ஊசியின் துளைக்குள் நுழைவது இலகுவானது. ஊசியின் வாசல் என்று ஒரு வாசல் இருப்பதாக சொல்லப்படுவதெல்லாம் சும்மா கட்டுக் கதைகளாம்………


---------------------------------------------------------by-Robert Dinesh----------------------------------------
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்