‘நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் தீங்கனுபவி.’
2தீமோத்தேயு 2.3
மனதுக்கு இதமானதும், மகிழ்ச்சி தரக்கூடியதுமான ஏராளமான வாக்குத்தத்தங்கள், ஆலோசனைகள், ஆறுதல் மொழிகள் குவிந்து கிடக்கும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து குறிப்பாக இந்த வார்த்தையை சுட்டிக்காட்டும் போது சற்றுக் கடினமாகவே இருக்கும். கிறிஸ்தவ வாழ்வு என்பது சாதாரண மகிழ்ச்சி அல்ல; அது நித்திய மகிழ்ச்சி.
ஆனால், அந்த மகிழ்ச்சியானது, இன்னொருவரின் வேதனையில் உருவானது என்பதை நாம் மறந்து விடுகிறோம். ஒருவா் நமக்காக துக்கத்தை சுமந்திராவிட்டால் இந்த மகிழ்ச்சி நமக்கு எட்டியிராது. இந்த நன்றி நமக்கு இருக்குமானால், நமது வாழ்விலும் வேதனையுடன் கூடிய மகிழ்ச்சி அல்லாத எந்தொவொரு மகிழ்ச்சி ஆரவாரமும் நமக்கு உதவாது என்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயங்கமாட்டோம்.
ஆனால், அந்த மகிழ்ச்சியானது, இன்னொருவரின் வேதனையில் உருவானது என்பதை நாம் மறந்து விடுகிறோம். ஒருவா் நமக்காக துக்கத்தை சுமந்திராவிட்டால் இந்த மகிழ்ச்சி நமக்கு எட்டியிராது. இந்த நன்றி நமக்கு இருக்குமானால், நமது வாழ்விலும் வேதனையுடன் கூடிய மகிழ்ச்சி அல்லாத எந்தொவொரு மகிழ்ச்சி ஆரவாரமும் நமக்கு உதவாது என்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயங்கமாட்டோம்.

தீமோத்தேயு :-

“பல சாட்சிகளுக்கு முன்பாக நான் உனக்கு ஒப்புக் கொடுத்த சுவிசேஷ செய்தியை, உண்மையாய் போதிக்கக் கூடியவர்களிடம் நீ ஒப்புவி. அதே சமயம் நீயும் அந்த சுவிசேஷத்தின் நிமித்தம் நல்ல போர்ச் சேவகனாயிரு. நான் உனக்கு ஒப்புவித்ததை பிறரிடம் ஒப்புவிப்பதுடன் உன் வேலை முடியவில்லை, நீயும் அதற்காக வாழ வேண்டும்” என்ற கருத்தில் பவுல் தீமோத்தேயுவுக்கு வலியுறுத்துவதைக் கவனிக்க வேண்டும்.
யார் இந்த தீமோத்தேயு?

வாலிபனே உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது? உன்னை நம்பி அந்த பொறுப்பை தேவன் கையளித்திருக்கிறார் நீ ஏந்தி நிற்கும் இந்த சுவிசேஷ சுடர் அணைந்துவிடாமல் எங்கும் ஒளி வீச வேண்டுமானால், உன் சிலுவையில் நீ உயர்த்தப்பட வேண்டும். அந்த சுவிசேஷத்தினிமித்தம் நீ உன் சிலுவையை சுமந்தே ஆகவேண்டும். முடியுமா?
தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய இரண்டாம் நிருபம்:-


