நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , , » இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 01)

இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 01)


இயேசுக்கிறிஸ்து உண்மையிலேயே உலக சரித்திரத்தில் வாழ்ந்த நபர் என்பதை தந்திரமாக மறைத்துவிட பலர் முயற்சித்தாலும் அதை இலகுவில் மறைக்க முடியாது. ஏனெனில் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை சரித்திரமும் புவியியல் சான்றுகளும் சாட்சியாக கூறி நிற்கின்றன. இன்றைய கால கட்டத்தின் தேவை கருதி M.S. வசந்த குமார் ஐயா எழுதிய “இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா?” என்ற புத்தகத்தை அவருடைய அனுமதியுடன் டைப் செய்து இங்கே பதிவு செய்கிறோம்.
  
இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 01)

இறைவனாகிய இயேசுக்கிறிஸ்து மனிதனாக இவ்வுலகில் பிறந்து, ஏறக்குறைய முப்பது வருடங்களின் பின் மூன்று வருட காலம் பாலஸ்தீனாவில் ஊழியம் செய்து, கடைசியில் சிலுவையிலறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, மறுபடியுமாக பரலோகத்துக்குச் சென்றார் என்பதே கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை உபதேசமாக இருந்து வருவதை நாமறிவோம்.

 எனினும் அண்மைக் காலங்களில் அச்சத்தியம் மறுத்துரைக்கப்பட்டு வருவதோடு, ஆதிக்கிறிஸ்தவ பக்தா்களது விசுவாசத்தில் உருவான ஒரு புராணத் தெய்வமே இயேசுக்கிறிஸ்து எனும் கருத்து இன்றைய உலகில் வேகமாக பரவிவருகின்றது. அது கிறிஸ்துவின் சரித்திரத் தன்மையை, அதாவது, அவர் இவ்வுலகத்தில் வாழ்ந்தார் என்பதை பொய்யாக்கும் ஒரு போதனையாக மாறி, கிறிஸ்தவ மார்க்கத்தின் அத்திவாரத்தையே அதிர வைத்துள்ளதோடு, கிறிஸ்தவத்தின் மூல உபதேசங்களை குழப்பும் வேதப்புரட்டர்களுக்கும், இயேசுக்கிறிஸ்துவை மறுதலிக்கும் கள்ளப்போதகர்களுக்கும் சார்பான ஒரு கருத்தாகியுள்ளது.

இதனால், இறைவனாகிய இயேசுக்கிறிஸ்து மானிட சரித்திரத்தில் வாழ்ந்தவர், நம் மார்க்க நூலான வேதாகமத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அவருடைய வாழ்க்கை நிஜமானது என்பதற்கான ஆதாரங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமுள்ளது.

     உண்மையில், இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்களுள் இயேசுக்கிறிஸ்து மட்டுமே வித்தியாசமான ஒரு நபராகவும் பலரது விமர்சனங்களுக்கு இலக்கானவராகவும் இருக்கின்றார். எனினும், இறைவனாகிய அவர் இவ்வுலகுக்கு வந்த சம்பவம் இவ்வுலக சரித்திரத்தையே கி.மு, கி.பி என இரண்டாக பிரித்து விட்டது. உலக சரித்திரத்தில் அவரைப்பற்றியேயன்றி, வேறொருவரைப் பற்றியும் அதிகமான புத்தகங்கள் இதுவரை எழுதப்படவில்லை. 

உலக முழுவதும் அவருடைய பெயர் பரவியுள்ளது. இன்றைய உலக ஜனத்தொகையில் முப்பது வீதத்திற்கு அதிகமானோர் இயேசுக்கிறிஸ்துவை பின்பற்றும் மக்களாக இருக்கின்றனர். எனவே இயேசுக் கிறிஸ்த ஒரு சரித்திர நபர் அல்ல, அவர் ஆதிக் கிறிஸ்தவ விசுவாசிகளின் கற்பனைத் தெய்வம் எனக் கூறுவது அர்த்தமற்றது. எனினும், இவ்வாறு தா்க்கிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதனால், இயேசுக் கிறிஸ்த இவ்வுலக சரித்திரத்தில் நிஜமாக வாழ்ந்தவர் என்பதற்கான சரித்திர மற்றும் புதைபொருள் ஆதாரச்சான்றுகளை ஆராய்வோம். 

இன்று இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி பரப்பப்படும் பொய்த் தகவல்கள் ஆதாரமற்றவை என்பதை அறிந்திடவும், உலக சரித்திரத்தில் தன் ஆரம்பத்தை கொண்டிருக்கும் கிறிஸ்தவ மார்க்கம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இவை பெரிதும்  உதவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

புரதான சரித்திர ஆசிரியர்களின் குறிப்பு!

