நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம்

உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம்



இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப் பதற்காக பத்து இளைஞர்களை ஒரு அறையில் அமரவைத்தார்கள். அந்த அறையில் இருந்த கரும்பலகையில் மூன்று கோடுகள் வரையப் பட்டிருந்தன. நீளமாக ஒன்று, அதைவிடச் சிறி தாக இன்னொன்று, மிகவும் சிறிதாக மூன்றாவது.

அந்த அறையிலிருந்த பத்து இளைஞர்களில் ஒன்பது பேருக்கு ரகசியமாய் ஒரு செய்தி தரப்பட்டிருந்தது. வரையப்பட்டிருக்கும் கோடு களில் பெரிய கோடு எது என்று கேட்டால் இரண்டாவது பெரிய கோட்டைக் காட்ட வேண்டும் என்பதே அது. ஆனால் இந்த ரகசிய
ஏற்பாடு பத்தாவது நபருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

பயிற்சியாளர் வந்து அவர்கள் முன் நின்றார். இந்த கரும்பலகையில் வரையப்பட்டிருக்கும் கோடுகளில் பெரிய கோடு எது என்று கேட்டார். அறையிலிருந்த அனைவருமே இரண்டாவது பெரிய கோட்டைக் காட்டி அது தான் பெரிய கோடு என்றார்கள். 

பத்தாவது நபருக்கு ஆச்சரியம் ! இதெப்படி முதல் கோடுதானே பெரியது ? ஏன் இரண்டாவது கோட்டைக் காட்டுகிறார்கள் ? அல்லது என் பார்வையில் ஏதேனும் திடீர் பழுதா ? குழம்பிக் கொண்டிருந்தவரைப் பார்த்து பயிற்சியாளர் கேட்டார்.

!எது பெரிய கோடு ? முதலாவதா, இரண்டாவதா அல்லது மூன்றாவது கோடா?. அந்த இளைஞர் சில வினாடிகள் மெளனமாய் நின்றான். பின் சொன்னான். இரண்டாவது கோடுதான் பெரியது !.

இன்றைய இளைஞர்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் பலவேளைகளில் வருவதில்லை. கூடியிருப்பவர்கள் தவறுசெய்தால் அந்த தவறோடு ஒன்றிப் போய்விடும் பழக்கம் உடையவர்களாகத் தான் அவர்கள் பலவேளைகளில் இருக்கிறார்கள்.

தம்முடைய செயல்களை நிர்ணயம் செய்ய அடுத்தவர்களின் செயல்களை ஒப்பீடு செய்கிறார்கள். சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு பைனான்சியரிடம் பணம் போட்டிருந்தால் இவர்களும் போடுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து தோற்றுப் போவது தனியாய் தோற்றுப் போவதை விட நல்லது என்று கருதுகிறார்கள்.

இந்த தயக்கமும், உண்மையை உண்மை என்று தானே ஒத்துக் கொள்ள மறுக்கின்ற மன பலகீனமும் சமுதாயத்தின் சரிவுகள். இவை சமுதாயத்தைச் சரிசெய்யும் இளைஞனின் பணியை வெகுவாகப் பாதிக்கின்றன.

இறைவன் நம்மை அவருடைய சாயலாகப் படைத்தார். கடவுள் வார்த்தை வடிவமானவர். எல்லாரிலும் இறைவன் இருக்கிறார் என்பதை பறைசாற்றவே ஆணும் பெண்ணுமாக இரண்டு மனிதர்களைப் படைத்த கடவுள் அவர்களைத் தன் சாயல் என்கிறார். இறைவன் சாயல்களுக்கு அப்பாற்பட்டவர் அவருக்கு அனைவரின் சாயலும் இருக்கிறது என்பதை இறை வார்த்தை நமக்கு விளக்குகிறது. எனில், இறைவனின் சாயலாக இருக்கும் நாம் ஏன் தயங்குகிறோம் ?

உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம் ஒருவகை என்றால், தவறிழைத்தால் நான் தவறுசெய்தேன் என்று ஒத்துக் கொள்தல் அதைவிடப் பெரிய நிலை. பிறருடைய விமர்சன அம்புகளோ, ஏளன வார்த்தைகளோ நம்மை சவக்குழிக்கு அனுப்புவதில்லை என்னும் உள்ள உறுதி உடையவர்களே நிமிர்ந்து நிற்கிறார்கள்.

நாம் எப்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம் ? நம்மைச் சுற்றி இருப்பவர்கள் செய்வதை நாமும் செய்கிறோமா ? இல்லை எது சிறந்ததோ, எது சரியானதோ அதைச் செய்கிறோமா ?. சுற்றியிருப்பவர்கள் தவறான திசையை நோக்கிச் செல்கிறார்கள் எனில் சரியான திசை தெரிந்திருந்தாலும் நாம் தவறான திசைக்குச் செல்லத் துணிவோமா ?

இயேசு துணிச்சலாய் இருந்தார். சதிகாரர்களில் சபையில் துணிச்சலுடன் சத்தமிட்டார். ஆலயத்தில் கடைகளை விரித்திருந்தவர்களிடம் ‘இது என் தந்தையில் இல்லம். கடைவிரிக்கும் இடமல்ல’ என்று கர்ஜித்தார். தன் உயிரைப் பறிக்கும் அதிகாரம் படைத்த அரசனிடமும், நான் கடவுளின் மகன். என்று துணிந்து சொன்னார். சிலுவைச் சாவு குறித்த அச்சத்தில் நான் தச்சன் மகன் தான் கடவுளின் மகன் அல்ல என்று கதறவில்லை.

துணிச்சல். உண்மைக்குச் சான்று பகரும் துணிச்சல். இதைத் தான் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். ‘உண்மைக்குச் சான்று பகர்தலே எனது பணி’ என்ற இறைவாக்குக்கு ஏற்ப துணிந்து நிற்க முயல்வோம். கூடியிருப்பவர்கள் விஷம் குடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் குடிக்க வேண்டியதில்லை. எது நல்லது எது அல்லது என்பதைப் பகுத்தறியும் வலிமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நம்மைப் பார்த்து இயேசு சொல்கிறார் ...

‘கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்’
                                                                                                  {நற்செய்தி தள கட்டுரை}
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்