நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , » உன் எல்லை அதுவல்ல, இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்

உன் எல்லை அதுவல்ல, இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்

டிமென்டஸ் ஒரு கிரேக்க ஓவியன். பிரசித்தி பெற்ற ஒரு பயிற்சியாளரிடம் பல ஆண்டுகளாக ஓவியக்கலை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு வந்தான்.

பல மாதங்கள் திட்டமிட்டு கடுமையாக முயன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்க கூடிய ஒரு ஓவியத்தை மிக நேர்த்தியாக நவீன முறையில் சிறப்பாக வரைந்து முடித்தான்.

கலை நயத்தோடு வரையப்பட்ட அந்த ஓவியம் ஓவியக்கலை கற்றுத் தேர்ந்த பயிற்சியாளரை மட்டுமல்ல அதை வரைந்த டிமென்டஸையும் பிரமிக்க வைத்தது.


அனைவரும் மெச்சும்படியான தன் செயலில் அளவு கடந்த மகிழ்ச்சியுற்ற டிமென்டஸ் அனுதினமும் தான் வரைந்த ஓவியத்தை ரசித்து வந்தான்.

அந்த ஓவியத்தி்ன் ஒவ்வொரு உருவமைப்பும், அதற்கு மேலாக சிறப்பான விதத்திலே இனி ஒரு ஓவியத்தை ஒருநாளும் வரைய இயலாது என்ற எண்ணத்தை டிமென்டஸ் இன் உள்ளத்தில் தோற்றுவித்தது.

தன் மாணவனின் நிலையை ஓரளவு கணித்துக் கொண்ட பயிற்சியாளர் மிகவும் வருந்தினார்.

முதிர்ச்சி பெற வேண்டிய டிமென்டஸின் ஓவியக் கலையறிவு ஆரம்ப நாட்களிலேயே அரைகுறையாக நின்று விடுவதை விரும்பாத அவர் தீவிரமாய் ஒரு வழியை யோசிக்கலானார். அதை கச்சிதமாக செய்து முடித்தார்.

மறுநாள் காலை டிமென்டஸ் வழக்கம் போல தன் ஓவியத்தை பார்க்கும் படி ஆவலோடு வந்தான், பார்த்த அவன் திடுக்கிட்டான்.

தன் உயிரைப்போல நேசித்த அந்த ஓவியம் தண்ணீர் ஊற்றப்பட்டும் கீறி கிழிக்கப்பட்டும் சேதமாகி கிடந்தது.

டிமென்டஸின் கண்களில் கோபக்கனல் பறந்தது. உள்ளம் கொதித்தது. கண்ணீரோடு வேகமாக பயிற்சியாளரிடம் ஓடினான். மாஸ்டர் யார் என்னுடைய ஓவியத்தை அப்படி அலங்கோலப்படுத்தியது? யாருக்கு இந்தளவு தைரியம் வந்தது? சொல்லுங்கள் என ஆக்ரோஷமாய் கத்தினான்.

அவனது துடிப்புக்களை எவ்வித சலனமுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார் மாஸ்டர். பின் மெல்ல டிமென்டஸின் அருகில் வந்து அவன் தோள்களைப் பிடித்து,

“டிமென்டஸ் ஆத்திரமடையாதே! அதை செய்தது நான்தான்” என்றார்.
நீங்களா? என கண்கள் அகல பார்த்த டிமென்டஸிடம் “ஆம் நானேதான் உன் நன்மைக்காகவே அப்படிச் செய்தேன்” என்றார் புன்முறுவலோடு.

குழப்பமடைந்த மாணவன் என்ன என் நன்மைக்காகவா? எனக் கேட்க பயிற்சியாளர் தொடர்ந்தார்.

“இயற்கையை அருமையாய் பிரதிபலிக்கும் அந்த அழகான ஓவியம் உன் வளர்ச்சியை தடை செய்தது. அந்த ஓவியம் தலைசிறந்ததாக உன் கண்களுக்கு தெரிந்தாலும் அது பூரணமானது அல்ல. உன் கலைப்பணியை மறுபடியும் தொடரு. இதை விட சிறப்பாக உன்னால் செய்ய முடியுமா என்று முயன்றுபார்” என்றார்.

அவருடைய அறிவுரையை சவாலாக ஏற்றுக் கொண்ட டிமென்டஸ் மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

யோசித்தான்… பல மாதங்கள் தீவிரமாய் யோசித்தான்.

அவன் எண்ண வலையில் ஓர் எடுப்பான உருவம் அகப்பட்டது. கற்பனையின் எல்லைவரை சென்று அதை வடிவமைத்தான். பற்பல வர்ணங்களால் அதை வடிவமைத்தான். குறை நிறைகளை சிந்தித்து சீர்படுத்தினான்.

முற்றுப் பெற்ற அந்த ஓவியம் ஒருநாள் பயிற்சியாளர் முன் வைக்கப்பட்டது.

முன்பு வரையப்பட்ட ஓவியத்தைப் பார்க்கிலும் புதிய அணுகுமுறையில், பல மடங்கு மேன்மையான முறையில் வரையப்பட்ட அந்த உயிரோவியத்தை வர்ணிக்க வார்த்தைகளின்றி வாயடைத்து பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பயிற்சியாளர்.

பின் கண்களில் கண்ணீர் மல்க தன் மாணவனைத் தழுவி “டிமென்டஸ் இப்படியொரு உயிரோவியத்தை வரைய எப்படி உன்னால் முடிந்தது?” எனக் கேட்டார்.

அகமகிழ்ந்த டிமென்டஸ் “மாஸ்டர் இது என்னாலல்ல, உங்கள் திட்டத்தாலேயே முடிந்தது“ என்றான்.

பூரண திருப்தி இருவர் முகங்களிலும் பளபளத்துப் பளிச்சிட்டது.
அந்த ஓவியம் கலை உலகத்தின் ஓர் அரிய சாதனை என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டது.

டிமென்டஸின் உயிரோவியமே பழங்காலத்தின் தரமான ஓவியமாக இன்றும் போற்றப்படுகிறது.

சில சமயங்களில் நம்முடைய பணிகளையும், சேவைகளையும், சாதனைகளையும் எண்ணி பெருமிதத்தோடு திருப்தியடைகிறோம். இந்நிலையில் எதிர்பாராத சில சம்பவங்களை தேவன் அனுமதிக்கும் போது ஏனென்று தெரியாமல் குழம்பி விடுகிறோம்.

நம் எல்லை அதுவல்ல. இன்னும் வளர்ச்சியடைய வேண்டும் என்றே அப்படிச் செய்கிறார் என்பதை முன்னிருந்ததை விட மேன்மையானதை நம்மைக் கொண்டு தேவன் செய்யும் போது பின்நாட்களில் நாம் கண்டு கொள்வோம்.


“எழுந்திரு… நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகு தூரம்“ 1இராஜாக்கள்-19:07

-----------------------------------------------------------துதி மலர் 1996------------------------------------------------------
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்