     இயேசுக் கிறிஸ்து ஒரு சரித்திர நபர், அவர் ஒரு புராணத் தெய்வம் அல்ல என்பது உண்மையாயின், அவரைப் பற்றிய குறிப்புக்கள் மானிட கற்பனைகளில் உருவான கதைகளிலும் காவியங்களிலுமல்ல, மாறாக, உண்மைச் சம்பவங்களைக் கொண்ட உலக சரித்திரப் புத்தகங்களிலேயே இருக்க வேண்டும். இயேசுக் கிறிஸ்து உண்மையிலேயே இவ்வுலகில் வாழ்தமையினாலேயே புரதான சரித்திர ஆசிரியர்களின் குறிப்புக்களில் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. எனினும், புரதான சரித்திர நூல்களில் அவரைப் பற்றிய ஒரு சில குறிப்பக்கள் மட்டுமே இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிய அனேக விடயங்களை வேதாகமத்தில் உள்ள சுவிசேஷப் புத்தகங்கள் மூலமாகவே நாம் அறிந்துகொள்கிறோம்.

     புரதான சரித்திர ஆசிரியர்களின் குறிப்புக்களில் ஒரு சில மட்டுமே இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி நமக்கு அறியத்தந்தாலும், அவைகளில் இயேசுக்கிறிஸ்து இடம்பெற்றிருப்பது, அவர் உண்மையிலே இவ்வுலகில் வாழ்ந்த ஒரு சரித்திர நபர் என்பதற்குப் போதுமான ஆதாரமாயுள்ளது. இன்றைக்கு அனேகர் இயேசுக் கிறிஸ்துவை, மனிதர்களது மத நம்பிக்கையில் உருவான புராணத் தெய்வமாக கருதுவதனால் நாம் புரதான சரித்திர ஆசிரியர்களின் குறிப்புக்களை அறிந்திருக்க வேண்டும். இக்குறிப்புக்களை நாம் இரண்டாக பிரிக்கலாம். முதலாவது, ரோம சாம்ராட்சியத்தின் சரித்திர குறிப்புக்களாகும். மற்றது, யூத சமுதாயத்தின் சரித்திர குறிப்புக்கள். இவற்றில் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி குறிப்பிட்டுள்ளவைகளை அறிந்திருந்தால், இயேசுக் கிறிஸ்து ஒரு சரித்திர நபர் என்பதைப் பற்றிய எவ்வித சந்தேகமும் நமக்கு ஏற்படாது.

1.   ரோம சாம்ராட்சிய சரித்திர குறிப்புக்கள்.

    இயேசுக்கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், அவர் வாழ்ந்த பாலஸ்தீனா தேசம், ரோம சாம்ராட்சியத்தின் ஆளுகையின் கீழ் இருந்தது. எனவே ரோம சாம்ராட்சிய வரலாற்றாசிரியர்களுடைய சரித்திர குறிப்புக்களில் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டிருக்க வேண்டும் என நாம் எண்ணுவது இயற்கையே. எனினும் ரோம சாம்ராட்சிய சரித்திர நூல்களில்  இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி ஒரு சில குறிப்புக்கள் மட்டுமே உள்ளன. இதற்குக் காரணம், இயேசுக் கிறிஸ்து வாழ்ந்த பாலஸ்தீனா தேசம் பரந்த ரோம சாம்ராட்சியத்தின் மாகாணங்களுள் ஒன்றான சிரியாவின் ஒரு சிறு பகுதியாக இருந்ததோடு, இயேசுக் கிறிஸ்துவின் வாழ்வுச் சம்பவங்கள் இடம் பெறும் யூதேயா, கலிலேயா என்பன அக்காலத்தில் பிரபல்யமற்ற பிரதேசங்களாகவே இருந்தன. அத்தோடு, இப் பிரதேசங்களில் வாழ்ந்த யூதர்கள், ரோம சாம்ராட்சிய அரசியலில் முக்கியத்துவம் பெறாத சிறுபான்மையினராவர். எனவே, யூதர்கள் மத்தியில் வாழ்ந்த இயேசுக்கிறிஸ்துவும், ரோம வரலாற்று ஆசிரியர்களை பொறுத்தவரை, ரோம சரித்திரத்தில் இடம்பெறக் கூடியளவுக்கு பிரபலமானவராக இருக்கவில்லை. அவர்கள் சாம்ராட்சியத்தின் தலைநகரான ரோமில் இருந்த கிறிஸ்தவ சமூகத்தினரைப் பற்றி எழுதும்போதே, இச்சமூகத்தின் ஆரம்ப கர்த்தாவான இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். எனினும் இக்குறிப்புக்கள், இயேசுக்கிறிஸ்து உண்மையிலேயே பாலஸ்தீனாவில் வாழ்ந்தவர் என்பதை மறுக்க முடியாத உறுதியான ஆதாராச்சான்றுகளாய் உள்ளன.

