ஜெபிப்பவன் மேல் ஆண்டவருக்கு பிரியம் தான் , ஆனால் சிலருடைய ஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன்தான் கூறினார் .
ஒருபோதும் பாவிகளின் ஜெபத்தை அவர் அருவருப்பதில்லை. லூக்கா -18:10 இல் கூறப்படும் சம்பவத்தில் ஆயக்காரனும் பாவியுமாகிய ஒருவனின் ஜெபத்தை தேவன் அங்கீகரித்தது பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் எப்படிப்பட்ட கொடியவனாயிருந்தாலும், அவன்தேவனை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அவர் அவனுடைய ஜெபத்தை அங்கீகரிக்கிறார். ஆனால் ''நான் இரட்சிக்கப்பட்டவன்'' என்று சொல்லும் சிலருடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?
தேவனை நோக்கி ஜெபிப்பதற்கு நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றில்லை.
அப்படியானால் யாருடைய? அல்லது எப்படிப்பட்டவனுடைய? ஜெபத்தை அவர் அருவருக்கிறார்?
தேவனுடைய குணாதிசயம் என்ன தெரியுமா? அவருக்கு செவிகொடுக்காதவனுக்கு அவரும் செவிகொடுக்க விரும்புவதில்லை நான் தேவனுக்கு செவிகொடுக்கமாட்டேன் ஆனால் தேவன் எனக்கு செவிகொடுக்க வேண்டும் என்று நாம் சொல்வது எந்த வகையில் நியாயமாக முடியும்?
தேவனுடைய வார்த்தை சொல்வதை பாருங்கள் நீதி - 28: 09 வேதத்தை கேளாதபடி தன செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
இது மிகவும் பாரதூரமான, ஆபத்தான வார்த்தை. மனிதர்களால் கைவிடப்பட்டு வேறு கதியின்றி தேவனின் பாதத்தை சரணடைந்து அவரிடம் கையேந்தும் போது அவர் நம்முடைய ஜெபத்தை அருவருத்தால்……..?
தேவன் நம்முடைய ஜெபத்தை அருவருக்க ஒரேயொரு காரணமாக அமைவது நாம் அவருடைய வேதத்தை கேளாமைதான். இன்று நம்முடைய சபைகளில் போதகர் பிரசங்கிக்கும் போது தூங்கி விழுகிற ஒரு விசுவாசக் கூட்டம் உண்டு. அப்படிப்பட்டவர்கள் வேதத்தை வாசிப்பதுமில்லை, பிரசங்கியாளர்கள் பிரசங்கிப்பதை கேட்பதுமில்லை, தேவன் நேரடியாக பேசினாலும் அவருடைய மெல்லிய சத்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் உருண்டு உருண்டு ஜெபித்தாலும், தலைகீழாய் நின்று ஜெபித்தாலும் அவர்களுடைய ஜெபத்துக்கு வரும் பலன் பூச்சியமாகவே இருக்கும். அவர்களின் ஜெபம் தேவனுக்கு அருவருப்பானது.
தேவன் நம்மை அருவருப்பதை விட நமது ஜெபத்தை அருவருப்பதே மிகவும் ஆபத்தானது. அருவருப்பதென்றால் என்ன தெரியுமா? தூர்நாற்றத்தோடுகூடிய, மிகவும் அழுகிய, அசுத்தமான எதையாவது நீங்கள் போகும் வழியில் கண்டால் மூக்கையும் முகத்தையும் ஒருமாதிரி சுழித்துக்கொண்டு போவீர்களல்லவா அதுதான் அருவருப்பு. வேதத்தைக் கேளாதவனுடைய ஜெபம் அவ்வாறுதான் அருவருக்கப்படும்.
இது ஒரு விசுவாசிக்குத்தான் பொருந்தும், தேவன் தன்னை அவனுக்கு வெளிப்படுத்தியிருந்தும் அவனை இரட்சித்திருந்தும் அவன் தேவனுக்கு செவிகொடுக்க விரும்பாதவனாயிருந்தால் தேவனும் அவனுக்கு செவிகொடுக்க விரும்பமாட்டார் ,இது தேவனின் குணாதிசயம்.
ஆனால் இன்னொரு புறம் வேதத்தைக் கேளாதவனுடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கப்படாமைக்குரிய காரணம் என்னவென்று ஆராய்ந்தால்,
எபிரே - 11:06 கூறுகிறது விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமா யிருப்பது கூடாத காரியம்.
அப்படியானால் தேவனை அறிந்திருந்தாலும் அவரை விசுவாசிக்கா விட்டால், அல்லது சந்தேகப்பட்டால் அவருக்கு பிரியமானவர்களாக நாம் இருக்க முடியாது.
விசுவாசம் இங்கே முக்கியத்துவப்படுதப்படுகிறது. வேதத்தை கேட்பதன் முக்கியத்துவமும் இங்கேதான் உண்டாகிறது.
ரோமர் - 10:17 கூறுகிறது விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் அப்படியானால் விசுவாசத்திற்கு அடிப்படையே தேவனுடைய வசனத்தை கேட்பதே.
தேவ வசனத்தைக் கேட்காத ஒருவன் விசுவாசமுள்ளவனாக முடியாது, விசுவாசமில்லதவனுடைய ஜெபம் கேட்கப்படமாட்டாது.
எனவே வேதத்தை வாசிக்கவும், ஆராயவும், பிரசங்கங்களைக் கேட்கவும் விரும்பாதவர்கள் எப்படி ஜெபித்தாலும் பலனில்லை.
3 கருத்துகள்:
நன்றி
நான் காப்பி செய்யலாமா
தாராளமாக கொப்பி செய்யுங்கள் சகோதரரே. நாம் எல்லோரும் ஒரே கம்பனியில்தானே வேலை செய்கிறோம்...
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..