Dwight L. Moody |
டி.எல்.மூடி அவர்கள் சிகாகோ நகரில் YMCA கட்டட நிதிக்காக பல பல பணக்காரர்களிடம் ஓடோடிச் சென்று கடும் உழைப்பினாலும் முயற்சியினாலும் மன பாரத்துடன் நிதி திரட்டிக் கொண்டிருந்தார்.
அக்காலங்களில் ஒரு முறை அவர் பிரிஸ்டல் நகருக்குச் சென்றார். அப்பட்டணத்தில் இறையடியான் ஜார்ஜ் முல்லர் நடத்தி வந்த அற்புத ஊழியத்தைக் கண்டு மூடி பிரமிப்படைந்தார். இது பற்றி அப்போது அவர் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தார்.
George Muller |
'இந்த பிரிஸ்டல் பட்டணத்தில் ஜார்ஜ் முல்லரின் சிறப்பான தொண்டாற்றும் பெரிய அனாதைப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் 1150 பிள்ளைகள் தங்கி ஆதரவு பெறுகின்றனர். ஆனால் அவர்களது பராமரிப்புக்காக முல்லர் யாரிடமும் பணம் தேவையென்று ஒரு பைசா கூட கேட்டு வாங்குவது கிடையாது. அவர் ஆண்டவரிடமே தனது தேவைகளுக்காக முறையிடுகிறார். ஆண்டவரே அவருக்குப் பணம் அனுப்புகிறார். ஜெபிக்கும் ஒரு மனிதனுக்கு ஆண்டவர் செய்யக்கூடிய அற்புதத்தை நான் நேரில் கண்டு ஆச்சரியப்படுகிறேன்' என்று அதில் எழுதியிருந்தது.
ஜார்ஜ் முல்லர் யாரிடமும் கேட்காமலேயே ஆண்டவரால் ஏவப்பட்ட தேவ மக்களால் அவருடைய பெரும் நிதித் தேவைகள் சந்திக்கப்பட்டன. மூடி தன்னுடைய முயற்சியையும், முல்லரின் அர்ப்பணிப்புள்ள விசுவாசத்தையும் ஒப்பிட்டு பார்த்து சிந்திக்கலானார். மனிதரிடம் கேட்காமல் தேவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்வதே கிறிஸ்தவனுக்கு அழகு என்பதை புரிந்து கொண்டார்.
ஒருமுறை அவர் முல்லரை சந்தித்த போது தான் கட்டட நிதி சேகரிக்க பட்டுவரும் பிரயாசங்களை அவரிடம் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். முல்லரோ சற்றும் அதைக் கண்டுகொள்ளாமல் மூடியைப் பார்த்து 'நீ ஆண்டவருக்காக என்ன செய்யலாம் என்று சிந்திக்கிறாய். ஆனால் ஆண்டவர் உனக்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து கொண்டிருக்கிறார். நீ மனிதரிடம் கேட்பதையல்ல தன்னிடம் கேட்பதையே ஆண்டவர் விரும்புகிறார்'. என்றார்.
இன்று 'கட்டட நிதிக்காக 10,000 ரூபாய் தரக் கூடிய 1000 பேர் இங்கு இருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்' என்று தீர்க்கதரிசனம் கூறும் ஊழியக்காரர்கள் பற்றி நியாயம் தீர்க்க எனக்கு அருகதையில்லை. அது சரியா தவறா என்று கூட எனக்கு தெரியவில்லை.
ஆனால் நான் பூட்டப்பட்ட அறையிலிருந்து தேவனிடம் கேட்பதே சிறந்ததென்று நம்புகிறேன். சில வேளைகளில் நான் மனிதரிடம் ஊழியத்துக்காக பணம் சேகரித்து ஊழியம் செய்துள்ளேன். ஆனால் என்னை ஊழியத்துக்கு அழைத்தது மனிதரல்ல தேவனே. எனக்கு ஊழிய தரிசனத்தையும் திட்டத்தையும் தந்தது தேவனாக இருந்தால், நான் மனிதரிடம் ஒரு சதம் கூட கேட்கத் தேவையில்லை, ஏனெனில் திட்டத்தை தந்தவர் அதை நிறைவேற்ற தேவையான பணத்தை தரமாட்டாரோ? இனிமேல் ஊழியத்தை தந்தவரிடம் உரிமையோடு கேட்டுப் பெற்றுக் கொள்வேன். அதுவே அவரது விருப்பமும் கூட. தேவையானதை தராவிட்டால் ஊழியத்தை செய்யாமல் விட்டு விடுவேன். மனிதனிடம் கையேந்துவதை விட இதுவே சிறந்ததாக எனக்கு தோன்றுகிறது.
---------------------Roert dinesh-------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..