(Tacitus) “டசிட்டஸ்
புகழ்மிக்க புராதன ரோம சாம்ராட்சிய வரலாற்றாசிரியர்களுள் (Tacitus) “டசிட்டஸ்” என்பவரும் ஒருவர். இவர் அக்காலத்தைய ரோம சாம்ராட்சிய மாகாணமான ஆசியாவில் ஆளுநராக பணிபுரிந்தார். இவரது சரித்திர நூல், கி.பி. 115 அளவல் எழுதப்பட்டதாகும். “உலகிலேயே மிகவும் நம்பகமான ஒரு புரதான சரித்திர ஆசிரியராக டசிட்டஸ் கருதப்படுகின்றார். 

இவர் தன் காலத்தைய சரித்திரத்தை சரிவர ஆராய்ந்து, பிழையின்றி எழுதியுள்ளதாக ஆராட்சிகள் அறியத்தருகின்றன.” இவர் எழுதிய நூல்களில், இரு மூலப் பிரதிகள் மட்டுமே இக்காலத்தவருக்கு கிடைத்துள்ளன. இது அவர் எழுதிய சரித்திரங்களின் அரைப்பகுதி மட்டுமே.” 

இதில் கி.பி. 64 ஆம் ஆண்டில் ரோமில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள பகுதியில், கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி எழுதப்பட்டுள்ளது. இத்தீவிபத்துக்கு காரணம், அச்சமயம் ரோம சக்கரவத்தியாக இருந்த “நீரோ” எனும் மன்னனே என பொதுவாக நம்பப்படுகிறது. ரோம் நகருக்கு தீக்கொழுத்திய நீரோ தீச்சுவாலைகளையும், அதனால் மக்களக்கு ஏற்பட்ட அல்லல்களையும் கண்டு ஆனந்தமடைந்ததாக பாராம்பரியம் கூறுகிறது.

ரோம் நகரம் தீப்பற்றியெரிந்தமைக்கு எவரும் தன் மீது குற்றம் சாட்டிவிடக்கூடாது என்பதற்காக. நீரோ ரோமிலிருந்த கிறிஸ்தவர்களே நகருக்கு தீ வைத்தனர் எனும் வதந்தியை பரப்பிவிட்டு அவர்களை கடுமையான முறையில் தண்டித்தான். 

இதைப் பற்றி வரலாற்றாசிரியர் டசிட்டஸ் எழுதும் போது, “கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படும் மக்களே தீவிபத்துக்கு காரணம் எனும் வதந்தியை பரப்புவதற்காக நீரோ அவர்களுக்கு கொடிய தண்டனைகளை கொடுத்தான். இச்சமூகத்தவரது ஆரம்ப கா்த்தா கிறிஸ்து என்பவர். இவர் தைபீரியாசினுடைய காலத்தில் பொந்தியு பிலத்துவினுடைய தீா்ப்பின் படி மரண தண்டனை அனுபவித்தார்” என குறிப்பிட்டுள்ளனர். 

தைபீரியஸ் கி.பி. 14முதல் 37 வரை ரோம சக்கரவத்தியாக இருந்தவன். பொந்தியு பிலாத்து கி.பி. 26முதல் 36 வரை ரோம சக்கரவர்த்தியாக யூதேயாவை ஆண்டான். “ ரோம வரலாற்றாசிரியரான டசிட்டசினுடைய இக்குறிப்பு, அக்காலத்தை உலக சரித்திரத்தில் இயேசுக்கிறிஸ்து இடம் பெற்றுள்ளதான உறுதியான ஆதாரமாயுள்ளது.”