பல கடின சூழ்நிலைகளிலும் சிறையிருப்புகளிலுமிருந்து சபைகளுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் பவுல் எழுதிய நிருபங்களில் கடைசி நிருபமே தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் நிருபம். அவர் மரணத்தைச் சந்திக்கின்ற கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். வியாதிப்பட்டோ, வயது முதிர்ந்தோ அல்ல, நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த விசுவாசத்தினிமித்தம் மரண தண்டனை பெற்றவராக சிறையில் இருந்தார். வீடடுச் சிறையில் பல தடவைகள் பவுல் வைக்கப்பட்டிருந்த போது, ஒரு சில நெருக்கமானவர்கள் அவரிடம் போக்கும் வரத்துமாகவும் இருந்தார்கள். ஆனால், இந்த இரண்டாம் நிருபத்தை எழுதிய போது பவுல் தனிச்சிறையிலே வைக்கப்பட்டிருந்தார். லூக்காவையும், எழுதுகின்ற காகிதத் தாள்களையும் தவிர அவருடன் யாரும் இருக்கவில்லை.
ஆக, தன்னுடைய கடைசி வார்த்தைகள் அடங்கிய இந்த நிருபத்தை பவுல், எத்தனை பெரியவர்கள் மூப்பர்கள், அப்போஸ்தலர்கள் இருக்க, தீமோத்தேயுவுக்கே அனுப்பினார் என்றால், அந்த வாலிபனுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை ஒவ்வொரு வாலிபனும் சிந்திக்க வேண்டும். அவன் சாதாரண மனிதன், வாலிபன், தகப்பனில்லாமல்தான் வளர்ந்தவன். ஆனால் பவுலின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் வாழ்ந்தான். இரவும் பகலும் இடைவிடாமல் பவுலினால் நினைவு கூறப்பட்டவன் தீமோத்தேயு. இவனுடைய கண்ணீர் பவுலை அசைத்திருந்தது. தீமோத்தேயுவின் மாயமற்ற விசுவாசத்தை பவுல் அறிந்திருந்தான் இந்த ஒரு வாலிபனால் இப்படியான வாழ்வு வாழலாம் எனில், வாலிபனே, ஏன் உன்னால் முடியாது. உனக்கு முடியும்; ஆனால் முயற்சிதான் இல்லை.
கி.பி 66-67ம் ஆண்டளவில் இதனை எழுதி முடித்த பின், ஓரிரு ஆண்டுகள் விடுதலை பெற்றிருந்தாலும், திரும்பவும் கைது செய்யப்பட்ட பவுல் சிரைச்சேதம் செய்யப்பட்டார் என்று சொல்லப்படுகிறது, இப்படியிருக்க இந்த நிருபத்தை தீமோத்தேயு எத்தனை தரம் திருப்பித் திருப்பி படித்தாரோ, அழுதழுது படித்தாரோ யாரறிவார்! ஏனெனில் இது பவுலின் கடைசிக் கடிதமல்லவா!
வாலிபனுக்கு ஒரு செய்தி :-
வாலிபர்களை வாலிபர்களின் வழியில் நின்றுதான் வழிநடத்த வேண்டும். இன்றைய வாலிபர்களுடைய விருப்பங்களை உடனடியாக முறித்து, அவர்களை வெளியே கொண்டுவர முடியாது. அவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது, வயதுக்குரிய காரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பலர் பலவாறாக இன்று அபிப்பிராயம் சொல்வதுண்டு.
ஆனால் பவலின் வார்த்தைகள் வித்தியாசமானவை. இயேசு ககிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம் தான் பாதகன் போல கட்டப்பட்டிருப்பதை கூறிவிட்டு, நீயாவது சுகமாக இரு என்று சொல்லாமல், நீ கேட்டவைகளை உண்மையுள்ளவர்களிடத்தில் ஒப்புவி; ஆனால், “நீயோ இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் தீங்கனுபவி” என்று எழுதியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமா! ஆம் அதுதான் ஒரு கிறிஸ்தவன் செல்ல வேண்டிய வழி. இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் அதாவது அவருடைய சுவிசேஷத்தினிமித்தம் இவ்வுலகில் அவன் அனுபவிக்கும் பாடுகள் தான் அவனுக்கு மகிழ்ச்சி. “நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது” என்று எழுதிய பவுல், தனக்கு முன்னே இருக்கிற மரண ஆக்கினை நீங்க வேண்டுமென்றோ, தாங்கிக்கொள்ள பெலன் வேண்டியோ ஜெபிக்குமபடி கேட்டு எழுதினாரா? இல்லை “நல்ல போராட்டத்தை போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்” என்று வீரமுழக்கம் இடுவதையே காண்கிறோம்.
நல்ல போர்ச்சேவகன்:-
அது என்ன நல்ல போர்ச்சேவகன்? ஆம், ஒரு போர்வீரன் எப்போதும் தன் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவனாக இருபான். அவன் தன் சாவைக் குறித்து அல்ல, தன் பணியைக் குறித்தே கவனமாயிருப்பான், இருக்கவேண்டும். தனக்கு முன்னே சாவு இருப்பதை தெரிந்தும், போரில் முன்னேறிச் செல்கிறவன்தான் போர்வீரன். ஒரு தடவை பணியில் ஈடுபட்டு விட்டால், அதன் பின் தன் சாதாரண வாழ்வைக் குறித்தோ, வேறு அலுவல்கள் குறித்தோ அவன் சிந்திக்க முடியாது,
அடுத்து, அவனுடைய கீழ்ப்படிவு. அவனுக்கு இடப்படுகின்ற கட்டளைக்கு அவன் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். அந்த ஒழுக்கம் மிக முக்கியம். அவன் போ என்றால் போகவேண்டியவன். அடுத்து என்ன என்பது அவனது காரியமல்ல அவனுடைய கட்டளை அதிகாரி என்ன சொல்கிறாரோ அதுவே அவனுக்கு வேதவாக்கு. அவனுடைய உண்மைத்துவம் மிக மிக முக்கியம்.
ஆக மொத்தமாக, அவன் அவனாக அல்ல, அவன் ஒரு போர்வீரனாக சேவகம் புரியவேண்டியவனாக ஒழுக்க நெறிக்கு கட்டுப்பட்டவனாக இருப்பான் இப்படிப்பட்ட ஒருவனாக, கிறிஸ்து என்ற கட்டளை அதிகாரிக்குக் கீழ்ப்பட்டவனாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் இவ்வுலகிற்கு எதிராகப் போர் புரியும் சேவகராக பணிபுரியவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். வாலிபனே, உன் காரியம் என்ன? உலகம் தரும் சந்தோஷங்கள் பாதுகாப்புகள் யாவையும் விட்டு, கட்டளைக்கு கீழ்ப்படிவதும், சொந்த விருப்பு வெறுப்புகள், தற்கால நாகரீக காரியங்கள், வாலிப சந்தேஷங்களை எல்லாம் விட்டு முழுமையான அர்ப்பணத்துள் கடந்து வருவதும் உனக்கு பெரும் கஷ்டமாக இருக்குமே! அப்படியானால் நீ எப்படி கிறிஸ்துவின் போர்சேவகனாக முடியும்?
பவுலின் கடைசி வேண்டுகோள்:-
“சமயம் வாய்த்தாலும் வாய்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி கடிந்து கொண்டு, புத்தி சொல்லு.” 2தீமோ 4.2 இதுதான் பவுல் தீமோத்தேயு என்ற வாலிபனுக்குக் கொடுத்த கடைசிக் கட்டளை.
பவுலின் கடைசி ஆலோசனை என்ன தெரியுமா? “நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவு உள்ளவனாயிரு; தீங்கனுபவி; சுவிசேஷகனுடைய வேலையைச் செய். உன் ஊழியத்தை நிறைவேற்று.” 2தீமோ 4.5
வாலிபனே இன்று உன் வாழ்வின் நிலைமை என்ன? போர்க்களத்தில் நிற்க வேண்டிய நீ எங்கே நிற்கிறாய்? நீ சுமக்க வேண்டிய சிலுவை எங்கே? இந்த நாட்களில் சந்தோஷங்கள், நாகரீகங்கள், நாளாந்தம் வெளிவருகின்ற புதிய புதிய கவர்ச்சியான காரியங்கள், இளமை உணர்வின் அனுபவங்கள் இன்னும் எத்தனையோ! இவை யாவையும் விட்டு விட்டு சிலுவை சுமப்பதா? வாழ்வை அனுபவிக்கும் வயதில் அனுபவிக்காமல் பின்னர் எப்போது அனுபவிப்பது? வாதம் நியாயமானதுதான். ஆனால், நமது ஆயுசு நாட்கள் நமது கைகளில் இல்லையே. ஒவ்வொரு மனிதனும் எந்த வயதுவரைக்கும் வாழுகிறான் என்பதல்ல, வாழும் காலத்தில் என்ன செய்தான் என்பதுவே காரியம்.

