ஒரு தோட்டக்காரனிடம்
இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி
மரக்கன்றுகள் இருந்தன. அவைகளை தன் தோட்டத்தில்
நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்.
அந்த
இரண்டு பப்பாளி கன்றுகளில்
ஒன்று அதை விரும்பவில்லை. ஐயோ அந்த தோட்டத்திலா
நான் நிற்க வேண்டும்? அழுக்கான
அந்த சேற்று நிலம்! அங்கு
நிற்கும் அழகற்ற மரங்கள்!... இவற்றை நினைக்கும் போது அந்த பப்பாளிக் கன்றுக்கு
குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக
அந்த நடு வெயிலில் காலகாலம்
வாழ வேண்டுமே என்பதை நினைத்து வேதனைப்பட்டது.
எனவே தோட்டக்காரரிடம் கெஞ்சியது, ''ஐயா என்னால் அந்த
வெயிலையும், அந்த உபத்திரவம் நிறைந்த
தோட்டத்து சூழலையும் தாங்க முடியாது. தயவு
செய்து என்னை வீட்டுக்குள் ஓர்
தொட்டியில் நட்டு விடுங்கள்'' என்று
அடம் பிடித்தது.
மற்றைய பப்பாளிக் கன்றோ தோட்டக்காரரின் விருப்பத்துக்கு இணங்கியது தோட்டக்காரனும் அடம் பிடித்த கன்றை வீட்டினுள் ஒரு தொட்டியிலும் மற்றைய கன்றை அழுக்கு நிலமான அந்த தோட்டத்திலும் நட்டுவிட்டார்.
நாட்கள் சென்றன தோட்டத்தில் வைத்த கன்று அழுக்கையும் வெயிலையும் சகித்துக்கொண்டு நன்கு புஷ்டியாக வளர்ந்தது. மற்ற கன்றோ வெயிலும், சேறும் இல்லாததைக்குறித்து சந்தோஷ ப்பட்டாலும் வெயில், பசளை என்பன போதியளவு இன்மையால் நன்கு வளர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது. அதன் இலைகள் சுருண்டன, அதன் உடல் மெலிந்தது. கனி கொடுக்கும் காலமும் வந்தது. தோட்டத்தில் இருந்த பப்பாளி மரம் மிகவும் பெரிதும் இனியதுமான கனிகளைக் கொடுத்தது. வீட்டுக்குள் நின்ற பப்பாளி மரத்தால் கனி கொடுக்க முடியவில்லை. குட்டிக்குட்டி கனிகளையே கொடுக்க முடிந்தது. தன்னுடைய நிலமையையும் தன்னுடைய கனிகளையும் பார்த்து தானே வெட்கப்பட்டுக் கொண்டது.
''வெயிலை வெறுத்தவன் வாழ்க்கை'' என்பது இதுதான் பிரியமானவர்களே. மரத்தின் வாழ்வில் வெயிலும் சேறும் தேவை யானது போலவே மனிதனின் வாழ்வில் உபத்திரவமும் வலியும் அவசியமானது.
அழகான
ஒரு கவிதையில் நான் ரசித்த வரிகள்
இவை "முள்முடி இல்லாமல் பொன்முடி இல்லை, சிலுவை இல்லாமல்
சிங்காசனம் இல்லை"
தேவ
பிள்ளையே உன் வாழ்க்கையில் தொடர்
உபத்திரவமா, கலங்காதே. உபத்திரவத்தின் குகையை நீ கடந்து வரும்
போது , அந்த குகையை கடந்ததற்கான பரிசுடன் இயேசப்பா உன்னை வரவேற்பார் உபத்திரவத்தின்
முடிவில் ஏதோவொரு மிகப்பெரிய ஆசீர்வாதம்
உனக்கு உண்டு.
ரோமர் -08 :18 ''ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்''.
எனவே உபத்திரவத்தின் குகையை விட்டு வெளியே
ஓடிவிடாதே. பொறுமையோடே அந்த குகையை கடந்தால்தான்
நீ அந்த பரிசை பெறலாம்.
மேலும்
ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்
உபத்திரவத்தையும், வேதனையையும் ஒரு போதும்
நீங்கள் தனியே சுமக்கப் போவதில்லை உங்களுடன்
பரிசுத்த ஆவியானவர் துணையாக இருக்கிறார்.
ரோமர்
- 08 :26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம்
ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டி யதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்,
ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக
வேண்டுதல் செய்கிறார்.
மனதில்
வேதனை பெருகி துக்கம்
தொண்டையை அடைக்கும் போது நம்மை அறியாமலே
ஒரு பெருமூச்சு விடுகிறோம். நமக்காக நமது அப்பாவும் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா?
ரோமர்
-08 : 28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய் தேவனிடத்தில்
அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று
அறிந்திருக்கிறோம்.
நம் வாழ்வில் என்ன நடந்தாலும் நமது
நன்மைக்காகவே நடக்கிறது. உபத்திரவம் வந்த போது யோபு
என்ன செய்தான் என்று கவனியுங்கள்
யோபு -01:21 நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.
அவன் ஸ்தோத்திரம்
செலுத்தினான். தேவன் உங்களை நடத்திச் செல்லும் உபத்திரவத்தின் பாதை ஏதோ ஒரு
நன்மைக்குதான். யாரும் அனுபவிக்காத உபத்திரவத்தை அனுபவிக்கிறேனே என்று அழு கிறீர்களா? கலங்காதீர்கள் அந்த பாதைக்காக தேவனை ஸ்தோத்தரியுங்கள் .
யாரும் பெறாத பரிசை இந்த இம்மை வாழ்வில் பெறுவீர்கள்.
உபத்திரவ குகையை
விட்டு வெளியே ஓடிவிட்டால் உங்களால் தேவனது பரிசை பெறவும் முடியாது, தேவன்
விரும்பும் கனியை கொடுக்கவும் முடியாது. உங்களுக்கு வரும் உபத்திரவத்தை,
தோட்டத்தில் நடப்பட்ட பப்பாளிக்கன்று போல சகித்துக் கொண்டால் அழகும் புஷ்டியுமாக வளர்ந்து கனி கொடுப்பீர்கள் . இல்லாவிட்டால் மெலிந்து கனியின்றிப் போவீர்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
----------------------------------------------------------------------- By T.Dinesh -----------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..