    
இயேசுக்கிறிஸ்து ஒரு சரித்திர நபர் என்பதை இன்னுமொரு ரோம சாம்ராட்சிய வரலாற்றாசிரியருடைய நூலும் அறியத் தருகிறது. “(Suetonius)சோட்டோனியஸ்” எனும் இவ் வரலாற்றாசிரியர் கி.பி 120 அளவில் ரோம சக்கரவர்த்திகளின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய ஒரு சரித்திர நூலை எழுதினார். (Lives of the Caesars) 

ரோம சக்கரவர்த்தியான கிலவுதிராயனுடைய ஆட்சிக் காலத்தில், யூதர்கள் ரோமிலிருந்து வெளியேற்றப்பட்டதைப் பற்றி அவர் குறிப்பிடும் போது, “கிறிஸ்து எனும் ஒருவன் காரணமாக யூதர்கள் மத்தியில் கலகம் ஏற்பட்டது. இதனால் கிலவுதிராயன் யூதர்கள் அனைவரையும் ரோமைவிட்டு வெளிறேறும்படி கட்டளையிட்டான்” என குறிப்பிட்டுள்ளார். 

கி.பி. 49 அளவில் நடைபெற்ற இச்சம்பவம் பற்றி அப்போஸ்தலர் 18.2 அலும் நாம் வாசிக்கலாம். “இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட யூதர்களை மற்றைய யூதர்கள் துன்புறுத்தியமையினாலேயே இக்கலகம் ஏற்பட்டது. “இச் சரித்திர குறிப்பு, இயேசுக்கிறிஸ்த மானிட சரித்திரத்தில் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாயுள்ளது எனபதை மறுப்பதற்கில்லை.” 

(Pliny) ப்லினியஸ்”
ரோம சாம்ராட்சியத்தில் “ட்ராஜன்” எனபவன் சக்கரவா்த்தியாக இருக்கும் போது (Pliny) ப்லினியஸ்” என்பவர் கி.பி. 111 இல் ரோம சாம்ராட்சியத்தின் மாகாணமான பித்தினியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சக்கரவா்த்திக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார். “இவருடைய கடிதங்கள், இலக்கிய தரம் வாய்ந்தனவாக இருப்பதோடு, இவர் உலகிலேயே மிகவும் பிரபலமான கடித எழுத்தாளராகவும் கருதப்படுகின்றார்.”

 இவர் சக்கரவா்த்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தன் ஆட்சிப் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களை எவ்வாறு தண்டிப்பது என்று சக்கரவர்த்தியிடம் ஆலோசனை கேடடிருந்தார். அக்காலத்தில், மக்கள் ரோம சக்கரவர்த்தியையே தெய்வமாக வேண்டியவர்களாய் இருந்தனர். கிறிஸ்தவர்கள் சக்கரவர்த்தியை வழிபடாதமையினால் அவர்களுக்க என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை அறியாத ப்லினியஸ், சக்கரவர்த்திக்கு எழுதிய கடிதத்தில், “கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுபவர்கள் வாரத்தில் ஒரு நாள் ஓர் இடத்தில் கூடி கிறிஸ்து எனும் ஒருவரை தெய்வமாக கருதி அவருக்கு பாடல்களை பாடுகின்றனா்” என குறிப்பிட்டுள்ளார். 

“ இயேசுக்கிறிஸ்து சரித்திரத்தில் வாழ்ந்தவர் என்பதை உறுதியாக நம்பி, அவரை வழிபட்ட மக்கள் அக்காலத்தில் இருந்துள்ளதை இக்கடிதத்தின் மூலம் அறிந்திடக்கூடியதாயுள்ளது.” (01.06)

(Lucian) லூசியன்
ரோம சாம்ராட்சியத்தில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த (Lucian) லூசியன் என்பவன் கிறிஸ்தவர்களை நிந்தித்து பேசியவன். இவன், இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி எழுதும் போது, “உலகுக்கு ஒரு புதிய மார்க்கத்தை அறிமுகப்படுத்தியமையினால் இயேசுக்கிறிஸ்து என்பவன் பாலஸ்தீனாவில் சிலுவையிலறையப்பட்டான்” என குறிப்பிட்டுள்ளான். (Passing of Peregrinus) 

இயேசு கிறிஸ்துவை நிந்தித்த இந்த மனிதன் கூட, இயேசுக்கிறிஸ்து இவ்வுலகில் வாழவில்லை எனக் கூறவில்லை. மாறக, அவர் பாலஸ்தீனாவில் வாழ்ந்ததாகவே அவனுடைய குறிப்பு உள்ளது. “இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லாதவர்களும், கிறிஸ்தவ மார்க்கத்தை கடுமையாக எதிர்த்தவர்களும் கூட இயேசுக் கிறிஸ்துவின் வாழ்வையும் மரணத்தையும் சரித்திர சம்பவங்களாகவே கருதியுள்ளதை இக்குறிப்பிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.” முதலிரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்தின் பரம எதிரிகள் கூட, இயேசுக் கிறிஸ்து பாலஸ்தீனாவில் வாழ்ந்ததை மறுதலிக்கவில்லை.” (01.10) இது இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபர் என்பதற்கு போதுமான ஆதாரமாகவே உள்ளது.

