இளைஞர்களே! விழித்தெழுங்கள்.. எதிர்காலம் நம்முடையதே..........
சந்தோஷமும், கேளிக்கையும உல்லாசமும் இளைஞர்களுக்கு அவசியமானதே. அதேபோல வாழ்வுக்கு ஒரு எதிர்கால நோக்கத்தையும் திட்டத்தையும் அமைக்க வேண்டியதும் அவசியமானதே.
பொதுநலம் கொண்ட வாழ்க்கை நல்லதுதான்.
ஆனால் தனிப்பட்ட உன்னுடைய வாழ்வும் உனக்கு முக்கியமானதே. நண்பர்கள் வாழ்வுக்கு வேண்டியவர்கள் தான். ஆனால் அவர்களே உன் வாழ்க்கையாகிவிட முடியாது. ஏனென்றால்உன்னுடைய சந்தோஷமும், உல்லாசமும், பொதுநலமும், நண்பர்களும் உன்னை கைவிடும் ஒரு நாள் வரும்.
இதை வாசிக்கும் இளைஞனே! உனக்கென்று ஒரு தீர்மானத்தை அல்லது ஒரு தெரிவை நீ மேற்கொள்ள வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வரும் வேளையில் நீ சகலராலும் கைவிடப்படுவாய்.
உன் பெற்றோர் உன்னிடம் ' நன்கு யோசித்து முடிவெடு ' என்று சொல்லி முடிவெடுக்கும் அந்த நிமிடத்தில் உன்னைக் கைவிடுவார்கள்.
நீ இப்போது எடுக்கும் ஒரு தீர்மானம் சிலவேளை உன்னை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரலாம். அல்லது உன்னை ஒரு அழிவிலும் கொண்டுபோய் நிறுத்தலாம். எனவே நீ எடுக்கும் தீர்மானத்தில் உன் வாழ்வின் எதிர்காலம் தங்கியுள்ளது.
உன் சொந்த புத்தியால் எடுக்கும் தீர்மானங்கள் சிலவேளை அப்போது உனக்கு சரியாக தோன்றினாலும் அது தவறானதாகப் போய்விடக்கூடும். எனவே நீ சில விடயங்களைக் குறித்து தீர்மானம் எடுக்க விளையும் போது உனக்கு மூத்தவர்களை, அனுபவசாலிகளை அணுகி ஆலோசனைகளைப் பெறுவது சிறந்ததாகும்.
ஆனால் அதற்கு மேலாக ஒன்றை தெரிந்து கொள்..............,
உன்னைப் படைத்த கடவுள் ஒருவர் நிச்சயமாக இருக்கிறார். அவர் உன் விடயத்தில் மிக மிக கரிசனையுடையவராக இருக்கிறார். நீ அவருடைய விருப்பத்திற்கு உன்னை விட்டுக்கொடுக்காமல் வாழும்போது அவரால் உன்னில் கரிசனையாயிருந்து காரியங்களை செய்ய முடியாது.
என்னைப் படைத்த கடவுள் யார்? ஏன நீ அறிந்து கொள்ள வேண்டும். அப்போதே அவரின் விருப்பத்தை உன்னால் அறியமுடியும். மனிதனாகப் பிறந்த எல்லோரையும் குறித்து கடவுள் ஒவ்வொரு நோக்கத்தை வைத்திருக்கிறார். ஆனால் நாம் சில பிழையான தீர்மானங்களை எடுத்து விடுவதால் இது சிதறிப்போகிறது. எனவே சரியான தீர்மானங்களை எடுக்க கடவுளின் உதவி நிச்சயம் தேவை.,
மனிதனைப் படைத்த கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால் அவர் நிச்சயமாக மனிதன் மேல் கரிசனையாயிருப்பார். அப்படி கரிசனையாயிருப்பாரானால் அவர் மனிதனுக்கு அவனுடைய வாழ்வில் எடுக்க வேண்டிய தீர்மானத்தை அவனுக்கு காண்பித்து அவனை சரியான பாதையில் நடத்துபவராய் இருக்க வேண்டும். ஆம் கடவுள் அப்படிப்பட்டவர் தான்.
ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், ஆலோசனை கிடைக்காத வேளைகளில் நீ அவரை அறிந்து கொண்டு, அவரை ஏற்றுக்கொண்டு ' கடவுளே இந்த விடயத்தில் நான் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்? என்று கேட்டு ஒரு குறிப்பிட்ட அவகாசம் கொடுத்துப்பார். நிச்சயமாய் அவர் உனக்கு தமது நோக்கத்தையும், நீ எடுக்க வேண்டிய தெரிவையும் காட்டுவார்.
கடவுளை கேட்டு எடுக்கின்ற முடிவுகள் தவறாகிப் போகாது. நான் சொல்ல வருவது இப்போது உனக்குப் புரியாவிட்டாலும் நீ அப்படிப்பட்ட தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலைக்கூடாக போகும்போது, நீ கைவிடப்பட்ட, தனித்துவிடப்பட்ட நிலையை அடையும் போது புரிந்து கொள்வாய். அப்போது கை கொடுக்க ஒரே ஒரு தெய்வம் இருக்கிறார். அவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா? என்னை நோக்கி கூப்பிடு, அப்போது நான் உனக்கு மறு உத்தரவு கொடுத்து நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். (எரேமியா 33: 3) என்கிறார்.
மற்றும் நீ உன் வாழ்க்கையில் எதிர்பார்த்திருக்கும் முடிவுகள் உனக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்குமா? அல்லது தீமையாக முடியுமா? ஏன நீ இப்போது அறியமாட்டாய். ஆனால் அவர் அறிவார். எனவே நீ எதிர்பார்த்திருக்கும் நன்மையான முடிவுகளை உனக்கு தருவேன் எனவும் அவர் கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவரே உலகைப் படைத்த மெய்த் தேவனாகிய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து.
நண்பனே உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் உனக்காக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத நிலையிலுள்ளவர்களின் பேச்சுக்களை செவிமடுக்காதே. உனக்காக தன் இரத்தத்தையே சிந்தி உன்னை நேசிக்கிற தெய்வத்தை நோக்கிப்பார்.
என்னைப் படைத்த உண்மையான தெய்வம் யார்? என்ற கேள்வி இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்திலும் எப்போதும் இருக்கிறது.
அந்த கேள்விக்கு பதிலைத் தேடி திருப்தியடையாத சிலர் இருந்தாலும் அவ்விடையை கண்டுபிடித்து அனுபவிக்கும் பலர் இன்னும் இருக்கவே இருக்கின்றார்கள். ஏனெனில் தம்மைத் தேடுகிற ஒருவருக்கும் கடவுள் தம்மை மறைக்க மாட்டார். நீயும் அவரை தேடினால் உன் வாழ்வின் நோக்கத்தை அவர் வெளிப்படுத்துவார்.
--------------------Robert dinesh--------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..