உலக வாழ்வு அணையப்போகும் இறுதி நேரத்திலும், எல்லாராலும் கைவிடப்பட்டுத் தனித்து நின்ற வேளையிலும், பவுலடியார் சொன்ன காரியம் நம்மை சிந்திக்க வைக்கட்டும். “கர்த்தரோ எனக்கு துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும் என்னை பலப்படுத்தினார். கர்த்தர் எல்லா தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார். அவருக்கு சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்” என்பதே.
வாலிபனே! நீ எதற்கும் இனிக் கலங்கவோ தயங்கவோ அவசியமில்லை. வேதனையும் மகிழ்ச்சியும் இணைந்ததுதான் கிறிஸ்தவ வாழ்வு. உலகம் தரும் இன்பங்கள் இடரில் இருந்து இடம் தெரியாமல் இல்லாமற்போய்விடும். பாடுகளுக்கூடாக கிடைக்கின்ற வெற்றிக் களிப்புக்கு எதுவும் ஈடாகாது. சிலுவை சுமப்பது, சுவிசேஷத்தினிமித்தம் தீங்கனுபவிப்பது, நல்ல போர்சேவகனாய் தண்டிலே சேவகம்பண்ணுவது எதைக் குறித்தும் பயப்படாதே. உன்னை அழைத்த தேவன் முடிவுபரியந்தம் கூடவே இருந்து வழிநடத்த வல்லவர்.
உன் கையிலுள்ள சுவிசேஷ சுடர் அணைந்து விடாதபடி மாத்திரம் கவனமாயிரு. அதன் ஒளி பரந்து வியாபிக்க வேண்டும். அதற்கு நீ உன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இன்று இது கடினமாகத் தோன்றினாலும், இறுதியிலே, “உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே, உன் எஜமானின் சந்தோஷத்தில் பிரவேசி” எனற சத்தம் தொனிக்கும் போது அந்த மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடாகாது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
-------------------------------நன்றி சத்தியவசனம்------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..