உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் (சங்.51:11).
சகல ஜாதியாரையும் சீஷராக்கும்படி இயேசு கட்டளையிட்டபோது, புது விசுவாசிகளைப் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானப்படுத்தவேண்டும் என்றும் கூறினார்.
தேவன் யாரென்றும், அவருடைய தன்மையும் இயல்புகளும் பண்புகளும் எவைகளென்றும் இந்த மூன்று நாமங்களும் மிகத்தெளிவாக விளக்குகின்றன.
பழைய ஏற்பாட்டில் தேவன் பிதா என்று பலதடவைகளில் அழைக்கப்படுகிறார். எனவே அவர் நம்முடைய பட்சத்திலிருக்கிறார். சுவிசேஷங்களில் நம்மோடிருக்கும் தேவனாக இயேசுவைச் சந்திக்கிறோம். அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்திலிருந்து தேவனை நமக்குள்ளிருக்கும் பரிசுத்த ஆவியாக அறிகிறோம்.
கிறிஸ்துவின் பின்னடியார்கள் ஒவ்வொருவரும் தேவன் நம்முடையவர், தேவன் நம்மோடிருக்கிறவர், மேலும் அவர் நமக்குள்ளிருக்கிறவர் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுவது மிகவும் முக்கியம்.
பரிசுத்தஆவி ஏதோ ஒரு சக்தியென்று பலரும் பேச நான் கேட்டிருக்கிறேன். பரிசுத்தஆவி வல்லமையுள்ளவர் என்பது உண்மையாயினும், அவர் வல்லமையின் மூலாதாரத்தைவிடக் கூடுதலானவர். பல வேளைகளில் பரிசுத்தஆவி அஃறிணையில், அதாவது "அது" என்று குறிப்பிடப்படுகிறார். அவரை அவ்வாறு உயிரற்றவராகக் கருதக்கூடாது. ஏனெனில் அவர் தேவன்.
பிதா குமாரன் பரிசுத்தஆவியில் நான் விசுவாசிப்பதால் நான் மூன்று தேவர்களை விசுவாசிக்கிறேன் என்று அநேக ஆண்டுகளுக்குமுன் ஒரு மனிதன் என்னைக் குற்றஞ்சாட்டினார். அதற்கு மாறுத்தரமாக, நான் சில கேள்விகளைக் கேட்டேன்.
உங்கள் வாழ்க்கையில் ஆவி என்று ஒரு அம்சம் உண்டா? என்ற என் கேள்விக்கு ஆம் என்று அவர் உடனடியாகப் பதிலளித்தார்.
அந்த அம்சம் உங்கள் சரீரத்திலிருந்து வேறுபட்டதுதானா என்று கேட்டேன். நிச்சயமாகவே அப்படித்தான் என்றார் அவர்.
உங்களுடைய சரீரத்துக்கும் ஆவிக்கும் அப்பால் உங்களில் புத்தியும் உணர்ச்சியுமுண்டா? என்று கேட்டேன். அதற்கும் அவர் அப்படித்தான் என்றார்.
அப்போது நான் அவரைப் பார்த்து, அப்படியானால் நீங்கள் மூன்று பேராயிருக்கிறீர்கள்; நான் உங்கள் ஆவியோடும் உணர்ச்சிகளோடும் பேசும்போது உங்கள் சரீரம் இங்கிருந்துச் செல்லலாமென்று கூறினேன். அவர் குழப்பமடைந்தவராய், நீங்கள் அவ்வாறு சொல்லக்கூடாது; அந்த மூன்று அம்சங்களும் சேர்ந்துதான் நானாயிருக்கிறேன். அவைகளை பிரிக்கமுடியாது என்று கூறினார்.
அப்போது அவருக்குள் ஒரு ஒளி தோன்றியது; நான் தேவனுடைய தன்மையைக் குறித்துக் கூறியதைப் புரிந்துகொண்டார்.
தேவனில் மூன்று வெவ்வேறு அம்சங்களிருந்தபோதிலும் அவர் ஒருவரே.
அந்த ஒவ்வொரு அம்சமும் அவருடைய வெவ்வேறு தன்மைகளைக் காண்பிக்கின்றன. ஜீவிக்கிறவரும் சத்தியமுமான தேவன் ஒருவரே. ஆனால், அவர் தன்னைப் பிதாவாகவும் குமாரனாகவும் பரிசுத்த ஆவியாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய அம்சமே நமக்குள் வாசம்பண்ணுகிறார். ஆகையால்தான் தாவீது, உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் என்று கதறினார்.
தாவீது பரிசுத்த தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்; எனவே, அவருடைய பிரசன்னத்தை இழந்துபோவோமென்று அச்சங்கொண்டார்.
நமக்குள் வசிக்கிறவர் நமக்கு வெற்றியளிக்கக்கூடியவர். ஆகையால்தான் வேதம் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1யோவா.4:4) என்று கூறுகிறது.
நமக்குள் வசிக்கிறவரை நாம் சாரும்போது, சாத்தானும் நரகத்தின் சகல சத்துவங்களும் நமக்கு எதிர்த்து நிற்கமுடியாது. அகிலாண்டத்தைப் படைத்த ஆண்டவரே உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார். பரிசுத்த தேவன் உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் வாசம்பண்ணத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பது எத்தனை அற்புதமானது! அந்தத் தேவனை பரிசுத்த ஆவியாக அறிந்துகொள்ளுங்கள்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..