ரோம சாம்ரட்சிய சரித்திர குறிப்புக்களில், இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி ஒரு சில குறிப்புக்களே உள்ள போதிலும். இதனை எழுதியவர்கள், இயேசுக் கிறிஸ்து உண்மையிலேயே யார் என்பதை அறிந்தவர்களே. அவர்களுடைய குறிப்புக்கள் முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் ரோம சாம்ராட்சியம் முழுவதும் பரவியிருந்தது என்பதையும், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஆரம்ப கர்த்தாவான இயேசுக்கிறிஸ்து மானிட சரித்திரத்தில் வாழ்ந்தவர் என்பதை அம் மார்க்கத்தின் எதிரிகள் அங்கீகரித்திருந்தனர் என்பதையும் அறியத் தருகின்றது. 

உண்மையில் “இயேசுக் கிறிஸ்து ஒரு கற்பனை கதாப்பாத்திரம் எனக் கூறுபவன்” ரோம சக்கரவர்த்திகளையும் அவ்வாறே கருதவேண்டும். ரோம சக்கரவா்த்திகளை சரித்திர மனிதர்களாக சித்தரிக்கும் ரோம சரித்திர ஆசிரியர்கள் இயேசுக்கிறிஸ்துவை ஒரு சரித்திர நபராகவே கருதியுள்ளனர். “ரோம சரித்திர குறிப்புக்களில் ஒன்றுகூட, இயேசுக்கிறிஸ்து ஒரு சரித்திர நபர் இல்லை எனும் எண்ணத்தை தோற்றுவிப்பதில்லை.” அனைத்தும் அவர் ஒரு சரித்திர நபர் என்றே சாட்சி பகிர்கின்றன. 
தொடரும்........
Share this article :

6 கருத்துகள்:

Colvin சொன்னது…

சகோதரர்களே இக்கட்டுரையை நானும் டைப் செய்ய ஆயத்தமாகி பல தேடுதல்களின் பின்னர் கொழும்பு இறையியல் கல்லூரியிலிருந்து கிடைக்கப் பெற்றிருந்தேன். இக்கட்டுரையை தமிழ் கிறிஸ்தவர்கள் மற்றும் எனது தளங்களில் உபயோகிக்க முடியுமா? அல்லது நானும் உங்களுக்கு உதவியாக இதன் பிற்பகுதியை டைப் செய்து உதவட்டுமா?

robert dinesh சொன்னது…

ஐயா உங்கள் சிறந்த உள்ளத்துக்கு நன்றிகள். நான் இதனை தொடர்ந்து வரும் இன்னும் கொஞ்ச பகுதியை டைப் செய்து விட்டேன்.அதனை இரண்டாம் பகுதியாக பதிவிடுகிறேன். நீங்கள் இந்த இரண்டு பகுதிகளையும் copy செய்து உங்கள் தளத்திலும் பதியுங்கள்.அதனை தொடர்ந்து வரும் பகுதிகளை டைப் செய்யுங்கள். அவற்றை நான் கொப்பி செய்து எனது தளத்தில் பதிவிடுகிறேன். இக்கட்டுரை இரண்டு தளங்களிலும் இருப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

புத்தகத்தில் “புதை பொருள் ஆராய்ச்சியாளர்களின் குறிப்புகள்” என்று தொ்டங்கும் பகுதியிலிருந்து நீங்கள் டைப் செய்தால் போதுமானது.அதற்கு முன் உள்ளவற்றை நான் டைப் செய்து முடித்து விடுவேன்.

மேலும் புத்தகத்தில் உள்ளவற்றில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என வசந்த குமார் ஐயா கூறியுள்ளார். எனவே மாற்றங்கள் இன்றி டைப் செய்யவும். நன்றி

Unknown சொன்னது…

இயேசு கிறிஸ்துவின் வரலாறு ஒரு புராண கதை தான் என்று சொல்லும் இவ்வுலக பாவிகளுக்கு ஒரு நல்ல தொகுப்பு குடுத்தமைக்கு மிக்க நன்றி...

thiyaga,, சொன்னது…

இயேசுவை உயர்த்துகிறவர்களை தேவன் உயர்த்துவார்..

பெயரில்லா சொன்னது…

ARUMAI , YESU UNGALI AASIRVATHIPAARAAGA

பெயரில்லா சொன்னது…

Thank you brother

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்